October 16, 2021

“தமிழக மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட எஸ்.எஸ்.ஆர்”!

”ரசிகர்களால் ‘லட்சிய நடிகர்’ என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், தலைமுறை தாண்டி தற்போதைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்த பெருமைக்குரியவர்”என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் தெரிவித்துள்ளார். அது போல் ”என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் துணை நின்று –- ஒரு பகுத்தறிவாளனாக – ஒரு கழகக் காளையாக விளங்கிய அவரை இழந்துவிட்ட செய்தியை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்
ssr old
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ,”
பழம்பெரும் திரைப்பட நடிகரும், ‘எஸ்.எஸ்.ஆர்.’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான ‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 86&வது அகவையில் இன்று (நேற்று) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
மேடை நாடகங்கள் மூலம் திரையுலகிற்குள் நுழைந்து, முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு ‘முதலாளி’ என்ற திரைப்படம் தான் முகவரி பெற்றுத்தந்தது. ‘குமுதம்’, ‘சாரதா’, ‘சிவகங்கை சீமை’, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மூலம் தமிழக மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

தனது தெளிவான தமிழ் வசன உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். ரசிகர்களால் ‘லட்சிய நடிகர்’ என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், தலைமுறை தாண்டி தற்போதைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்த பெருமைக்குரியவர். திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தடம் பதித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியவர். எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும். தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்த எஸ்.எஸ்.ராஜேந்திரனின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. எஸ்.எஸ்.ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

தி மு க தலைவர் கருணாநிதி தன் அறிக்கையில்,:கொள்கை வீரராகவும், என் குடும்ப நண்பர்களில் ஒருவராகவும் விளங்கியவரும்; நான் ‘ராஜி’, ‘ராஜி’ என்று அன்பொழுக அழைத்து மகிழ்ந்தவருமான; என் உடன்பிறப்புகளில்
ஒருவராம்;எஸ்.எஸ்.ஆர்.மறைந்த நிகழ்ச்சி என் நெஞ்சை குலுக்கியது.
ssr body
நான் எழுதிய திரைப்படங்கள் “பராசக்தி”, “மனோகரா”, “பூம்புகார்”, “மறக்கமுடியுமா”, “ரங்கூன் ராதா”, “காஞ்சித் தலைவன்”, “மணிமகுடம்”போன்றவற்றில், எஸ்.எஸ்.ஆர். நடித்த காட்சிகளும் பேசிய உரையாடல்களும் இன்றளவும் நினைத்து நினைத்து உருகிடக் கூடியவை. என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் துணை நின்று –- ஒரு பகுத்தறிவாளனாக – ஒரு கழகக் காளையாக விளங்கிய அவரை இழந்துவிட்ட செய்தியை இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை. நெருங்கிய நண்பராக – கழகத்தில் அண்ணாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவராக – கலையுலகத்தினருக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த அன்புச் செல்வமாம் எஸ்.எஸ்.ஆர். அவர்களை இழந்துவிட்டதற்கு கலையுலகத்தின் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும் ஆழ்ந்த துயரத்தை அறிவித்துக் கொள்கிறேன்.

1 thought on ““தமிழக மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட எஸ்.எஸ்.ஆர்”!

 1. 1984
  அன்பின் முகவரி படப்பிடிப்பு அருணாசலம் ஸ்டுடியோவில் அப்போது தான் எஸ். எஸ். ஆர். அவர்களை நேரில் சந்திக்கிறேன்
  இப்போது கூட அவரது மஞ்சள் பட்டு என் கண்ணில் நிற்கிறது
  எங்கள் ஊர் சிவகங்கையில் அமுதா தியட்டரில் மணலில் உட்கார்ந்து அவரை ரசித்தவன்
  மதுரையில்
  நான் நாடகங்களில்
  நடித்த நாட்களில் அவரை போல வசனம் பேசி நடிக்க முயற்சி செய்தது உண்டு
  அவரை போல் அந்த கம்பீர தமிழ் வராது.

  அருணாசலம் ஸ்டுடியோவில் இதை அவரிடமே சொல்லி முதுகில் செல்ல தட்டு வாங்கிய அந்த மாலை நேரம் …
  இப்போதும் கண்ணில் நீர்த்துளிகளை தாரை வார்க்கிறது
  தாய் வார இதழ் குழுமத்தில் இருந்து வெளி வந்த மருதாணி இதழில் மூன்று பக்கம் அவரை பற்றி எழுதினேன் .
  இதழ் வெளிவந்ததும் என்னை போனில் அழைத்தார்
  தம்பி ரொம்ப நல்ல கட்டுரையாக உள்ளது
  எழுதும் போது ஆங்கில சொற்கள் தேவையா என் கேட்டது செவிட்டில் அறைந்தது போல இருந்தது
  அதன் பின் அடிக்கடி அவரை சந்திப்பேன்
  1991 நான் தூர்தர்சனுக்கு கடல்புரத்தில் தொடர் உருவாக்கிய நேரம்
  ஒருநாள் திங்கள்கிழமை கடல்புரத்தில் தொடர் 7 மணிக்கு ஒளிபரப்பு முடிந்து பாரதிதாசன் சாலையில் எடிடிங்கில் இருந்தேன்
  காகா ராதாக்ருஷ்ணன் டப்பிங் பேசிய போது என்னை பார்க்க நேரில் வந்துவிட்டார்
  என்ன தம்பி நான் ஒரு நடிகன் இருப்பது உங்களுக்கு தெரியலயா எனக்கு ஒரு வாயப்பு கொடுப்பா என்று கேட்டார்
  அப்படி உரிமையுடன் நேசித்த எஸ். எஸ். ஆர்

  மீண்டும் அந்த கம்பீர குரல் நேரில் நிஜத்தில் கேட்க முடியாது.
  இன்று வீட்டில் படுத்து கிடந்த
  சிங்கம் எனக்கு ஒரு வாயப்பு கொடுப்பா என்று கேட்பது போல இருந்தது.
  மன்னித்து விடுங்கள் அண்ணா

Comments are closed.