தமிழகத்தில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து துவக்கம்!
கொரோனா காரணமாக நாடு முழுவதும் சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியது. பின் படிப்படியாக அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்கள் நாடு திரும்பவும் இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினர் அவர்களின் நாட்டுக்கு திரும்பவும் மட்டுமே பல கட்டுபாடுகளுடன் ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் சில தனியார் விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 4 மாதங்கள் இடைவெளிக்கு பின் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் சர்வதேச விமான போக்குவரத்து துவங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து இன்று முதல் வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து மீண்டும் துவங்கியது.முதல்கட்டமாக அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜாவுக்கு விமான சேவை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ மற்றும் கோஏர் விமான நிறுவனங்கள் சென்னையில் இருந்தும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் மதுரையில் இருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான விமான போக்குவரத்துக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளன.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த குறைந்த அளவிலான விமானங்கள் இயங்க மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதி வரை 7 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் துபாயில் ஐபிஎல் போட்டிகள் துவங்க இருப்பதால் துபாய்க்கான விமானங்களின் அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளிடம் கொரோனா இல்லை என சான்றிதழ் இருந்தாலும் இங்கு வந்த பின் ஒரு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் அவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளலாம்.
தமிழகத்தில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து துவங்கப்பட்டிருப்பதை பலர் வரவேற்றுள்ளனர்.