September 27, 2021

தமிழகத்தில் நிரந்தர ஆட்சியை அமைப்பதற்கான பணியை இன்றே தொடங்குவீர்! = கருணாநிதி

முத்தமிழ்ப் பேரவை சார்பில் விருதுகள் வழங்கும் விழா ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.விருதுகளை வழங்கி, கருணாநிதி பேசியது,”தமிழுக்கும், செம்மொழி விருதுக்கும் தற்போதைய சூழலில் ஆபத்து வந்துள்ளது. நம்மோடு தமிழும் வாழமுடியுமா என்ற சந்தேகம் ஏற்படும் இந்த நிலையிலும் எனக்கு ஒரு நம்பிக்கையும் பிறக்கிறது.
karuna may 19
இந்த மாநிலத்தை ஆளும் தகுதியை நாம் பெறாவிட்டாலும், தமிழை ஆளும் தகுதியை நம்மிடம் இருந்து யாரும் பறித்துவிட முடியாது என்பதுதான் அது. தமிழையும், தமிழகத்தையும் காக்கும் உறுதியை இந்த நேரத்தில் எடுக்க வேண்டும். சாமன்யர்கள், பாட்டாளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என எல்லோரும் சேர்ந்து வியூகம் வகுத்து போராடினால் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும்.

தேர்தல் நேரத்தில் வியூகம் வகுத்து என்று நான் பேசுவதால் இதனை தேர்தல் பேச்சாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது தமிழர் தேறுதல் பேச்சாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள மாசு, மருக்களை, அவமானங்களை அகற்றி தமிழகத்தில் நிரந்தர ஆட்சியை அமைப்பதற்கான பணியை இன்றே தொடங்க வேண்டும். அதற்கான உறுதியை ஏற்போம்”என்றார் அவர்.

இவ்விழாவில் இயல்செல்வம் விருது மனுஷ்யபுத்திரனுக்கும், ராஜரத்னா விருது பேட்டைவாய்த்தலை எஸ்.சண்முகத்துக்கும், நாதஸ்வர செல்வம் விருதுகள் இ.ஆர்.சின்னையா, திருக்கடையூர் டி.எஸ்.முரளிதரனுக்கும், இசைச் செல்வம் விருது நடிகை ஷோபனாரவிக்கும், தவில் செல்வம் விருது திருச்சி ஆர்.கணேசனுக்கும், மிருதங்கச் செல்வம் விருது வேணுபுரி எம்.ஆர்.சீனிவாசனுக்கும் கருணாநிதி வழங்கினார்.