September 29, 2021

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் 29-ந் தேதி ஸ்ட்ரைக்!

போக்குவரத்துக் கழகத்தில் அதிகரித்துள்ள லஞ்சத்தைத் தடுக்க வேண்டும்,ஊதிய உயர்வு உடனடியாக வேண்டும் ர்ன்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 29-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
bus strike
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் தொழிற்சங்க பேரவை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் எம்.சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை, எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி, பா.ம.க., பி.எம்.எஸ்., எம்.எல்.எப்., ஏ.ஏ.ஏல்.எப்., டி.டி.எஸ்.எப். ஆகிய 11 சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தின.

கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,”தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதியோடு முடிவடைகிறது. எனவே புதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.560 சம்பளத்துக்கு பதிலாக ரூ.230 மட்டுமே வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டது.

நிர்வாகத்தில் மோசமான அளவில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. 50 சதவீதத்திற்கு மேல் பேருந்துகள் பழுதடைந்துவிட்டதால், போக்குவரத்து கழகங்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும். ஊதிய பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும். தினக்கூலி, ரிசர்வ் தொழிலாளர்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி அனைத்து சங்கங்களும் தொடர் இயக்கங்களை நடத்தின. கடந்த செப்டம்பர் மாதம் 5-ந் தேதி வேலைநிறுத்த அறிவிப்பும் கொடுத்தன. அரசு தொழிற் சங்கங்களை அழைத்து பிரச்சினையை பேசி தீர்ப்பதற்கு பதில், திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி முதல் ஊதிய ஒப்பந்தம் வரவேண்டிய நிலையில், 2015 ஜனவரி 1-ந் தேதி முதல் இடைக்கால நிவாரணம் ஆயிரம் ரூபாய் என அறிவித்ததுடன் வழக்கு நடைபெறுவதால் பேச்சுவார்த்தை நடத்த இயலவில்லை என தவறான தகவலை கூறுகிறது. எனவே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துதான் நியாயங்களை பெறவேண்டிய கட்டாயத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26-ந் தேதி சென்னை பல்லவன் இல்லம் முன்பு வேலை நிறுத்த விளக்க கூட்டமும், வரும் 29-ந் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், தமிழக மக்களை பாதிக்கும் என்ற நிலையிலும், பொதுமக்கள் தொழிலாளர்களின் நியாயங்களை புரிந்து கொண்டு வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.”போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.