September 29, 2021

அதானி குழுமம் ரூ.1,400 கோடி சூரிய மின் உற்பத்தி திட்டம்!சிரிக்கும் தமிழக முதலீட்டாளர்கள்!

தமிழகத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு எக்கச்சக்கமான சாதகமான வாய்ப்புகள் இருந்தும் அதை செயல்படுத்துவதில் மாநில அரசு இன்னும் மெத்தனமாக உள்ளது. இத்தனைக்கும் நம் தமிழக அரசு 2012 அக்டோபரில் ‘தமிழ்நாடு சூரிய சக்தி மின் உற்பத்தி கொள்கை- – 2012’ஐ வெளியிட்டது. இலக்கு அதன்படி சூரிய சக்தி மின்சாரம் மூலம் 2013ல், 1,000; 2014ல், 1,000; 2015ல், 1,000 மெகாவாட் என மூன்று ஆண்டுகளுக்குள் 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு (வழக்கம் போல்) முடங்கிப் போயுள்ளது. இந்நிலையில் ரமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1400 கோடி முதலீட்டில் 200 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் பூங்காவை அமைக்க தமிழக அரசுடன் அதானி குழுமம் மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது. இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக (TANGEDCO) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அதானி குழுமம் பிரதமர் நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
tn splar
அது மட்டுமின்றி மிக விரைவில் தமிழகத்தில் 1000 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் தொழிற் சாலையை தொடங்குவது குறித்தும் மாநில அரசுடன் அதானி குழுமம் ஆலோசனை நடத்தி வருகிறதாம். அதன் ஒரு பகுதியாக 200 மெ.வா மின் உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் இரண்டு தினங்களுக்கு முன்னர் கையெழுத்தாகின. ஒரு மெ.வா மின்சார உற்பத்திக்கு ரூ.6.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை முதலீடு செய்யப்படுகிறது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.ஆனாலும் அதானி குழும உயர் அதிகாரிகள் இந்த மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தியை பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் தமிழக அரசு 5% உற்பத்தியை மட்டுமே அடைந்துள்ளது. 2015-ம் ஆண்டுக்குள் 3000 மெ.வாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்ற தமிழக அரசின் திட்டம் பெரிய அளவில் பலனளிக்காத சமயத்தில் அதானி குழுமத்தின் சூரிய மின் தொழிற்சாலை முதலீடு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

இருப்பினும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது (TANGEDCO) அண்மையில் 631 மெ.வாட் மின்சாரம் கொள்முதலுக்கான ஒப்பந்தங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஒப்பந்தமானது 2016 மார்ச் மாதத்துக்குள் தொடங்கப்பட வேண்டும். மின் பளு தொடர்பான ஆய்வில் 2,200 மெ.வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இன்னொரு தொழிற் பூங்காவை தொடங்கவும் சாத்தியக்கூறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றையெல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார்கள்.

இந்நிலையில் நம்மிடம் பேசிய தமிழக ‘சோலர் பவர் டெவலப்பர் அசோசியேஷன் நிர்வாகிகள், ”மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரத்தில் கடந்த மே மாதம் வரை சூரிய மின் பூங்காக்கள் தொடங்கப்பட்ட வகையில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. நிறுவப்பட்ட மொத்த சூரிய மின் திறனளவான 3.88 ஜிகா வாட்டில் 3.8% மட்டுமே தமிழகத்தின் பங்களிப்பு. இதுப் பற்றி விசாரித்தால் ,”சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து 1,000 மெகாவாட், மின்சாரம் கொள்முதல் செய்ய, 2012, நவம்பரில்,மின் வாரியம் சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டது.அதில் 52 முதலீட்டாளர்களிடம் இருந்து 708 மெகாவாட் மின்சாரம்,வாங்க முடிவும் செய்யப்பட்டது.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு மின் வாரியம் சார்பில், ‘லெட்டர் ஆப் இண்டென்ட் (எல்.ஓ.ஐ.,)’ எனப்படும் அனுமதி கடிதம் தனித்தனியே 2013, மார்ச் மாதம் வழங்கப்பட்டது.ஆனால் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் அடுத்தகட்ட பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. இத்தனைக்கும் ஒரு மெகாவாட், சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க, 6 கோடி ரூபாய் தேவை.முதல் கட்டமாக, சூரிய சக்தி மூலம், 1,000 மெகாவாட் மின் உற்பத்திக்கு, ‘டெண்டர்’ விடப்பட்டு, பணிகள் நிலுவையில் உள்ளன.ஆனால், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளுக்கான பணிகள் துவங்காததால், 12 ஆயிரம் கோடி ரூபாய் (2,000 மெகாவாட்) மதிப்பிலான, சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்கள் முடங்கி உள்ளன.
solar 2
அதைத் தொடர்ந்து தனியார்களால் பல கோடி ரூபாய் செலவு செய்து சூரிய மின் சக்தி சாதனங்கள் வாங்கப்பட்டன. பல லட்சம் செலவு செய்து வறண்டு கிடந்த நிலம், மின் நிலையம் அமைப்பதற்கான இடமாக மாற்றப்பட்டது. ஆனால், முதல்வர் அறிவித்த, சூரிய சக்தி மூலம் 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்ற திட்டத்தில் இதுவரை, ஒரு மின் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தமிழக அரசை நம்பி சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள தமிழக முதலீட்டாளர்களைக் இன்று வரை கொஞ்சமும் கண்டு கொள்ளாத அதிகாரிகள் இப்போது மோடி பிரண்ட் பிராஜக்டை பிரதான செய்தியாக்கி வருகிறார்கள். சிரிப்புதான் வருது” என்கிறார்கள்!