September 26, 2021

தற்கொலை ?! -ஸ்டீபன் ஹாக்கிங் மீண்டும் பேட்டி!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (வயது 73). அங்குள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். ‘காஸ்மாலஜி’ என்னும் அண்டவியல் மற்றும் ‘குவாண்டர் கிரேவிட்டி’ என்றழைக்கப்படும் குவாண்டர் ஈர்ப்பு பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். “இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு அவ்வளவு பெரிய பிரமாண்டமான வெற்றிடம் இருந்தது. எனவே யாரும் வந்து பூமியை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம். இது முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே. சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சம், சுயம்புவாக உருவானது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. நமது பிரபஞ்சத்தின் அன்றைய நிலை, இன்றைய நிலை, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடிவது என அனைத்துக்குமே ஏதாவது ஒரு காரணம் உள்ளது. எதுவுமே மர்மம் இல்லை. எல்லாமே அறிவியல் சார்ந்தது.பிரபஞ்சம் தானாக உருவாகவில்லை, அதை உருவாக்கியவர் கடவுள்தான். கடவுளின் சக்திதான் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்பது தவறு, அது சாத்தியமில்லை. கடவுள் வந்து தொட்டுக் கொடுத்து ‘ஏ பிரபஞ்சமே உருவாகு’ என்று கூறினார் என்று சொல்வது அபத்தமானது” என்று உறுதிபட சொல்லியிருந்தார்
stephan
தற்போது ஸ்டீபன் ஹாக்கிங் பேசும் திறனை இழந்து விட்டதுடன், முடக்குவாத நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்காக தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக நாற்காலி ஒன்றுதான் அவரது உலகம் ஆகி விட்டது. இருப்பினும், இந்த நிலையிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் ஆராய்ச்சி இயக்குனராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து தனது துறை சார்ந்த ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார். இப்போது கணினி சார்ந்த கருவி ஒன்றின் துணையுடன் பேசி வருகிறார்.

ஸ்டீபன் ஹாக்கிங், ‘முடங்கிப்போன நோயாளிகள் மற்றவர்களின் துணையுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என்று ஏற்கனவே கடந்த ஆண்டு பி.பி.சி.க்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், 1980–களின் மத்தியில் ‘டிரகெஸ்டமி’ என்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது, சுவாசிக்காமல் இருந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன், ஆனால் சுவாசிக்க வேண்டும் என்ற தாக்கம் மிகவும் வலிமையானதாக இருந்து விட்டதால் அந்த முயற்சி பலிக்கவில்லை என கூறி பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் தற்போது அவர் பி.பி.சி. டெலிவிஷனுக்கு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரும், டி.வி. பிரபலமுமான டாரா ஓ பிரையனுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். வரும் 15–ந் தேதி ஒளிபரப்பாக உள்ள அந்த பேட்டியில் அவர்,”ஒருவரை அவரது விருப்பத்தை மீறி, உயிருடன் வைத்திருப்பது என்பது அவர்களது கண்ணியத்துக்கு இழைக்கப்படுகிற அதிகபட்ச இழுக்கு என்றே கருதுகிறேன்.

நான் மற்றவர்களுக்கு சுமையாகி, மிகப்பெரும் வலியை உணர்ந்தாலோ அல்லது இனி நான் பங்களிப்பு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கண்டாலோ, மற்றவர்களின் துணையுடன் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறப்பேன்.நான் இன்னும் நிறைய கண்டுபிடிக்க வேண்டியது இருக்கிறது.

மற்றவர்களுடன் எளிதாக பேசி தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடிவதில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது.பல நேரங்களில் நான் தனிமையில் தவிக்கிறேன். மக்கள் என்னிடம் வந்து பேசுவதற்கும், என்னிடம் இருந்து பதில் பெறுவதற்காக காத்திருக்கவும் பயப்படுகின்றனர்.

சில நேரங்களில் நான் வெட்கப்படுகிறேன். இன்னும் சில நேரங்களிலோ தளர்ச்சி அடைகிறேன். என்னை தெரியாதவர்களுடன் பேசுவதற்கு எனக்கு கஷ்டமாக இருக்கிறது”என்று கூறினார்.