தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் 144 தடை!

:சமூக நல்லிணக்கத்தையும், பொதுஅமைதியையும் போற்றி பாதுகாக்கும் கடமை கொண்டுள்ள மாவட்ட நிர்வாகம் தர்மபுரி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144(1)-ன்கீழ் மீண்டும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.” என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் அறிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நத்தம் காலனி உள்ளிட்ட கிராமங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 4-ந்தேதி நத்தம் காலனியை சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் இளவரசன் என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார். இதனால் பொதுமக்களிடையே சாதி சார்ந்த கசப்புணர்வு உள்ளார்ந்துள்ள நிலையில் பல்வேறு போராட்டங்களையும், மனித உயிருக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் நிகழ்வுகளையும் கட்டுப்படுத்த குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144(1)-ன்கீழ் ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முடிவடைந்துள்ளது.
sep 6 - dharmapuri map
இந்தநிலையில் பொதுமக்களிடையே சமூக நல்லிணக் கத்தை மீண்டும் ஏற்படுத்தவும், பொது அமைதியை பாதுகாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சாதி சார்ந்த கசப்புணர்வு முழுமையாக நீங்காத நிலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்களிடையே சமூக மற்றும் சாதி சார்ந்த அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பொது கூட்டங்கள், ஊர்வலங்கள், மேடை பேச்சுகள் மற்றும் பிற உத்திகளை கையாளும் பட்சத்தில் சாதி சார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு பொதுஅமைதிக்கு சீர்குலைவு மற்றும் பங்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் முயற்சிகளை தடுத்து சட்டம்-ஒழுங்கினை பாதுகாக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில் சமூக நல்லிணக்கத்தையும், பொதுஅமைதியையும் போற்றி பாதுகாக்கும் கடமை கொண்டுள்ள மாவட்ட நிர்வாகம் தர்மபுரி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144(1)-ன்கீழ் மீண்டும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே தர்மபுரி மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், ஊர்வலம், சாலைமறியல் மற்றும் பொதுமக்களின் அமைதியை குலைக்க வாய்ப்புள்ள எந்தவித செயல்களும் மேற்படி சட்டப்பிரிவின்கீழ் தடை செய்யப்படுகிறது.

மேலும் பொதுக்கூட்டங்கள், ஊர்வலம், சாலைமறியல் ஆகியவற்றை நடத்தவும், அவற்றில் பங்கேற்கும் உத்தேசத்துடனும் எவரும் தர்மபுரி மாவட்டத்திற்குள் நுழைவதும் 5-ந்தேதி(நேற்று) முதல் தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட தடை உத்தரவில் இருந்து அரசு அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.” என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.