September 24, 2021

தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்! – பா ம க. தேர்தல் அறிக்கை

”இலங்கையில் பூர்வீமாக தமிழர்கள் வாழும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘தமிழீழம்’ அமைய வேண்டும். தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்.ஐ.நா. விசாரணைக் குழுவினர் ஈழத்தமிழர்களிடம் விசாரணை நடத்த இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டும் என பாமக வலியுறுத்தும். *இந்தியா இலங்கைக்கு கொடுத்த கச்சதீவை மீண்டும் பெற்றுத் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பாடுபடுவோம்.” என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைந்த பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
ramadoss_with sympal
அதில் ”*சமூக நீதியும், சமத்துவமும் நிலைக்க சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

*இடஒதுக்கீடு விகிதா சாரத்தை மாநிலங்களின் நிலைமைக்கேற்ப ஒவ்வொரு மாநிலமும் தானே முடிவு செய்து கொள்ள தேவையான அரசியல் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.

*பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற கருத்தை பா.ம.க. அடியோடு எதிர்க்கும்.

*அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் சாதிவாரி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

*கல்வி, வேலை, தொழில் தொடங்க உதவி, அரசின் ஒப்பந்தங்களில் பங்கு உள்ளிட்ட அனைத்திலும் ஒவ்வொரு சாதியினருக்கும் மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

*பின்தங்கியவர்களில் முன்னேறியவர்கள் என்ற கருத்தை நீக்க வேண்டும்.

*தமிழகத்தில் சமச்சீர் கல்வி எனப்படும் பொதுப்பள்ளி முறையை முழுவீச்சில், முழு அளவில் செயல்படுத்தப்பட பா.ம.க. பாடுபடும்.

*பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்மொழி மூலமாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்.

*ஆங்கிலம் இரண்டாவது மொழியாக சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை முழுமையாகக் கற்க உறுதி செய்வதுடன் மொழிச் சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்ய பாடுபடுவோம்.

*மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வுகள் நடத்த முயற்சிக்கப்பட்டால், அதனை பா.ம.க. எதிர்க்கும். எந்த ஒரு வடிவடத்திலும் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்.

*அனைவருக்கும் முழுமையான நலவாழ்வு வசதிகளை ஏற்படுத்தித் தருதல்.

*மது மற்றும் புகையிலை ஒழிப்பு திட்டத்தை அமல் படுத்துவோம்.

*உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி இந்தியாவை ‘புகையிலையில்லா நாடாக’ மாற்ற பாடுபடுவோம்.

*விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், எரிவாயு குழாய் திட்டங்கள் ரத்து செய்யப்படும்.

*அணு உலை அறவே தேவையில்லை என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் அணு உலைகளை முற்றிலுமாக மூடவும், இனி புதிதாக அணு உலைகள் தொடங்குவதை முற்றிலுமாக கைவிடவும், இந்தியாவும் தமிழ்நாடும் அணுசக்தி இல்லாத நாடாக விளங்கவும் பா.ம.க. குரல் கொடுக்கும்.

*வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம்.

*பல மதங்களையும் மாறுபட்ட பழக்க வழக்கங்களையும் கொண்ட இந்திய நாட்டில் எல்லோருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் தேவையில்லை என்பது பா.ம.க.வின் நிலைப்பாடாகும். ஒவ்வொரு பிரிவும் தத்தமது மத நம்பிக்கைகளை பின்பற்றும் வகையில் மாறுபட்ட சிவில் சட்டங்களை பின்பற்றுவது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இந்த உரிமை காக்கப்பட பாடுபடும்.

*தனிநபர்களுக்கு ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் வரையிலான வருவாய்க்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும். மகளிருக்கு 20 விழுக்காடும், மூத்தக் குடிமக்களுக்கு 25 விழுக்காடும் கூடுதல் வருமானவரி விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கும்.

*தனி நபர்களின் சேமிப்பு மீது ரூ.2 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தும்.

*சில்லரை வணிகத்தில் நேரடி அந்திய மூதலீட்டை எதிர்ப்போம்.

*ஆயுள் காப்பீடு சேவை வரி ரத்து செய்யப்படும்.

*தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்துவோம். பொதுத்துறை மூலமாக புதிய மின் திட்டங்களைத் தொடங்கவும், தேசிய மின் கட்டமைப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டுவரும் வழித் தடத்தை தேவையான அளவில் உருவாக்கவும் பாடுவோம்.

*கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

*வீடற்ற அனைவருக்கும் வீடு அளிப்பதற்கான திட்டத்தை சிறப்புடன் நிறைவேற்றி அனைவருக்கும் உறைவிடம் என்ற கொள்கை நிறைவேற்ற துணை நிற்கும்.

*குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்கு கீழானர்களின் திருமணத்துக்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்.

*இந்திய அரசியல் சட்டத்தின் 8–வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய அரசு, ஆட்சிமொழிகள் ஆக்கிட வேண்டும். அதற்கான அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பாடுபடுவோம்.

*இலங்கையில் பூர்வீமாக தமிழர்கள் வாழும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘தமிழீழம்’ அமைய வேண்டும். தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்.

*ஓட்டு விற்பனை என்பது அரசியலை பிடித்த புற்று நோய். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் இழிசெயல் ‘அனைத்து ஊழல்களின் தாய்’ என்ற அழைக்கப்படுகிறது. கருப்புப் பணத்தையும், பெரும் ஊழல்களையும், இயற்கை வளக் கொள்ளையையும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள் ஊக்குவிக்கின்றன. இதை அகற்ற பாடுபடுவோம்.

*சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம்.

*ஐ.நா. விசாரணைக் குழுவினர் ஈழத்தமிழர்களிடம் விசாரணை நடத்த இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டும் என பாமக வலியுறுத்தும்.

*இந்தியா இலங்கைக்கு கொடுத்த கச்சதீவை மீண்டும் பெற்றுத் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பாடுபடுவோம்.

உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.