October 16, 2021

தமிழ்நாட்டுலே டாஸ்மாக் கடைகளை மூடுவதா? அஸ்ஸூக்கு.. புஸ்ஸூக்கு! – அமைச்சர் தடாலடி

தமிழக சட்டப்பேரவை , நடப்பு கூட்டத்தொடரில் இன்று தேமுதிக உறுப்பினர் பார்த்தசாரதி பேசும்போது, “தமிழக மக்களின் நலன் கருதி முழு மதுவிலக்கை அமல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி அரசாக ஏன் இருக்கக்கூடாது?” என்றார்.
tasmac jan 21
அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் நத்தம் விசுவநாதன், “யார், எந்தப் பிரச்சனை குறித்து பேசுவது என்று விவஸ்தை இல்லாமல் போய்விட்டது. மதுவின் தீமை குறித்து மற்ற எல்லோரையும் விட முதல்வர் நன்கு அறிவார். ஆனால், மதுவிலக்கை இப்போதைய சூழ்நிலையில் இங்கு நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை. இதற்கு நான் பதிலளிப்பதை விட முன்னாள் முதல்வர் (கருணாநிதி) சொன்ன பதிலை சொல்கிறேன். கொளுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்திற்கிடையே கொளுத்தப்படாத கற்பூரமாக நம் மாநிலம் இருக்கிறது. எனவே இதை பாதுகாக்க முடியாது. சுற்றியுள்ள மாநிலங்களில் அமல்படுத்தாத நிலையில், இங்கு மட்டும் அமல்படுத்தினால் இந்த மாநிலத்தின் வருமானம் மற்ற மாநிலங்களுக்கு போய்விடும். அதுமட்டுமல்லாமல் சமுதாய விரோதிகள் கள்ளச்சாராய பேர்வழிகள்தான். இதனால் ஆதாயம் அடைவார்கள் என்று அப்போது அவர் கூறியிருக்கிறார். நமது வீட்டு கோழி பக்கத்து வீட்டுக்கு சென்று முட்டை போடுவதா? எனவே, இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தி இதனால் மாநிலங்களுக்கு ஏற்படுகிற நஷ்டத்தை மத்திய அரசு ஈடு செய்தால் முதல் முறையாக தமிழக முதல்வர் மதுவிலக்கை அமல்படுத்துவார்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட துரைமுருகன் (திமுக), “நீங்கள் இப்போது மதுவிலக்கை இங்கு கொண்டுவரப்போகிறீர்களா இல்லையா? அதற்கு மட்டும் பதில் சொன்னால் போதும்” என்றார். அதற்கு, “இந்தியா முழுவதும் அமல்படுத்தினால் நாங்களும் அமல்படுத்துவோம்” என்று நத்தம் விஸ்வநாதன் பதிலளித்தார்.

அதன் பின் பேசிய சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), “மதுவிலக்கை அமல்படுத்தினால் வருமான இழப்பு ஏற்படும் என்கிறீர்களா?” என்று கேட்டதற்கு, “அதுமட்டுமே காரணம் அல்ல. பல்வேறு காரணங்களில் அதுவும் ஒன்று” என்றார்.

அப்போது துரைமுருகன் பேசும்போது, “இந்த அரசிடம் இருந்து மதுவிலக்கை அமல்படுத்தும் அறிவிப்பை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் மதுவிலக்கை கொண்டு வர மாட்டார்கள். எனவே இதை விட்டு வேறு விஷயத்தை பேசலாம்” என்றார். அதற்கு, “மத்திய அரசு கொண்டு வந்தால் நிச்சயம் நாங்களும் அமல்படுத்துவோம்” என்று நத்தம் விஸ்வநாதன் மீண்டும் கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் (திமுக), “முன்னாள் முதல்வர், எங்களின் தலைவர் சொன்ன கருத்தின் அடிப்படையில் அவரது திட்டத்தை அமல்படுத்துவதாக சொல்கிறீர்கள். அதற்கு நன்றி. இப்படி அவர் கொண்டு வந்த எல்லா திட்டத்தையும் அமல்படுத்தினால் நல்லது. இப்போது பல மாநிலங்களில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருகிறார்கள். அந்த அடிப்படையிலாவது இந்த அரசு செயல்படலாமே” என்றார்.

அதையொட்டி கருத்து தெரிவித்த ஆறுமுகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), “கோயில்கள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றி விட்டு படிப்படியாக இதை முழுமையாக அமல்படுத்தலாமே” என்றார்.

அதற்கு பதிலளித்த நத்தம் விசுவநாதன், “அப்படித்தான் மக்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு பகுதிகளில் கடைகளை அகற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கம்யூனிஸ்ட் கட்சியினர் இங்கு மதுவிலக்கு பற்றி குரல் கொடுக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஆட்சியில் உள்ள மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் மதுவிலக்கை கொண்டு வரவில்லை. அதுபற்றி நீங்கள் ஏதாவது பேசினீர்களா? தேசிய அளவில் சர்வதேச அளவில் உள்ள கட்சி என்று சொல்லும் நீங்கள் மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர் மாறுபட்ட கொள்கையோடு செயல்படுகிறீர்களா? எனவே மதுவிலக்கு பற்றி பேச கம்யூனிஸ்ட்டுகளுக்கு தார்மிக உரிமை இல்லை” என்றார்.

அப்போது குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சவுந்தரராஜன், “அங்கெல்லாம் இவ்வளவு அதிக கடைகள் இல்லை. தமிழகத்தில் தான் ஏராளமான மதுக்கடைகள் உள்ளன” என்றார். அதற்கு, “தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட குறைவான அளவில்தான் கடைகள் உள்ளன” என்றார்.