September 26, 2021

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது!

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. மொத்தம் 3 நாட்களுக்கு குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
assembly.2
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கூட்டப்படுவது வழக்கமாக உள்ளது.இதையொட்டி சட்டசபை கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வந்தனர். அவர்களுக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார்.சட்டசபை கூட்டுவது எப்போது என்பது எங்களுக்கு தெரியும், மற்றவர்களின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை என்று அவர் கூறியிருந்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை இன்று கூடுகிறது.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தற்போது தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் கூடும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இதுதான். எனவே இந்த கூட்டத்தொடரில் மற்ற எதிர்க்கட்சிகளின் செயல்பாடு வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..அதோடு, பருப்பு மற்றும் முட்டை கொள்முதலில் முறைகேடு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் இறப்பு, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட விவகாரம், காவிரியின் குறுக்கே கர்நாடகம் 2 அணைகள் கட்டுவதான அறிவிப்பு, யூரியா உரம் தட்டுப்பாடு போன்ற பல முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கொண்டு வர வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.