October 22, 2021

தமிழகத்தைச் சேர்ந்த அர்ச்சனா ஐ பி எஸ் -எல்லை ஆயுதப் படையின் தலைமை இயக்குநரானார்!

தமிழகப் பிரிவைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் பெண் உயரதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம். தமிழக காவல் துறையில் கூடுதல் டிஜிபியாக இருந்த போது மத்திய அரசுப் பணிக்கு 2014-ஆம் ஆண்டில் மாற்றலாகி சிபிஐயில் கூடுதல் இயக்குநராகச் சேர்ந்தார். இதன் மூலம் சிபிஐ கூடுதல் இயக்குநரான முதலாவது பெண் ஐபிஎஸ் உயரதிகாரி என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. இந்த நிலையில், மாநில அரசால் விடுவிக்கப்படும் முன்பே மத்திய அரசுப் பணியில் அவர் சேர்ந்ததாகக் கூறி அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் மாநில அரசின் நடவடிக்கையை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
archana ips
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி சிபிஐ பணியில் இருந்த அர்ச்சனா ராமசுந்தரம் தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பகத் துறை தலைமை இயக்குநராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இதை யடுத்து எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநராக அவர் நியமிக்கப்படுவார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரை பிரதமர் தலைமையிலான உயரதிகாரிகள் நியமனங் களுக்கான அமைச்சரவை, எல்லை ஆயுதப்படை தலைமை இயக்குநராக நியமிக்க ஒப்புதல் வழங்கி யுள்ளது

இது குறித்து பிரதமர் அலுவலக உயரதிகாரி கூறியதாவது: 1980-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், தற்போது தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பகத் துறையின் தலைமை இயக்குநராக உள்ளார். அவரை “சஹஸ்திர சீமா பல்’ எனப்படும் எல்லை ஆயுதப் படையின் தலைமை இயக்குநராக நியமிக்க ஏசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதேபோல, சிஆர்பிஎஃப் சிறப்புத் தலைமை இயக்குநராக உள்ள துர்கா பிரசாத், அதே படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். எல்லைப் பாதுகாப்புப் படையின் கூடுதல் இயக்குநர் கே.கே. சர்மா, அதே படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாடு நிறுவனத்தின் சிறப்பு இயக்குநராக உள்ள ஏ.ஆர்.கே.. கின்னி அந்தப் பதவியுடன் சேர்த்து தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பகத் துறையின் இயக்குநராகவும் நியமிக்கப்படுகிறார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு சிறப்புச் செயலராக எம்.கே. சிங்கலா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பதவிக் காலம் முடிவடைய நிர்ணயிக்கப்பட்ட நாள் வரை இந்தப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.