February 7, 2023

தமிழ் சினிமா நலம் பெற பிரார்த்தனை க்ளப் ஆரம்பிப்போமா? By இரா. ரவி ஷங்கர்

கலர்ஃபுல்லான நட்த்திரங்களின் கவர்ச்சி படையெடுப்பு. கிளுகிளுப்பான கலை நிகழ்ச்சிகள், ஸ்கர்ட் கழன்று விழுந்துப் போகுமளவுக்கு ஆக்ரோஷமான பெர்ஃபார்மன்ஸ், நட்சத்திரங்கள் எல்லோரும் ;உள்ளேன் அம்மா’ என்று கட்டாயமாக அட்டடெண்ட்ஸ் கொடுக்கவேண்டுமென்பதற்கு வசதியாக, தென்னிந்திய சினிமா ஷூட்டிங்களுக்கு ஒரு வார தற்காலிக வீ.ஆர். எஸ் விடுப்பு என இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் எக்ஸ்டஸி உலகத்தின் உள்ளே நுழைந்தது போல செம பீக்கில் இருக்கிறது.

சபாஷ்!!!
sep 23 - jaya
அப்படியே நம்முடைய நேச்சுரல் கேமராவான கண்களை கொஞ்சம் ஃபாஸ்ட் பேன்னிங்கில் திருப்பினால், அங்கே, மூச்சு விட திணறியபடி, கண்கள் இரண்டும் மூடியபடி, மிகவும் நலிந்த நிலையில் கந்தலான நிலையில் ஏறக்குறைய ஆழ்ந்த கோமாவில் இருக்கும் அந்த ஜாம்பவானின் முகத்தில் மட்டும் ஒரு செயற்கையான புன்னகை. அவர் பக்கம் சென்றாலே சீனா, கொரியா, ஈரான், ஹாலிவுட்டின் ‘இன்ஸ்ப்ரேஷன் ஸ்டைல் கலந்த ஒரு கலவையான வாசம் அப்படியொரு தூக்கலாக இருக்கிறது..

இன்னும் கொஞ்சம் அருகே போய் டைட் ஸ்ஸூம்மில் உற்றுப் பாருங்கள்….

‘ஐயோ… இவரா… எவ்வளோ ஹிட் கொடுத்தவர், வசூல் மழைக் கொட்டும் ஏரியா பார்ட்டி, உலக சினிமாவில் கூட பார்த்திராத திருப்பங்களைக் கண்டவர், உலகளாவிய தமிழர்களின் ஆதர்ச பொழுபோக்கு கதாநாயகன் அவரா இப்படி? நம்ப முடியல்லையே’ என்று நீங்கள் முணுமுணுப்பது நமக்கும் கேட்கிறது.

”பாஸ் உங்க கெஸ்ஸிங் ரொம்ப கரெக்ட்தான். யெஸ் அவர் சாட்சாத் நம்ம தமிழ் சினிமாவே தான். அவர் பக்கம் போனதுமே சீனா கொரியா ஹாலிவுட் படங்களோட வாசனை தூக்கலாக தெரியும்போதே புத்திசாலியான நீங்க கண்டுப்பிடிச்சிருப்பீங்கன்னு எங்களுக்கு தெரியாதா என்ன?”

சரி சரி ஓவர் பில்டப் போதும். ஓவர் சீன் போடாம மேட்டருக்கு வாங்கன்னு நீங்க முறைப்பதும் புரிகிறது.

நெத்திப் பொட்டில் அடித்த மாதிரி ஒன்லைன்ல சொல்லணும்னா ’இன்னிக்கு தமிழ் சினிமாவுக்கு இனிமா கொடுத்த மாதிரி இருக்கு.’ நிலவரம்.

அட போங்க பாஸ்..நீங்களும் உங்க கட்டுரையும்.. நீங்க பேப்பர் பார்க்கிறதே இல்லையா… ட்விட்டர் பக்கம் போறது உண்டா? இல்ல ட்விட்டர்னு ஒண்ணு இருக்கிறதாவது தெரியுமா? சும்மா அது சரியில்ல இது சரியில்லன்னு கமெண்ட் அடிக்கிறீங்கன்னு இதைப் படிக்கிற பல பேருக்கு எரிச்சல் வரலாம்.

நீங்கள் புத்திசாலியானால், ‘அது எப்படி சொல்லுங்க பார்ப்போம்’னு கேட்பீங்கதானே…

அது எப்படின்னு பார்க்கலாம். அதுக்கு நீங்க கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணவேண்டும் பாஸ். இப்போது நீங்க வீட்டுல இருந்தால் அப்படியே ஹோம்வொர்க்கை தொடங்கலாம். இல்லையென்றால் இந்த கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு வீட்டிற்குப் போய் உங்க ஹோம் வொர்க்கை ஆரம்பியுங்கள்.

இதோ உங்களுக்கான ஹோம் வொர்க் ரெடி!

ஸ்டெப் 1.

சமீபத்தில் வெளியான படங்களின் பட்டியலை ரெடி பண்ணுங்கள். குறைந்த பட்சம் இருபத்தைந்து படங்கள். அல்லது கடந்த இரண்டு மாதங்களில் வெளிவந்த படங்களையாவது குறித்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2

அப்படம் வெளிவருவதற்கு ஒரு வாரம் அல்லது இரு வாரங்களுக்கு முன்பாக, நாளிதழ்கள் அல்லது வார இதழ்களில் ரிலீஸாக இருக்கும் படங்களின் இயக்குநர் அல்லது ஹீரோ அல்லது ஹீரோயின் இவர்களின் பேட்டியையும் கத்தரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 3

அதில் அப்படங்களுக்கான விமர்சனங்களை நினைவுப்படுத்திக் குறித்து கொள்ளுங்கள். மதிப்பெண்களோ அல்லது கமெண்ட்களோ அதையும் எழுதி வைத்துகொள்ளுங்கள்.

ஸ்டெப் 4

நாளிதழ்களில் தொடர்ந்து வெளி வந்திருக்கும் அப்படங்களுக்கான விளம்பரங்களையும் அருகிலேயே வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 5

தீவிரமான தலைவலி வந்தால் உங்களுக்கு ஒரு தலைவலி மாத்திரை போதுமா அல்லது இரண்டுமூன்று தேவைப்படுமா? அதற்கேற்ப தலைவலி மாத்திரைகளையும் ஒரு க்ளாஸ் ‘குடிநீரையும்’ அருகிலேயே வைத்து கொள்ளவும்.

இப்போது நீங்கள் ஸ்டெப் 1-க்கு போகலாம்.. தீயா வேலை செய்யணும் பாஸூ…

என்ன லிஸ்ட் ரெடியா? குட் ரொம்ப ஃபாஸ்ட்டாகதான் வேலை பண்றீங்க பாஸ்.

இப்போ ஸ்டெப் 2.

என்ன அதுக்குள்ளே இதுக்கான மெட்டீரியல் ரெடியா? என்னது அதெல்லாம் உங்க மைண்ட்டுக்குள்ளேயே பக்காவாக இருக்குதா? பேட்டியோட தலைப்பு கூட ஞாபகத்துல இருக்குதா? பின்றீங்க பாஸூ.

சரி ஸ்டெப் 3-க்கு போலாம்.

ஓ அதுவும் மைண்ட்டுக்குள்ளே இருக்குதா. சூப்பர் பாஸ். அப்படீன்னா ஸ்டெப் 4-ம் உங்களுக்கு ரொம்ப கேஷுவலான மேட்டர்தான். சபாஷ்! உண்மையிலேயே நீங்கள் தான் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகன்.

இன்றைய 2013 செப்டெம்பர் 23-ம் தேதி நிலவரப்படி ஏறக்குறைய 102 தமிழ் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ஹிட் படங்கள் என ஒரு பட்டியலை ரெடி பண்ணினால், உங்களாலும் தோராயமாக சொல்லக்கூடிய படங்கள் இதோ..

’கண்ணா லட்டு தின்ன ஆசையா, விஸ்வரூபம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், சூது கவ்வும், தீயா வேலை செய்யணும் குமாரு, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்.’

ஆரம்பத்தில் அதிக எதிர்பார்புக்குள்ளாகி ரிலீஸானதும் ஏதோ ஒரு வகையில் தோல்வியையோ அல்லது எதிர்பாராத சறுக்கல்களையோ சந்தித்த படங்கள் இதோ…

’அலெக்ஸ் பாண்டியன், சேட்டை, சமர், கடல், டேவிட், அமீரின் ஆதிபகவன், மூன்று பேர் மூன்று காதல், நாகராஜ சோழன் எம்.எல்.ஏ., தில்லுமுல்லு, அன்னகொடி, மரியான், பட்டத்து யானை, ஆதலால் காதல் செய்வீர், தலைவா’

இந்த இரண்டு பட்டியலிலும் இடம்பெறாமல் ஏதோ ஒரு வகையில் உங்களின் ஆதரவையோ அல்லது திரைப்பட விமர்சகர்களுடைய அன்பையோ, அதிருப்தியையோ பெற்ற படங்களின் பட்டியல் இதோ…

’ஹரிதாஸ், பரதேசி, சென்னையில் ஒரு நாள், ஐந்து ஐந்து ஐந்து, தங்கமீன்கள் 6 மெழுகுவர்த்திகள், மூடர்கூடம்’

(இந்தப் பட்டியலில் ஒரு சில படங்களின் வெற்றி தோல்வியின் இடம் மாறியிருக்கலாம். காரணம் மிகச் சரியான கலெக்‌ஷன் ரிப்போர்ட்டை பல லட்ச கோடி ஊழல்களை நயா பைசா வரை துல்லியமாக அறுதியிட்டு கூறும் நம்முடைய மத்திய தணிக்கை குழுவினாலும், வருடாவருடம் பட்ஜெட்டில் துண்டு போடும் மத்திய நிதி அமைச்சராலும் கண்டுபிடிக்கவே முடியாது. தமிழ் சினிமா கலெக்‌ஷன் நம்ம டெய்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட் செம கெத்து பாஸூ)

ஒரு வழியாக ‘ரமணா’ டைப் (புள்ளிவிவரம்) சமாச்சாரம் முடிந்தது. இனி மேட்டருக்கு வருவோம்.

இந்த வருடத்தில் இதுவரை (செப்டெம்பர் 22, 2013) வெளியான படங்களில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்த ஒரே படம் ‘சூது கவ்வும்’. மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட திரைக்கதை, இயல்பான வசனம், யதார்த்தமான காட்சியமைப்புகளுடன், நம்மில் பலரை நினைவுறுத்தும் கதாபாத்திர அமைப்புகளுடன் நம் எல்லோருடைய மனதைக் கவ்விய படம். ஹீரோயிஸம் இல்லாத நம்மைப் போன்ற மிகச்சாதாரணமான ஒரு லோக்கல் கிட்நாப் பார்ட்டிதான் ஹீரோ. படத்தில் கிளாமருக்கான வாய்ப்பே இல்லை என்கிற போது அதை சமாளிக்கும் விதமாக ஒரு கற்பனையான பெண் கதாபாத்திரத்தை உருவாக்கி, அப்பெண்ணை கிளாமரான உடையில் ஹீரோவின் மடியில் அமர்ந்தபடி பேச வைத்தது ப்ரிலியண்ட். அந்த கதாபாத்திரம் பேசும் வார்த்தைகள் அனைத்து ரசிகர்களான நம்முடைய மனநிலையப் பிரதிபலிக்கிற மாதிரி உருவாக்கியது இயக்குநரின் ஸ்மார்ட்னெஸ். அதிக அலட்டல்கள் எதுவுமில்லாமல், ஆனால் புதுமையான ஒரு ஃபீல் கொடுத்தது ‘சூது கவ்வும்’ படத்தின் பலம்.

‘விஸ்வரூபம்’ படத்தின் பலம் அதன் தொழில்நுட்ப அசுரத்தனம். ஒரு புல்லட் உடலினுள் பாய்ந்து வெளியே வரும் போது தெறிக்கும் ரத்தமும், கை துண்டானால் நிகழும் பதபதைப்பும் இதில் நிறையவே. ஆனால் கதையென்பது இதில் பெரிதாக இல்லை. அமெரிக்காவின் ஹாலிவுட் மார்கெட்டுக்குள் நுழைவதற்கான ‘பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ’ டைப்பிலான ஒரு கடவுச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட கதையாகவே தோன்றுகிறது. இதைச் சொன்னதுமே உடனே நீங்களும் பிஸ்டலை தூக்கி என் நெற்றிக்கு நேராக பிடிக்காதீர்கள். உங்கள் ஹீரோயிஸ ரசிப்பு முகமூடியை கழற்றி வைத்துவிட்டு, ஒரு சாதாரண ரசிகனாக மட்டுமே பாருங்கள். கமல் தமிழுக்கு கிடைத்த நல்ல கலைஞன். பல ஹாலிவுட் படங்களில் மட்டுமே ‘பார்த்த’ திறமைகளை இங்கே கொண்டு சேர்த்த கனவுகளின் ஹோல் சேல் டீலர் என்பதில் நமக்கும் நன்மைகள்தான்.
sep 23 - tamil-coma1.MINI
அடுத்ததாக வெற்றிபெற்ற சில படங்களின் கதை என்னவென்று ஒரு நிமிடம் யோசித்தால், ’கண்ணா லட்டு தின்ன ஆசையா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், தீயா வேலை செய்யணும் குமாரு, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என வரிசையாக ஹீரோயினை எப்படியாவது கவர்ந்துவிடுவது என துடிக்கும் ஹீரோவின் (ரொம்ப கேஷூவலாக சொல்லணும்னா ‘ஒரு ஜில் ஃபிகரை எப்படி நம்ம ஹீரோ உஷார் பண்றார்’ என்பதுதான் ஒட்டுமொத்த எல்லா படங்களுடைய கதையும்) எதையும் பற்றி கவலைப்படாமல் வெறும் காட்சியமைப்புகளில் நகைச்சுவையான சில சமாச்சாரங்களையும், டைமிங்கான டயலாக்குகளை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இவை. வெறும் நையாண்டியும், டைமிங்கான டயலாக்குகள் மட்டுமே தற்போது பாக்ஸ் ஆபிஸை நிரப்புவதற்கு உதவினாலும், அது எவ்வளவு நாட்களுக்குதான் நீடிக்கும்?

’அலெக்ஸ் பாண்டியன், சேட்டை, சமர், கடல், டேவிட், அமீரின் ஆதிபகவன், மூன்று பேர் மூன்று காதல், நாகராஜ சோழன் எம்.எல்.ஏ., தில்லுமுல்லு, அன்னகொடி, மரியான், பட்டத்து யானை, ஆதலால் காதல் செய்வீர், தலைவா’ என வரிசைக் கட்டிய கமர்ஷியல் படங்களில் கதையை எதிர்பார்பது அவசியமில்லாதது. ஆனாலும் நாயகன் படத்தையே இன்றைய ட்ரெண்ட் ஹீரோவை வைத்து புதுவித ரீமேக்காக்குவதும், கடைசியில் சொல்லும் ஒன்லைன் மெஸேஜ்ஜூக்காக கடைசி ரீல் வரைக்கும் காதலை அப்பட்டமான காதலாக உரித்துக்காட்டுவதும், கிராமத்து பங்காளி கதையைக் காட்டுகிறேன் என்று இளம் நாயகியின் முதுகை முழுவதுமாக காட்டுவதும், மீனவர் என்பதற்காக அவர் ஆழ்கடலின் அடியில் ஸ்கூபா டைவர் போல உட்கார்ந்து தவம் புரிவது போன்ற விஷூவல் ட்ரீட்களையும் மட்டுமே நம்பி படம் வருவதுதான் தமிழ் சினிமாவின் அடையாளமா?

’ஹரிதாஸ், பரதேசி, சென்னையில் ஒரு நாள், ஐந்து ஐந்து ஐந்து, தங்கமீன்கள் 6 மெழுகுவர்த்திகள், மூடர்கூடம்’ ஆகிய படங்கள் விமர்சகர்களின் அதிருப்தியையோ அல்லது ஆதரவையோ பெற்ற படங்கள். ஆனால் இவற்றின் மீதான ரசிகர்களின் பார்வை வேறு. சமீபத்தில் வெளியான ‘மூடர்கூடம்’ படம் பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது. ஒரு அறிமுக இயக்குநர், நான்கு சுமாரான, மோசமான, அசட்டையான நான்கு ஆண்களை வைத்துகொண்டு இருபதுக்கு இருபது அளவிலான ரூம் ஒன்றில் ஒட்டுமொத்த கதையையும் நகைச்சுவையோடு நகர்த்தியிருக்கிறார். இதுசாதாரண விஷயமில்லை. அட பரவாயில்லையே இப்படியொரு முயற்சி அடிக்கடி நடந்தாலே போதும், அடுத்ததாக புதிய படைப்பாளிகளுக்கான அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று நினைக்கும் போதே குண்டு ஒன்றை போட்டார் என்னுடைய நெட் ஸ்பெஷலிஸ்ட். ‘பாஸூ அது ‘அட்டாக் இன் த கேஸ் ஸ்டேஷன்’ என்கிற கொரிய படம். அதுல கேஸ் ஸ்டேஷன். இதுல உறவினர் வீடு. அதுல ஸ்டெம்ப், இதுல பேட். மத்தபடி மேட்டர் எல்லாம் அப்படியே ஜெராக்ஸ் காப்பிதான்’ என்றார்.

இப்படி மூன்று டைப்பில் வெளிவந்த எல்லா படங்களின் விளம்பரங்களும் ஒரே மாதிரியாக, கோரஸாக சொன்ன விஷயம்..’வசூலில் மாபெரும் வெற்றி’, ‘வசூல் சாதனை’, ‘மக்கள் பேராதரவுடன்’. ’மக்களின் ரசனைக்கேற்ற’ என பல வண்ணமயமான டிஸைன்களுடன் பாக்ஸ் ஆபிஸில் விழுந்த ஓட்டையை பெவிக்காலை வைத்து ஒட்டி அடைப்பதற்கு, இப்படியெல்லாம் பாடுப்பட வேண்டியிருக்கிறது என்பதுதான் சோகம்.

அநேகமாக இந்த எல்லா படங்களின் ரிலீஸின் போது அப்பட குழுவினரில் யாராவது ஒருவர் பேட்டியிலோ அல்லது ப்ரஸ் மீட்டிலேயோ சொல்லும் ‘க்ளிஷே’வான சமாச்சாரம் “ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கோம்’ என்பதுதான். பொதுவாக நமக்கான எல்லா வேலைகளையும் ஏதாவது ஒருவகையில் கஷ்டப்பட்டுதான் செய்தாக வேண்டும். எல்லோருக்கும் இது பொதுவான நியதி. தான் வேலைச் செய்த்தையே ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம் என்று அதை ஒரு பில்டப்பாக வைக்கும் இந்த கலாச்சாரம் இன்னும் எவ்வளவு நாட்களுக்குதான்????

இங்குள்ள ஏமாளி தமிழ் ரசிகன் பார்த்திரவே முடியாத ஆனால் அட்டகாசமான ஸ்கிர்ப்ட்டில் அசரடிக்கும் ஏதாவது கொரியன் படங்களின் டிவிடியையோ அல்லது ஹங்கேரிய படங்களின் டிவிடியையோ ’ரொம்ப கஷ்டப்பட்டு, தேடிப்பிடித்து’ படமெடுத்து முடித்ததும் அதையே ’ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்’ என்று ஒரு பாஸிட்டிவான பாயிண்ட்டாக முன்வைக்கும் திறமைதான் இங்குதான் அதிகம்.

பத்து வருடமாக கனவில் சுமந்த கதையை முதல்படமாக கொடுக்கும்போது இருக்கும் அந்த தவம் போன்ற ஃபீலிங் இன்று முன்னணி இயக்குநர்களுக்கே இருப்பதில்லை. தங்களுக்கான இடம் கிடைத்ததும், முன்னணி ஹீரோவை வைத்துதான் இயக்குவேன் என்று அடம்பிடிப்பது அல்லது தயாரிப்பாளர் ’ஹீரோவோட டேட்ஸ் வாங்கியாச்சு ஏதாவது ஒரு டிவிடியை பார்த்து ஒரே மாதத்துல ஸ்கிர்ப்ட்டை ரெடி பண்ணுங்க’ என இயக்குநரை விரட்டுவது. எப்படியொரு நல்ல சினிமாவிற்கு வழி விடும்?

இந்திய பணத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதற்கு காரணம் ஏற்றுமதியை விட இறக்குமதியின் அளவு அதிகம். அது நம்மை பலவீனமாக்குகிறது.(பொருளாதாரம் மேதைகளே நான் சொல்வது சரிதானே…ம்ம்ம்ம் என்கிற உங்கள் ஆமோதிப்பு கேட்கிறது). இதே பாலிஸிதான் நம்ம கலையுலகிற்கும் இப்போதைய அவசியம், தேவை, கட்டாயம்.

‘கதை, திரைக்கதை, காட்சியமைப்புகளை மற்ற உலக நாடுகளின் திரைப்படங்களில் இருந்து மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ இறக்குமதி செய்யாமல், நம்மிடம் ஏராளமாக இருக்கும் படைப்புத் திறனை, க்ரியேட்டிவ் வேர் ஹவுஸிலிருந்து உலக நாடுகள் வியக்கும் வண்ணம் ’அழகியல் அல்லது செவ்வியல்லான படங்களாக ( என்ன பண்ணுவது இந்த இலக்கியவாதிகளுக்கு இந்த வார்த்தைச் சொல்லாவிட்டால் அது படமே இல்லை என்று முன், பின், எதிர் ,பக்க வினைகள் என்று கிளம்பிவிடுவார்களே அந்த பயம் தான்) ஏற்றுமதி செய்வதே தமிழ் சினிமாவுக்கு உயிர் கொடுக்கும்.’

இதனால் தயாரிப்பாளர்களுக்கும், மேலான ரசிகர்களுக்கும் இருக்கும் கடமை. புதிய திறமையைக் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரத்தையும் கொடுத்து கைகொடுப்பதுதான். அதேபோல் இயக்குநர்கள் எல்லோருமே கதையறிவு உள்ளவர்களாகவும், திரைக்கதை வல்லுநர்களாகவும் இருக்க வேண்டிய கட்டாயமில்லை. சிலருக்கு அது இரண்டுமே இயற்கையிலேயே கைக்கூடி வரலாம். அப்படி இல்லாதவர்கள் தன்னுடைய ’ப்ராண்ட் நேம்’மை நம்பி படமெடுத்து, அது ரிலீஸான உடனே சுருட்டுக் கொண்டதும், நான் என் ரசனைக்கு படமெடுத்தேன். மக்களுக்கு ரசிப்புத்திறன் இல்லை. மக்கள் ரசனை உயரவேண்டும் என்று அதிமேதாவி போன்று பேட்டி கொடுத்து கொந்தளிப்பதும் முட்டாள்தனம்.

உண்மையில் மக்களின் எதிர்பார்பும், படைப்பாளியின் படைப்பும் எந்த நேர்க்கோட்டில் பயணித்து ஒரு புள்ளியில் மிகச்சரியாக இணைகிறதோ அப்போது அங்கு அவனது படைப்பு மக்களால் கொண்டாடப்படும். அது உண்மையிலே கலைத்தன்மையுடன் கமர்ஷியலான படமாக இருக்கும்போது கூட, மொழிகளை கடந்து வரவேற்பை சந்திக்கும்.

அதுசரி என்னடா இது.. ‘இவ்வளவு பெரிய கட்டுரையா? செம போர்’ என்று தோன்றினாலும் சரி அல்லது தமிழ் சினிமாவை நினைச்சாலே தலைவலிக்குது. நாளைக்கு வேற படம் பார்க்கணும்ன்’னு உட்கார்ந்தாலும் சரி.

ஸ்டெப் 5 –ல் குறிப்பிட்ட தலைவலி மாத்திரையை இப்போதைக்கு ஒண்ணு போட்டுக்கோங்க. மீதியை அடுத்தப் படம் பார்க்கும் போது தியேட்டருக்கு கொண்டு போயிடுங்க. நல்லதே நடக்கும்!

தமிழ் சினிமா நலம் பெற பிரார்த்தனை க்ளப் ஒன்றை ஆரம்பிப்போமாக!

இரா. ரவி ஷங்கர்