October 19, 2021

தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை?

தூக்கு விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை 3 நாளில் விடுவிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த பின் அமைச்சர் பிரபா கணேஷ் அறிவித்துள்ளார்.
srilanka oct 30
முன்னதாக தமிழக மீனவர்கள் 5 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இந்தியா செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில், மீனவர்கள் 5 பேருக்கும் நீதி கிடைக்கும் என நம்புகிறோம். மீனவர்களுக்கு வாதாடுவதற்காக இலங்கையில் சிறந்த வழக்குரைஞர்களில் ஒருவரை இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது என்றார் அவர்.எனினும், அந்த வழக்குரைஞர் யார் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

முன்னதாக, தில்லியில் செய்தியாளர்களிடம் சையத் அக்பரூதின் திங்கள்கிழமை கூறியதாவது: இந்த விவகாரத்துக்கு இந்திய அரசு அதிக முக்கியவத்துவம் கொடுக்கிறது. கொழும்பு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு,

200 பக்கங்கள் கொண்டது. அந்த தீர்ப்பானது, சிங்கள மொழியில் உள்ளது. அதை வழக்குரைஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இலங்கையில் உள்ள சிறந்த சட்ட வல்லுநர்களை இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது. 5 மீனவர்களையும், இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்’ எனக் குறிப்பிட்டார்.

ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், பி.அகஸ்டஸ், ஆர். வில்சன், கே. பிரசாத், ஜே. லாங்லேட் ஆகிய 5 பேரும், இலங்கையைச் சேர்ந்த 3 பேரும் இலங்கை கடல் பகுதியில் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஹெராயின் கடத்தியதாக அவர்கள் மீது இலங்கை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து, கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கும், இலங்கையைச் சேர்ந்த 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பைக் கண்டித்து, ராமேசுவரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, தமிழக மீனவர்களின் உறவினர்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் சந்தித்து, மீனவர்களை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச, இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தாகியுள்ள “தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரஸ்பரம் பரிமாற்றம் செய்தல்’ ஒப்பந்தத்தின் அடிப்படையில், 5 தமிழக மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்றுவது குறித்து ஆராயப்படும் என உறுதியளித்த நிலையில் மீனவர்கள் 5 பேரும் மூன்று நாட்களுக்குள் விடுதலை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இலங்கை அமைச்சர் பிரபா கணேஷ் தெரிவித்துள்ளார்.