October 7, 2022

தமிழ் சினிமா ஹிட் ஆகணும்னா இந்த அஞ்சு விஷயங்கள் கண்டிப்பா வேணும்!

ஒரு திரைப்படத்தின் தலைவிதி,இன்று ஒரு சில நொடிகளில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. ரசிகர்களின் விருப்பத் திற்குரிய மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்களானாலும்,முதல் பாதியிலேயே படம் இப்படிதான் என பெரும்பா லோ னோர் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இதன் தொடர்ச்சி யாக ஒரு ரசிகருக்குள் இருக்கும் விமர்சகர், தான் பார்க்கும் திரைப்படத்தின் சுய விமர்சனத்தை வெறும் 140 வார்த்தைகளுக்குள் அடக்கி அதை ட்விட்டரில் பதிய, அடுத்த சில விநாடிகளில் அப்படத்தின் முடிவு தெரிந்துவிடுகிறது. இது போதாதென்று வாட்ஸ் அப் க்ரூப்களில், இன்னும் விவரமான விமர்சனங்கள், சில மைக்ரோ விநாடிகளில் நூற்றுக் கணக்கானோருக்கு ஃபார்வேர்ட்களாக பறக்கின்றன. இதன் விளைவு, 100 கோடிகளைக் கொட்டி எடுத்த திரைப்படமும், சனி ஞாயிறுக் கிழமைகளின் முன்பதிவுகளைத் தாண்டி ஓடுமா இல்லை தடுமாறுமா என்பதை வெறும் 120 முதல் 180 நிமிடங்களில் (ஒரு படத்தின் கால அளவு 3 மணி நேரமாக இருக்கும் பட்சத்தில்) முடிவு செய்வதுதான் இன்றைய லேட்டஸ்ட் ட்ரெண்ட்.
cinema nov 16
ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் படங்களாக அமையும் பட்சத்தில், மேற் கூறிய அனைத்து அம்சங்களும் அப்படத்திற்கான பாஸிட்டிவான, இலவச விளம்பரங்களாகவே அமைகின்றன. அதனால் நல்லப் படமாக இருந்தால் ‘தெரி மாஸ்’ என கொண்டாடத் தயாராக இருக்கும் ரசிகர்கள், நம்மூர் படைப்பாளிகள் கொஞ்சம் சறுக்கினாலும் அவர்களை ’செத்தான்டா சேகரு’ என படையல் போடவும் தயாராக இருக்கிறார்கள். அப்படியானால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் படமெடுக்க, மிக அவசியமான அம்சங்கள் என்ன?

தமிழ் திரைப்பட உலகம் மீண்டும் புத்துயிர் பெற்று எழ அவசிய மான ’டாப் 5’ எதிர்பார்ப்புகள் இவைதான்

.மீண்டும் கதை இலாகா:

முன்பெல்லாம் கதையை யோசிப்பதற்கென்றே தனி இலாகா இருந்தது தமிழ் சினிமாவின் வரலாறு. ஆனால் இந்த கோல்டன் ட்ரெண்ட், உலகெங்கும் கல்லா கட்டும் ஹாலிவுட்டில் இன்றும் தொடர்கிறது. இங்கே கதை இலாகா இல்லாமல் போனதற்கு காரணம், கதை திரைக்கதை வசனம் என அனைத்தையும் ஒருவரே எழுதினால்தான் அவர் இயக்குநர் என்ற மாயை உண்டாக்கப் பட்டதால்தான். சினிமாவின் காட்சி மொழியைக் கையாளும் நேர்த்தியில் நிபுணத்துவம் இருந்தால் போதும். அதுவே சிறந்த இயக்குநருக்கான அடையாளம். அவரது படைப்பாற்றலுக்குத் தீனிப் போடும் வகையில் ஒரு கதை அவசியம். கதையைப் புதுமையாக யோசிப்பது, மக்களைத் திரையரங்கு களுக்கு வரவழைக்கும் மந்திரமாகும். எனவே கதை இலாகா மூலம் புதுமையான கதைகளை யோசித்து எழுதி, அதை படமாக்கும் நிலை வரவேண்டும்.

மேஜிக் வேண்டாம் லாஜிக் போதும்:

1980, 90-களில் வெளியான படங்கள் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தன. காரணம் காட்சிகளுக்கு இருந்த முக்கியத்துவம். காட்சிக்களுக்கான பேக்ட்ராப் சமாச்சாரங்கள் காட்சியின் பின்னே மட்டுமே இருந்தன. இன்று, நிலைமை தலைக்கீழ். பேக்ட்ராப் அம்சங்களை முன் நிறுத்தி, காட்சிகளை அதன் உள்ளே நுழைத்து வித்தைக் காட்டுவது அதிகரித்து இருக்கிறது. உதாரணத்திற்கு ரஜினியின் எந்திரனுக்கும், சந்திரமுகிக்கும் இருக்கும் வித்தி யாசம். எந்திரனை இரண்டாவது முறை பார்க்கும் போது முதலில் இருந்த வியப்பு இல்லாததும், சந்திர முகியை நான்காம் முறை பார்க்கும் போது கூட இருக்கும் விறுவிறுப்பு இருப்பதும்தான். காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இனி அவசியம்.

கலங்கடிக்கும் காம்பினேஷன் கணக்கு:

இந்த மாஸ் ஹீரோவும், அந்த மெகா டைரக்டரும் சேர்ந்தால், படத்திற்கு எதிர்பார்பு எகிறும். பிஸினெஸ்ஸில் லாபம் கொட்டும் என்ற காம்பினேஷன் கணக்கிற்காக படமெடுப்பது ரசிகர்களை ஏமாற்றும் வியாபார தந்திரம். இந்த காம்பினேஷன் கலாட்டா இனியும் தேவை இல்லை. இப்படி எதிர்பார்த்த பெரிய படங்களில் பெரும்பாலானவை ஒரு வெள்ளிக் கிழமையைத் தாண்டி ஓடவில்லை. எனவே தயாரிப்பாளர் கதாநாயகரின் மாஸ்ஸையும், இயக்கு நரின் இமேஜையும் மட்டுமே நம்பி இறங்காமல், கதையை முதலில் கேட்கவேண்டும். இந்த கதை இவ்வளவு பட்ஜெட்டுக்கும், இவ்வளவு நட்சத்திர பட்டாளத்திற்கும் சரியான கதையா என்பதை முதலிலேயே தெரிந்து கொள் வது மிக அவசியம். இதனால் தேவையில்லாத நஷ்டத்தையும், அடுத்தடுத்து படமெடுக்கும் முயற்சிகளுக்கு முன்நிற்கும் பிரச்னைகளையும் சமாளிக்க முடியும்.

ரியல் ஹீரோக்களின் அவசியம்:

நல்ல கதையோ, கதாபாத்திரமோ அமைந்தால், தங்களது சம்பளத்தைக் குறைத்து கொண்டு நடித்த ரியல் ஹீரோக் களும், ஹீரோயின்களும் தமிழ்சினிமாவில் இருந்திருக்கிறார்கள். விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, பானுப்ரியா, குஷ்பூ மீனா என இந்தப் பட்டியல் பெரியது. இன்று இந்தப் பட்டியல் ஒரு சினிமா டிக்கெட்டின் அளவுக்குள் அடங் கும் வகையில் ரொம்ப சிறியது. அடுத்து, ஒரு நல்ல படத்தின் பட்ஜெட்டுக்கு சவாலாக முன்நிற்பது மாஸ் ஹீரோக் களின் மெகா சம்பளம். தெலுங்கில் பவன் கல்யாண், நாகார்ஜூனா, வெங்கடேஷ், மகேஷ் இங்கே அஜித் போன்ற வங்கள் படம் துவங்கும் போது 25% சம்பளத்தை மட்டும் பெற்றுக் கொண்டு நடிக்கிறார்கள். மீத சம்பளத்தை படத்தை வெளியிடும் முன்னரோ அல்லது படத்தின் வெளியீட்டுக்குப் பின் கிடைக்கும் லாபத்தை அடிப்படையாக வைத்தோ பெறுகிறார்கள். இது அவர்களது பெரும் சம்பளம் மற்றும் அதற்கான வட்டிச் சுமை நெருக்கடி இல்லாமல் ஒரு தயாரிப்பாளரால் படத்தின் தயாரிப்பில் கவனம் செலுத்த முடிகிறது. இந்த ஆரோக்கியமான நிலை முழுவது மாக வரவேண்டும்.

திரைப்படம் திரையரங்குகளுக்கே:

சில வருடங்களுக்கு முன்பு படத்தயாரிப்பின் போது போனஸாக கிடைக்கும் அம்சங்களான, சாட்டிலைட் உரிமை யும், எஃப்.எம்.எஸ் எனும் வெளிநாடுகளில் திரையிடும் உரிமையும் தயாரிப் பாளர்களுக்கு லாபம் தரும் இரண்டாம் வருமானமாக இருந்தது. ஆனால் இன்று திரைப்படத்திற்கு முதல் வருமானமாக இருக்கும் திரையரங்கு வசூலை இரண்டாமிடத்திற்கும், போனஸாக கிடைக்கும் மேற்படி வருமானத்தை முதன்மையான வருமானமாகவும் மாற்றிய சிந்தனையே தமிழ்சினிமாவின் ரசனை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.. இந்த லாப நோக்கை மட்டுமே முதல் குறிக்கோளாக வைத்து படமெடுப்பதால், நல்ல கதையோ, காட்சிகளோ இல்லாமல் வெறும் நகாசுகளை மட்டுமே வைத்து இரண்டரை மணி நேரம் சமாளிப்பது ட்ரெண்டாக மாறிவிட்டது.. இந்நிலை மாறி, திரையரங்குகளுக்கு வரும் மக்களுக்காக, நல்ல திரைப்படத்தை எடுக்கவேண்டும் என்ற கருத்து தயாரிப் பாளர்களிடமும், படைப்பாளி களிடமும் நட்சத்திரங் களிடமும் உருவாகவேண்டும். அப்போதுதான் நல்லப் படத்திற்கான மெனக்கெடல் உருவாகும். மக்களின் மத்தியில் வெற்றி பெரும்போது, மற்ற உரிமைகளின் மீதான வருமானம் இன்னும் அதிகம் எகிறி லாபம் கொட்டும் என்பதே உண்மை.

வெறும் இரண்டரை மணிநேரம் பொழுதுபோக்குக்காக, நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தில், திரையரங்களுக்கு வந்து வாங்கும் டிக்கெட்டிற்கு மதிப்பு அளிக்கும் விதமாக திரைப்படம் கொடுக்க வேண்டியது திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நட்சத்திரங்கள் மற்றும் அனைத்து திரைப்பட தொழில் நிபுணர்களின் கடமை. கொடுக்கும் படத்திற்கு தரமான பொழுதுபோக்கு படம் கேட்பது மக்களின் உரிமை.

ரவிஷங்கர்

Photo Courtesy :www.thinkstockphotos.com