தமிழக சட்டசபை இன்று கூட ஆரம்பித்து நாளை தொடரும்!

இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அத்துடன், 2015 – 16 ம் ஆண்டுக்கான முன் பண மானியக் கோரிக்கைகளை அவர் மார்ச் 28-ந் தேதி பேரவைக்கு அளித்தார். அதனைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், முதல்-அமைச்சரின் பதில் உரையும் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 1-ந் தேதியோடு சட்டசபை நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன. வழக்கமாக நடைபெறும் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் அப்போது நடைபெறவில்லை.
TN Assembly
இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டதை ஆகஸ்டு 24-ந் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்’’ என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இதற்கிடையே, சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய் வதற்காக கடந்த 21-ந் தேதி சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடை பெற்றது. கூட்ட முடிவில், ‘‘சட்டசபை கூட்டம் வரும் 24-ந் தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 29-ந் தேதி வரை (விடுமுறை நாட்கள் நீங்கலாக)மொத்தம் 19 நாட்கள் நடைபெறும்’’ என்று சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.

இன்று தொடங்கும் முதல் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம், முன்னாள் அமைச்சர் பூ.செந்தூர் பாண்டியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசுகிறார்கள். அதன்பின்னர், தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

நாளை (செவ்வாய்கிழமை) முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் தொடங்குகிறது. அன்றைய தினம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த கூட்டத் தொடரில், அ.தி.மு.க., தி.மு.க., இரு கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், பா.ம.க., புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்களும், அ.தி.மு.க. கூட்டணி கட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தை தவிர, அந்தக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. இதற்கு முன்பு நடந்த சட்டமன்ற கூட்டங்களில் விஜய காந்த் கலந்து கொள்ளாததால், இன்றைய கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளமாட்டார் என்றே தெரிகிறது.

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மானியக் கோரிக்கை பதில் உரையின்போதும், அரசு தரப்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துவார்கள் என தெரிகிறது. மேலும், சட்ட-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த சட்டசபை கூட்டத் தொடரில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.