September 20, 2021

தமிழ்நாட்டுலே குடிக்கறது கம்மியாக்கும் -அமைச்சர் பெருமிதம்!

தமிழக சட்டசபையில் மின்துறை,கலால்துறை மீதான மானியகோரிக்கையின் போது மா. கம்யூ.,பெண் எம்எல்ஏ பாலபாரதி பேசும்போது, மது என்பது கெட்ட பழக்கம் என்ற நிலை மாறி, அரசே அரசே கடை நடத்துகிறது அதனால் குடிக்காமல் இருக்க முடியாது என்பதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் மதுவினால் ஏற்படும் அவலங்கள் பல ஊடகங்கள், வாட்ஸ் அப் என பலவகைகளில் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட தீமை யான மதுவை முழுவதுமாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும்” என்று பேசிக் கொண்டிருந்தார்.
tn tasmac sep 25
அப்போது அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குறுக்கிட்டு, “மது தீமையானது இல்லை என்று யாரும் சொல்லவில்லை. மது இருப்பதால் கள்ளச்சாரயம் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது. கள்ளச்சாரய சாவுகள் தமிழகத்தில் அறவே இல்லை. மதுவை எடுத்து விட்டால் கள்ளச்சாராய சாவுகள் அதிகரிக்கும். மதுவை தொடக்கூடாது மதுவே கூடாது என்ற கொள்கை உடைய மது வுக்கு எதிரானது இஸ்லாம் என்று சொல்லுகிறவர்களின் நாடுகளில் கூட பூரண மதுவிலக்கு இல்லை. சில நாடுகளை தவிர பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் மதுவிலக்கு நடை முறைக்கு கொண்டு வரப்படவில்லை. கேள்வி கேட்கும் உறுப்பினர்களின் கட்சி ஆட்சியில் இருந்த மேற்கு வங்கத்தில் பூரண மதுவிலக்கு இல்லை. மாறி மாறி ஆட்சியை பிடிக்கிற கேரளத்தில் பூரண மதுவிலக்கு இல்லை.

ஆட்சிக்கு வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிற மாநிலங்களில் பூரண மதுவிலக்கு கொள்கை யை இவர்கள் பேச மாட்டார்கள். ஆட்சிக்கே வரமுடியாது என்கிற நிலை இருக்கும்போது பூரண மதுவிலக்கு கொள்கையை கையில் எடுக்கிறார்கள். அப்படி பேசுவது இங்கே ஒரு பேஷனாக மாறிவிட்டது. ஒரு ஒப்பீடுக்காக சொல்கிறேன். சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர் குடிக்கும் அளவில் கூட தமிழகம் குறைவாவே இருக்கிறது. எதில் முதலிடத்தில் இருக்க வேண்டுமோ அதில் தமிழகம் முதலிடத்திலும், எதில் குறைவாக இருக்கவேண்டுமோ அதில் குறைவாகவும் இருக்கிறது.

உறுப்பினர்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்கிறேன். பூரணமதுவிலக்கு பூரண மதுவிலக்கு என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் முதலில் உங்களுக்கு தெரிந்த 10 பேர்களை மது பழக்கத்தில் இருந்து விடுபடவையுங்கள். விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலமாகவோ எப்படியே செய்யுங்கள். விழிப்பு ணர்வு பிரசாரத்தின் மூலமாக சாதிக்கலாம். அன்பாலும் பூரண மதுவிலக்கை சாதிக்க முடியும். சட்டம் போட்டு எதையும் சாதிக்க முடியாது.

திருவள்ளுவர் காலத்திற்கு முன்பும், சங்ககாலத்திலும் மதுப்பழக்கம் இருந்திருக்கிறது. அதற்கான சான்றுகள் பல உள்ளன. குடியும் இருந்திருக்கிறது. குடிக்கு எதிரான நடவடிக்கையும் இருந்திருக்கிறது. இலவச ஆலோசனைகளும் இருந்திருக்கிறது. ஆகவே, பூரண மதுவிலக்கு என்று பேசுகிறவர்கள் விழிப்புணர்வு பிரசாரங்களை அரசோடு இணைந்து செய்ய வேண்டும். அரசு மட்டுமே இதை செய்து விடமுடியாது. நீங்களும்(உறுப்பினர்கள்) இதில் பங்கு பெற வேண்டும்.
பாலபாரதி எம்எல்ஏ(மா.கம்யூ) கோயில்கள் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் இருக்கிற மதுபான கடைகளை அரசு அகற்றவேண்டும். அதோடு, 7 ஆயிரமாக இருக்கிற கடைகளை படிப்படியாக எண்ணிக்கையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று பேசிவிட்டு சசிபெருமாளுக்கு…… வணக்கம் என்று கூறி முடித்தார்.

சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு: சசிபெருமாள் பற்றி உறுப்பினர் பாலபாரதி கூறிய கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்றார்.

அப்போது அமைச்சர் வைத்தியலிங்கம் எழுந்து, ”சசிபெருமாள் இறந்துபோனது உண்மையிலேயே வருத்தமான ஒன்றுதான். அதற்காக யாரும் இங்கே மகிழ்ச்சி அடையமாட்டார்கள். அதேநேரம் ஒரு காந்தியவாதி அவர் சொல்லும் கருத்தை வெளிப்படுத்த இதுபோன்ற முறையை கையாண்டி ருக்கக் கூடாது. மேலும், காந்தியவாதிக்கு வீரம் தேவையில்லை. அகிம்சையில்தான் சொல்லியி ருக்கவேண்டும். மேலும், அவர் மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதை குறித்து அதிகம் பேசவேண்டாம்” என்றார்.

மேலும் மதுவிலக்கு துறை சார்பான அறிவிப்புகள்

1. டாஸ்மாக் பணியாற்றும் 7152 மேற்பார்வையாளர், 15530 விற்பணையாளர்கள், 3734 உதவி விற்பணையாளர்களுக்கு 500/-, 400/-, 300/- இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடைமுறைபடுத்தப்படும். இதற்கு 13.09கோடி நிதி ஒதுக்கீடு.

2. மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள 1கோடியில் இருந்து 3 கோடியாக உயர்வு.

3. கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்குவதற்கு இந்த நிதியாண்டில் 5 கோடி மானியமாக நிதி வழங்கப்படும்.மின் தடை புகார் மையங்களை பலப்படுத்த கணினிமயமாக்கப்பட்ட மின் தடை புகார் மையங்கள் திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 90 லட்சம் செலவில் அமைக்கப்படும்