September 20, 2021

தந்தையின் மரபணுக்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்!

ஒரு குழந்தையானது தனது தந்தையின் மரபணுக்களின் மூலம் அவரது குணநலன்களை மட்டுமில்லாமல் மன அழுத்தத்தையும் பெறக்கூடும் என்று ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். ஒரு தந்தையின் மன அழுத்தமானது அவரது விந்துகளில் உள்ள ஆர்என்ஏ மூலக்கூற்றை மாற்றுவதன் மூலம் அடுத்து வரும் தலைமுறைகளிடத்திலும் மனச்சோர்வு நடத்தைகள் வெளிப்படக்கூடும் என்பதனை சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு சிறிய சோதனை மூலம் கண்டறிந்துள்ளனர்.
dna
ஆய்வுக்கூடத்தில் உள்ள எலிகளிடம் இந்த சோதனையை அவர்கள் மேற்கொண்டனர். எலிகளிடத்தில் ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட மன அழுத்தங்கள் அவற்றின் நுண்ணிய ஆர்என்ஏக்களில் மாற்றங்களை ஏற்படுத்த அவற்றின் வளர் சிதை மாற்றத்தில் தொடர்ந்த குறைபாடுகள் பிறந்த சந்ததியினரிடமும் அதே மன நடத்தைகளை வெளிப்படுத்தியது. மரபணு குணங்களை அளிப்பதைவிடவும் ஒரு தந்தை தனது சந்ததி உருவாக்கத்தில் பெரிய பங்கை வகிக்கின்றார் என்பது இதன்மூலம் தெரிய வருவதாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட இசபெல் மன்சுயி என்ற நரம்பியல் விஞ்ஞானி கூறினார்.

இதே மாதிரியான மன அழுத்தத்தை தாய் எலியைப் பிரித்து வைப்பதன் மூலம் குட்டிகளுக்கு அவர்கள் செயற்கையாக அளித்தனர். தினம்தோறும் ஏற்படுத்தப்பட்ட இந்த பிரிவு ஒழுங்கற்ற நேரங்களில் மேற்கொள்ளப்பட்ட போது தாய் எலியால் பிரிவினைக்கு முன் குட்டிகளை சமாதானம் செய்ய முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்தபோது ஆண் குட்டிகள் மனச்சோர்வினை வெளிப்படுத்தின. அதேபோல் அவற்றின் ஆர்என்ஏ அளவுகளிலும் மாற்றங்கள் தெரியவந்தது.

இந்த ஆர்என்ஏக்களில் ஒன்றாகக் கருதப்படும் எம்ஐஆர்375 மன அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்குக் காரணமாகக் கருதப்படுகின்றது. எனவே, இதனை அடிப்படையாக வைத்து இதுபோல் நிகழ்வுகளின் வெளிப்பாடுகள் மன அழுத்தமாகவோ அல்லது மனநலக் கோளாறுகளாகவோ மனித இனத்திலும் காணப்படும் என்ற தகவலை நேச்சர் நியூரோசயின்ஸ் என்ற பத்திரிகையில் மன்சுயி செய்தி வெளியிட்டுள்ளார்.