October 16, 2021

தமிழக அரசியலில் மாற்றம்?

தமிழ் நாட்டில் அரசியல் ஒரு புதிய மாற்றத்திற்கு தயார் ஆகிறது என தோன்றுகிறது. …. … உதாரணமாக அ தி மு க இப்போதைய நிலையில் தங்கள் தலைவியின் கைது பரிதாப ஓட்டாக மாறுமா … பலவீனமாக மாறுமா … யாருக்கும் தெரியாது…. பரிதாபமாக மாற வேண்டுமானால் …. அனைத்து அமைச்சர்களும் இந்த இரண்டு ஆண்டுகளும் மக்களுக்காக உண்மையாக உழைக்க வேண்டும் .. சுய நலம் இன்றி குறுக்கு வழிகளில் செல்லாது மாநில முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். தலைமை செயலகத்தில் கோப்புகள் வேகமாக நியாயமாக நகர வேண்டும். சட்டம் ஒழுங்கு … மின்சார வினியோகம் .. நல திட்டங்கள் நலிவடையாதிருத்தல் … எதிரிகளை விமர்சிக்கும் போக்கை கை விட்டு மக்களை நேசிக்கும் கட்சியாக மாற வேண்டும்.
edit politics falgs
இதுதான் நேரம் என கொள்ளை அடிக்கும் எண்ணம் தலை தூக்காமல் இதுதான் நேரம் என உழைக்கும் கட்சியாக செயல் பட வேண்டும். இதை விடுத்து அம்மா புகழ் பாடினால் போதும் … பணம் கொடுத்து ஆங்காங்கே கூட்டம் சேர்க்கும் … கோஷம் போடும் மனிதர்களை விலைக்கு வாங்கினால் போதும் என எண்ணாதிருக்க வேண்டும். இதையெல்லாம் மீறி ஜாமீனில் வந்ததுமே தேர்தலில் நிற்பதை பற்றி எல்லாம் கவலைப் படாமல் மக்களுக்கு சாதாரண மனிதனாகவே தொண்டாற்றும் தலைவியாக .. கர்மவீரியாக … வாழ ஜெயலலிதா முடிவெடுக்க வேண்டும். (எவ்வளவு பெரிய ஆசை???)…

தே மு தி க என்ன செய்ய வேண்டும் …. ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களை இப்போதே அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை நியமித்து அதில் யார் சரியாக தேர்தலை கையாண்டு மக்களிடம் நல்ல பெயர் வாங்குகிறார்களோ அவர்களையே வேட்பாளராக நிறுத்த வேண்டும். சாமானியர்கள் எம் எல் ஏ ஆக முடியும் அமைச்சர் ஆக முடியும் என ஒரு தோற்றத்தை உருவாகி அதை மெய் பட செய்ய வேண்டும். தன் மனைவி மைத்துனர் தவிர பொது வாழ்வில் நல்ல பெயர் பெற்ற பல மனிதர்களை கட்சியில் சேர்த்து அவர்களுக்கு சரியான மரியாதை மற்றும் கட்சியில் பதவி தர வேண்டும். இளைஞர்களுக்கு … படித்தவர்களுக்கு .. முன் உரிமை தர வேண்டும். இரண்டு கழகங்களை தொடர்ந்து பழித்தாலே போதும் மக்கள் மாற்றம் வேண்டி நமக்கு ஓட்டு அளித்து விடுவார்கள் என்ற தாரக மந்திரத்தை மறந்து விட வேண்டும். திரைப்படத்துறையில் இவர் வந்த போது இரண்டு பெரிய சக்திகளுக்கு எதிராக எப்படி வெற்றி பெற்றார் என எண்ணிப் பார்க்க வேண்டும். நேற்று கிரேஸி மோகன் ஒரு பேட்டியில் சொன்னது போல தொடர் தோல்வி வந்தால் நம்மை தயார் செய்து கொள்ள நம் வாழ்வின் முதல் நிலையில் எப்படி வென்றோம் என்பதை எண்ணிப்பார்த்து பயிற்சி முறையை அதிக கடுமையாக்கி விட வேண்டும் … பிரச்சாரம் என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் என்பதை மாற்றி இப்போதே தொடங்க வேண்டும்.

பாரதீய ஜனதா இன்னமும் தன்னை தயார் படுத்திக் கொள்ளாத கட்சியாகவே தமிழ் நாட்டில் இருக்கிறது. தமிழிழை பரபரப்பாக அறிக்கை கொடுக்கும் போதே அதன் சூடு குறையும் விதத்தில் இல கணேசன் ஒரு அறிக்கை தருகிறார். கட்சியை பலப்படுத்தும் வேலையை இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை. எனக்கென்னவோ தமிழ் நாட்டில் கட்சிப் பொறுப்பை மூன்று முக்கிய பெண் தலைவர்களிடம் கொடுத்து விடலாம் என தோன்றுகிறது. மோடி அவர்கள் பேச்சை தமிழ் சப் டைட்டில்களோடு ஊடகங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என யாருக்கும் இன்னமும் தோன்றவில்லை,.. தமிழ் நாட்டில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தராமல் கட்சியை வளர்க்கவே முடியாது. மத்திய அரசு திட்டங்களின் விளம்பரங்கள் எல்லாம் ஹிந்தி மொழியிலேயே இருந்தால் எப்படி உருப்படும் கட்சி..
இரண்டு வருடங்கள் மத்தியில் இருக்கும் அரசு தமிழ் நாட்டிற்கு என்ன செய்ய போகிறதோ அதில்தான் கட்சி சிறிதளாவது வெற்றி பெறும்.

தி மு க …… என்ன ஆகும் என்பது யாருக்கும் தெரியாது. கட்டுக்கோப்பான கட்சி … அனுபவம் உள்ள கட்சி .. முடியுமே என நினைக்கும் போதெல்லாம் முளைத்து வரும் கட்சிதான்… இருந்தாலும் கனிமொழி ஆ ராசா மாறன் சகோதரர்கள் மீது உள்ள வழக்குகள் என்ன ஆகிறது என்பது கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதற்கு சம்மந்தப்ப்ட்ட விசயம்தான். கலைஞர் சீரிய உடல் நிலையோடு மன நிலையோடு இருந்தால் இன்னமும் கூட வெற்றி பெறுவார் என தோன்றுகிறது.

ராமதாஸ் … விடுதலை சிறுத்தை கட்சிகள் எல்லாம் கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றி பெறும் கட்சிகள் … இப்போது சொல்ல முடியாது.

வை கோ என்ன செய்ய போகிறாரோ …

காங்கிரஸ் என்ன ஆகுமோ

கம்யூனிஸ்ட்கள் கதி என்னவோ

தேர்தல் வரும் நேரம் …. சூழல்கள் எப்படி இருக்குமோ …

முக்கிய தலைவர்கள் உடல் நிலை எப்படி ஒத்துழைக்குமோ …
திருப்புமுனை சம்பவங்கள் ஏதாவது நிகழ்ந்து விடுமோ …

இன்னும் எத்தனை வழக்குகள் முடிவுக்கு வருமோ …அதன் விளைவுகள் என்னவாக இருக்குமோ … நல்ல படியாக இப்போதைய ஆட்சி 5 வருடம் முடிந்து தேர்தல் வருமோ அல்லது ஜனாபதி ஆட்சி வந்து … பின்னர் தேர்தல் வருமோ …மோடி ஆட்சி அதிக மார்க் வாங்குமா … அதன் மூலம் தமிழ் நாட்டில் நல்ல படியாக தேர்தலை கையாளுமா …. இல்லை வெறும் பேச்சில் மட்டுமே பந்தல் போடுமா … அதன் விளைவுகள் தமிழ் நாட்டு தேர்தலை பாதிக்குமோ ….

இப்படி பல கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்ல முடியாது ஆனாலும் 2016 தேர்தலுக்கு பின் அரசியலில் தூய்மையின் அளவு அதிகரிக்கும் என நம்பலாம் … ஊழலின் அளவு குறையும் என நம்பலாம் … மக்கள் அந்த புரட்சிக்கு காரணமானவர் களாகவும் அதன் பலனை அனுபவிக்கும் பாக்கியசாலிகளாகவும் இருப்பார்கள் என நம்புவோம்!

Venkat Subha