September 27, 2022

தமிழ்நாட்டில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2,932 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2022-ம் ஆண்டுக்குள், நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டித்தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வீடுகளின் கட்டிட வடிவமைப்புக்கு ஏற்றவாறு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் வரை மத்திய அரசு நிதியுதவி அளிக்கும். இந்த வீடுகள் கட்டுவதற்கான நிலங் களை அந்தந்த மாநில அரசுகள் வழங்கும். இத்திட்டத்தின்படி, தங்கள் மாநிலங்களில் மலிவு விலை வீடுகள் கட்ட நிறைய மாநில அரசுகள் மத்திய அரசிடம் விரிவான அறிக்கை சமர்ப்பித்து இருந்தன.
house-all
இந்நிலையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சக செயலாளர் நந்திதா சாட்டர்ஜி தலைமையில், அமைச்சகங்களுக்கு இடையிலான மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது.அதில், மாநில அரசுகள் சமர்ப்பித்த அறிக்கைகள் மீது ஆய்வு நடத்தப்பட்டது. அதன் இறுதியில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் நகர்ப்புற ஏழைகளுக்கு 2 லட்சத்து 28 ஆயிரத்து 204 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவற்றில், 2 லட்சத்து 17 ஆயிரத்து 747 வீடுகள், பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக் கானவை ஆகும். மீதி வீடுகள், குறைந்த வருவாய் பிரிவினருக்கானவை ஆகும். கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் மத்திய அரசு ரூ.1½ லட்சம் நிதி உதவி அளிக்கும். இதன்மூலம், மொத்தம் ரூ.3 ஆயிரத்து 231 கோடி வழங்கும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், நிலத்தை வழங்கும்.

மாநிலவாரியாக ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை வருமாறு:-

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 932 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 5 நகரங்களில் இவை கட்டப்படும்.

ஆந்திர மாநிலத்தில் 37 நகரங்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 147 வீடுகள் கட்டப்படும். குஜராத் மாநிலத்தில் 4 நகரங்களில் 15 ஆயிரத்து 580 வீடுகள் கட்டப்படும்.

தெலுங்கானா மாநிலத்தில் 10 நகரங்களில் 10 ஆயிரத்து 290 வீடுகள் கட்டப்படும். ராஜஸ்தான் மாநிலத்தில் 10 நகரங்களில் 6 ஆயிரத்து 255 வீடுகள் கட்டப்படும்.