September 21, 2021

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க தாமதம் ஏன்?

“டிஜிட்டல் உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் முழு தகுதியும் பெற்றுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, குறிப்பிட்ட காலத்திற்குள் மற்ற நிறுவனங்களுக்கு இந்த உரிமங்களை வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு உரிமத்தை வழங்காதது, குறிப்பிட்ட தனியார் வர்த்தக நலன்களை பாதுகாப்பதற்காகத்தான் என நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
Arasu Cable
மத்திய நிதி, கம்பெனி விவகாரம், செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அருண் ஜெட்லிக்கு, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அருண் ஜெட்லியை நேரில் சந்தித்துக் கொடுத்தனர்.

அதில்,”முடங்கிக்கிடந்த தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் புதுப்பித்தார். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தனது கேபிள் டி.வி. சேவைகளை, சென்னை நீங்கலாக மற்ற 31 மாவட்டங்களிலும் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி தொடங்கியது.

நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், மாதம் 70 ரூபாய் கட்டணத்தில் சந்தாதாரர்களுக்கு 100 சேனல்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வழங்குகிறது. 65 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்ட சுமார் 24 ஆயிரம் உள்ளூர் கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தற்போது இந்தியாவிலேயே மிகப்பெரிய ஒரே மல்டி சிஸ்டம் ஆப்ரேட்டராக விளங்கி வருகிறது சந்தாதாரர்களிடம் இருந்து, மாதம் ஒன்றுக்கு 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை வசூலித்துக் கொண்டு, 30 முதல் 70 சேனல்களை மட்டுமே அளித்து வந்த முந்தைய மல்டி சிஸ்டம் ஆப்ரேட்டர்களின் பிடியிலிருந்து தமிழக மக்கள் விடுவிக்கப்பட்டனர்.

மத்திய அரசு, கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ந்தேதி, சென்னை நகருக்கான ‘‘சி.ஏ.எஸ்’’ (கண்டிஷனல் அட்ரசபிள் சிஸ்டம்) உரிமத்தை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு வழங்கியதை அடுத்து, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் டிஜிட்டல் முறையிலான சிக்னல்களை ஒளிபரப்பி வருகிறது. 1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கேபிள் டி.வி. நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்து, சி.ஏ.எஸ். பகுதியை டி.ஏ.எஸ். பகுதியாக மாற்றி அமைத்தது. அதன்படி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சென்னையில் டிஜிட்டல் முறையிலான ஒளிபரப்பைத் தொடங்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்கியது.

சுமார் 50 கோடி ரூபாய் செலவில் தேவைப்படும் செட்டாப் பாக்ஸ்கள், சி.ஏ.எஸ்., சந்தாதாரர் நிர்வாக அமைப்பு மற்றும் பிரதான ஒளிபரப்பு மையம் ஆகியவற்றுக்கான ஆர்டர்களை முன்வைத்தது. சென்னைக்கான டி.ஏ.எஸ். என்ற டிஜிட்டல் உரிமம் வழங்குமாறு கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி அன்றும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு உரிமம் கோரி அதே ஆண்டு நவம்பர் 23-ந்தேதி அன்றும் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறைக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் விண்ணப்பித்தது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் விண்ணப்பங்கள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

அதேசமயம், முந்தைய மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், தமிழ்நாட்டில் உள்ள மற்ற 9 எம்.எஸ்.ஓ.க்களுக்கு உரிமம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் விண்ணப்பித்ததற்கு பிறகே உரிமம் கோரி விண்ணப்பித்தவை.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் டிஜிட்டல் முறைக்கு மாற வசதியாக டிஜிட்டல் உரிமத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தனர். மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு உரிமம் வழங்கும் நடைமுறை தொடர்ந்து நீடிக்கலாம் என்றும், உரிமம் வழங்கப்படலாம் என்றும் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், இன்னும் டிஜிட்டல் உரிமத்தை வழங்கவில்லை.

உரிமம் வழங்கும் பிரச்சினை குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளை அளிக்க, செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கடந்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதி, அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. ஆனால், இந்த குழு தனது இறுதி அறிக்கையை இதுவரை அளிக்கவில்லை. டிஜிட்டல் உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் முழு தகுதியும் பெற்றுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, குறிப்பிட்ட காலத்திற்குள் மற்ற நிறுவனங்களுக்கு இந்த உரிமங்களை வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு உரிமத்தை வழங்காதது, குறிப்பிட்ட தனியார் வர்த்தக நலன்களை பாதுகாப்பதற்காகத்தான் என நாங்கள் சந்தேகிக்கிறோம்.

உங்களது அரசிடமிருந்து இதுகுறித்த உடனடி முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மாநில அரசின் கோரிக்கைகள் குறித்த நிலவரத்தை காட்டும், மத்திய அமைச்சரவையின் இணையதளத்தில், எங்களது கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக தெரியவந்துள்ளது – இந்த விவகாரத்தில் 2 ஆண்டுகளாக முடிவு மேற்கொள்ளாமல் இருப்பது மிதமிஞ்சிய காலமாகும்.

இந்த சூழ்நிலையில், இப்பிரச்சினையை விரைவில் பரிசீலனை செய்து, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு மேலும் தாமதமின்றி டிஜிட்டல் உரிமத்தை வழங்கவேண்டும். இதன்மூலம் தமிழக மக்கள், குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் குறைந்த செலவில் தரமான கேபிள் டி.வி. சேவைகளை பெற வழிவகை ஏற்படும்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.