October 25, 2021

தனியார் பால் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!:

தமிழகத்தில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு தினமும் 1½ கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது.தமிழக அரசு நிறுவனமான ஆவின் மூலம் 23½ லட்சம் லிட்டர் பாலையே சப்ளை செய்ய முடிகிறது. ஏனைய ஒரு கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் தனியாரால் சப்ளை செய்யப்படுகிறது.அரசு நிறுவனமான ஆவின் மூலம் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.35-க் கும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.31-க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.27-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், மாத அட்டை வைத்திருப்பவர்களுக்கு, இந்த விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.2 குறைத்து வழங்கப்படுகிறது.
MILK
அதே சமயம் தனியார் பால் நிறுவனங்கள் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பாலை ஒரு லிட்டர் ரூ.46-க்கும், சமன்படுத்தப்பட்ட பாலை ரூ.42-க்கும், நிலைப்படுத்தப்பட்ட பாலை ரூ.38-க்கும், கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பாலை ரூ.34-க்கும் விற்பனை செய்கின்றன.இந்த நிலையில், பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை காரணம் காட்டி, தனியார் பால் நிறுவனங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் லிட்டருக்கு ரூ.2 விலை உயர்த்துகின்றன.

அதன்படி இனி, கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.48-க்கும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.44-க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.40-க்கும், கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் ரூ.36-க்கும் விற்பனை செய்யப்படும்.இதுகுறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி,”தமிழ்நாட்டில் வசிக்கும் 15 சதவீத மக்கள் பால் வாங்கக்கூட முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், தனியார் பால் நிறுவனங்கள் மட்டும் இந்த ஆண்டில் பால் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்தியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக நால்வர் குழுவை தமிழக அரசு நியமிக்க வேண்டும். இந்த குழுவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி, மக்கள் பிரதிநிதி, தனியார் பால் நிறுவன பிரதிநிதி, சங்க நிர்வாகி ஆகியோர் இடம்பெற வேண்டும். இந்த குழு அரசுக்கு அளிக்கும் அறிக்கையை வைத்தே பால் விலை உயர்த்தப்பட வேண்டும். தன்னிச்சையாக பால் விலையை உயர்த்துவதை தடுக்க வேண்டும்.” என்ரு தெரிவித்துள்ளார்