September 20, 2021

தமிழ்நாட்டுலே டாய்லெட் வசதி பிஃப்டி: பிஃப்டிதான்!

தமிழகத்தின் 50% கிராமப்புற வீடுகளில் கழிப்பறைகள் இல்லை என்று முழு சுகாதார இயக்கத் திற்கான தணிக்கை குழு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. பொதுவெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பதற்காக நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட முழு சுகாதார இயக்கம், தமிழகத்தில் நிதி மேலாண்மையில் உள்ள குளறுபடிகளால் பயனற்று இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிய வருகிறது.
toilet tn
கிராமப்புற மக்களுக்கு வீடுகளில் கழிப்பறைகள் கட்டிக்கொள்ள அரசு சார்பில் நிதியளித்து வரும் இந்த முழு சுகாதார இயக்கத்தில், கூறப்பட்டுள்ள வழிமுறைகளையும், நிதி ஒதுக்கீட்டையும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் இத்திட்டத்திற்கான நிதியை மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய மிகுந்த காலதாமதம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஊராட்சிகளுக்கு இத்திட்ட பயனாளிகளுக்கு சுத்தமாக எந்த நிதியும் சென்றடையவில்லை.

2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தமிழகத்திற்கு ரூ. 4,247.11 கோடி ஒதுக்கப்பட்டும், அதில் ரூ. 785.71 கோடி மட்டுமே அதாவது 18% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. தவிர, இதன் செலவு விவரங்கள் குறித்த ஆவணங்களும் சரி வர பராமரிக்கவில்லை என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் காரணமாக 95.40 லட்சம் கிராமப்புற வீடுகளில், இதுவரை 46.29 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்படாமல் மக்கள் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் நிலையில் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது