September 29, 2021

தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் தயாரிக்க, விற்க, சேமித்து வைக்க ஜஸ்ட் 3 மாசம் தடை!

‘நெஸ்லே’ நிறுவனம் தயாரித்து, இந்தியாவில் விற்பனை செய்யும் மேகி நூடுல்ஸ் துரித உணவுப் பொருளில், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன உப்பு அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, ‘‘மோனோ சோடியம் குளுட்டாமேட்’’ என்ற ரசாயன உப்பு உடலில் அதிகம் சேர்ந்தால் பலவித நோய்கள் உருவாகும் அபாயம் இருப்பதால், மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் வலுத்தது.
maggi ban 5
இதையடுத்துதமிழ்நாட்டை பொறுத்த அளவில், 32 மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டு , தமிழ்நாட்டில் 6 இடங்களில் உள்ள உணவுப் பொருள் பரிசோதனை கூடங்களில் ஆய்வு நடந்தது. ஆய்வு முடிவின் அறிக்கை நேற்று மாலை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையை தொடர்ந்து, மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தமிழக அரசு 3 மாதம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”முதல்-அமைச்சர் ஜெயலலிதா உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் தமிழகத்தில் விற்கப்படும் நூடுல்ஸ் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து சோதனை செய்து அவை உணவு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப உள்ளதா? என கண்டறியுமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரகம் ‘மேகி நூடுல்ஸ்’ மற்றும் அதைப் போன்ற இதர ‘நூடுல்ஸ்’ உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தது. தமிழ்நாடு முழுவதும் 65 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் எடுக்கப்பட்ட 17 உணவு மாதிரிகளில் 7 மாதிரிகளில் பரிசோதனைக்குப் பின் ஆய்வக முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

இந்த 7 மாதிரிகளில் 6 மாதிரிகளில் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்திற்கு 2.5 என்ற அளவைவிட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. ‘நெஸ்லே’ நிறுவனத்தின் ‘மேகி நூடுல்ஸ்’, ‘வாய் வாய் எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ்’, ‘ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’, ‘ஸ்மித் அண்டு ஜோன்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ்’ ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி மேற்சொன்ன ‘நூடுல்ஸ்’ உற்பத்தி நிறுவனங்களின் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம், 2006, பிரிவு 30(2)(ஏ)-ன் கீழ் இந்நிறுவனங்கள் நூடுல்ஸ் உணவுப் பொருட்களை தமிழ்நாட்டில் தயாரிப்பதற்கும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முதற்கட்டமாக 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஆணையிட்டுள்ளார். மேலும், இவ்வகை உணவுப் பொருட்களை விற்பனையில் இருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
”என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.