October 24, 2021

தமிழக விவசாயிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் நடந்த மொய் விருந்து!

தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியால் கடும் இழப்புகளை சந்தித்து வரும் விவசாயிகள் வங்கிக்கடனையும், கந்துவட்டியையும் திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனால் அவர்களின் குடும்பங்களும் நடுவீதிக்கு வரும் அவல நிலை தள்ளப்படுகின்றன. இந்த நிலையில், வங்கிக்கடனை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி கவனத்தை ஈர்த்தனர். இதன் விளைவாக அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள தமிழர்கள் விவசாயிகளுக்கு உதவ முடிவு செய்து. தமிழக முறைப்படி மொய் விருந்து நடத்தி அந்த பணத்தின் மூலம் 10 விவசாய குடும்பங்களுக்கு நாட்டு பசுக்களை வழங்க இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

மொய்விருந்து என்பது பண உதவிக்காக நடத்தப்பட்டு, பங்கேற்பவர்கள் இலைக்கு அடியில் பணம் வைத்துச் செல்வது தான் வழக்கம். அந்த வகையில் தமிழக விவசாயிகளுக்காக நேற்று நடத்தப்பட்ட இந்த நியூஜெர்ஸி மொய் விருந்தில், உதவி தேவைப்படும் விவசாயிகளுக்கே நேரடியாகச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருபுறம் விழா நடந்து கொண்டிருந்த வேளையில் இன்னொரு புறம் தமிழக விவசாயிகள் மற்றும் விவசாயம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. சுமார் ஐம்பது பேர் ஒவ்வொரு குழுவாக அமர்ந்து இருக்க, ஏற்பாட்டளர்கள் வரைபடத்துடன் கூடிய விளக்கங்களை கூறினார்கள். ஒவ்வொரு கூட்டம் முடிந்ததும், தமிழகத்தில் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்கள் பற்றி விவரம் வழங்கப்பட்டது. விருப்பப்பட்டவர்கள் தனியாகவோ அல்லது தங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் குழுவாகவோ, ஒரு விவசாயக் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய உறுதி எடுத்துக் கொண்டனர்.

தமிழகத்தில் நேரடியாக இந்த குறு விவசாயிகளை சந்தித்து, அவர்களுடைய தேவைகளை கண்டறிந்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தது. விழா முடிவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடி உதவி செய்வதாக உறுதியானது. சம்மந்தப்பட்டவர்கள் நேரடியாக விவசாயிக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு, தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனை தீர உதவிகள் செய்வார்கள். அந்தந்த விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இரு தரப்பினருக்கும் ஒருவரை மற்றவர் தெரிந்து கொள்ளவும் இந்த ஏற்பாடு வழி செய்யும். சம்மந்தப்பட்ட குறுவிவசாயிக்கும் தங்களுக்கு உதவி செய்பவர் யார் என்ற விவரம் தெரியவரும். அமெரிக்காவில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளையும் ஈடுபடுத்தும் போது, அவர்களுக்கும் தமிழகத்துடன் தொப்புள் கொடி உறவு தொடர வாய்ப்பு ஏற்படும்.

இந்த விழாவை இருநூறுக்கும் மேற்பட்ட நியூஜெர்ஸி வாழ் தமிழர்கள் செய்திருந்தனர். அவர்களில் யார் பெயரையும் முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை. எல்லோரும் அவரவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டபணிகளைச் செய்தார்கள். அவ்வப்போது அடுத்து என்ன பணி என்று மைக்செட்டில் சொல்லப்பட்டதோடு சரி. யாரும் யாரையும் அதைச் செய் இதைச் செய் என்று வேலை வாங்கும் அவசியமே இல்லை.. ஒவ்வொருவரும் தங்கள் மன நிறைவுக்காக செய்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது.

இந்த விழா குறித்து நியூஜெர்சி தமிழர் ஒருவர் விவரித்த போது, “நியூஜெர்ஸியில் வசித்து வரும் தமிழர்களின் பெரு முயற்சியால் நடத்தப்பட்ட மொய்விருந்தில் சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர். 900 கார்களில் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர்.தமிழர் ஒருவர் தனக்கு சொந்தமான பண்ணை நிலத்தை விழா நடத்துவதற்கு இலவசமாக அனுமதி வழங்கியிருந்தார். பண்ணையில் இருந்த இரண்டு வீடுகளையும் விழாவுக்காக கொடுத்திருந்தார்கள்.

புதிதாக உருவாக்கப்பட்ட விழாத் திடல் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக, தன்னார்வலர்கள் திறந்த வெளியாக இருந்த இடத்தை விழாத் திடலாக மாற்றி அமைத்து இருந்தனர். திடலின் இருபக்கமும் கடை வீதிகள் அமைக்கப்பட்டிருந்தது. டீக்கடை, மோர்ப் பந்தல், வளையல் கடைகளுடன் பல்லாங்குழி விளையாடவும் ஒரு கூடம் இருந்தது. அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. டீயுடன் வடையும் கொடுத்தார்கள். தாகம் தீர்க்க பானகரம், நன்னாரி சர்பத், நீர்மோர் என கேட்டது அனைத்தும் கிடைத்தது. அழகிய கோலங்களுடன், கொடி, வரவேற்பு தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மையப்பகுதியில் அமெரிக்க மற்றும் இந்திய தேசியக்கொடிகள் பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்தது. காலை சுமார் 11 மணி அளவில் பொங்கல் வைத்து விழாவை தொடங்கினார்கள். அடுத்து பறையிசை முழங்க , காவடியுடன், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மதிய உணவு ஆரம்பமானது. வாழை இலையில் 21 வகையிலான சைவ அசைவ உணவுகள் பறிமாறப்பட்டன. துண்டுகள் செய்யப்பட்ட வாழை, மா, பலா என முக்கனிகளும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும். அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் பிரியாணியுடன், சிக்கன் குழம்பும் , முட்டையும் இருந்தது. 1000 பவுண்டுகள் சிக்கன் வாங்கப்பட்டதாக கூறினார்கள். நியூஜெர்ஸி வட்டாரத்தில் இந்திய உணவகங்களில் தலைமை சமையல் கலைஞர்களாக பணிபுரியும் 15 பேர்கள், குழுவாக வந்திருந்து உணவு தயாரித்து வழங்கினார்கள். அவர்களுக்கு உதவியாக ஏராளமான தன்னார்வலர்கள் விடிய விடிய தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். விழாத் திடலில் இருந்த மைக் செட்டும் , அதில் பேசியவர்களும் அப்படியே கிராமத்து திருவிழாவை நேரில் கொண்டு நிறுத்தினார்கள். இடையிடையே எழுபது எண்பதுகளில் வெளிவந்த இளையராஜா திரைப்பாடல்களும் மண்ணின் மணத்தை உணரச் செய்தது. கபடி உறியடி பம்பரம், என விளையாட்டுக்களை ஆடி ஊர்த் திருவிழாவை கண் முன் கொண்டு வந்து விட்டார்கள். புழுதி பறக்க, புரண்டு புரண்டு கபடி ஆடியவர்களைப் பார்த்தால் கபடி மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. உறியடியில் பெண்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். கட்டியிருந்த ஒரிஜினல் மண்பானையை ஒருவர் பெர்ஃபெக்டாக அடித்து துவம்சம் செய்து விட்டார்” என்றார்.