September 18, 2021

தமிழ்நாடு போலீஸில் இன்னுமா ஆர்டர்லி டூட்டி? கேள்வி எழுப்பிய ஐகோர்ட்!

: உயர் அதிகாரிகளின் வீட்டில் எத்தனை காவலர்கள் இன்னும் வேலை பார்க்கிறார்கள் என சென்னை ஐகோர்ட்   தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் கடும் மன அழுத்தத்தில் பணி செய்து வருகிறார்கள் என்றும், எனவே அதனை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், காலர்களுக்கு உரியமுறையில் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டது. ஆனால் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பணியில் இருக்கும் காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து நீதிமன்றம் முன்பு வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, காவலர்களுக்கு அவர்களின் உயர் அதிகாரிகளிடம் இருந்து தரப்படும் அழுத்தமே அப்பாவி பொதுமக்கள் மீதான கோபமாக மாறுகிறது. எத்தனை காவலர்கள் இன்னும் உயர் அதிகாரிகளின் வீட்டில் வேலை பார்க்கிறார்கள்? 1979-இல் ஆர்டர்லி முறையினை ஒழித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை என்ன ஆயிற்று? என கேள்வி எழுப்பினார்.
மேலும், முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ஆணையம் உருவாக்குவது மற்றும் காவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக வரும் வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யபட வேண்டும். அல்லது உள்துறை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்க ப்படும் என எச்சரித்து, வழக்கு விசாரணையை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.