October 16, 2021

தட்டச்சுக் கல்வியை தள்ளி வைக்க வேண்டாமே!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஏதாவது ஒரு வீட்டின் மாடியில் கொட்டகை போட்டிருப்பார்கள்.உள்ளே ஏராளமான தட்டச்சு இயந்திரங்கள் தட்… தட்… என்று ஒலித்துக் கொண்டிருக்கும்.அதுதான் தட்டச்சுப் பயிலகம். அங்கே மாணவர்கள் தட்டச்சு அல்லது சுருக்கெழுத்துப் பயிற்சி பெறுவதற்காக வருவார்கள்.
type
அந்தக் காலத்தில் பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) என்பது 11-ஆம் வகுப்பு ஆகும். அதை முடித்தால் அவர்கள் கல்லூரியில் புகுமுக வகுப்பில் நுழைவார்கள்.எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதி கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேரும் வரையிலான விடுமுறை நாளில்மாணவர்கள் தட்டச்சு, சுருக்கெழுத்து தான் பயில்வார்கள்.

இது வேலைவாய்ப்புக்கு மிகப் பெரிய கருவியாக இருந்தது. பட்டப் படிப்பை முடித்தாலும், முடிக்காவிட்டாலும் இந்த இரு கலைகளும் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும்.ஆனால், கணினி யுகத்தில் காணாமல் போனவற்றில் இந்தப் பயிற்சி முறை குறிப்பிடத் தக்கது.

இத்தனைக்கும் கணிப்பொறியில் தட்டச்சு முறை பெரிதும் கை கொடுக்கும்.தட்டச்சு பயிற்சியை முறையாகக் கற்ற ஒருவரின் வேகத்துக்கு கணினியில் தட்டச்சு செய்து பழகியவரால் ஈடு கொடுக்கவே முடியாது.அண்மையில் அமெரிக்காவில் நீதிமன்ற நடவடிக்கையைத் தட்டச்சு செய்வதற்கான போட்டி நடைபெற்றது. அதை, சிக்காகோட்ரிப்யூன் என்ற இணையம் தெரிவிக்கிறது. ஒரு பெண்மணி ஒரு மணித்துளியில் 280 ஆங்கிலச் சொற்களை சிறிது கூடப் பிழையின்றித் தட்டச்சு செய்து சாதனை படைத்துள்ளார்.

கணினியின் பிரதான நோக்கமே, எந்த ஆவணத்தையும் விரைவாகப் பூர்த்தி செய்வதுதான். தட்டச்சு முறையாகக் கற்காமல் கணினியில் தட்டச்சு செய்பவரால் வேகமாகத் தட்டச்சு செய்ய இயலாது.முந்தைய காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியவர் மட்டுமே தட்டச்சு கற்க பயிற்சி நிறுவனத்தில் சேரலாம். சில ஆண்டுகளுக்கு முன் தட்டச்சுப் பயிலகங்களை நடத்துவோர் அரசுக்கு வேண்டுகோளை அடுத்து இடைநிலைக் கல்வி படித்தவர்கூட தட்டச்சு பயிலலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

கணினியை ஒப்பிடும்போது, தட்டச்சு செய்வதில் உள்ள சிரமங்களை மறந்துவிட முடியாதுதான்.இருந்தாலும் ஒரே ஒரு மிகப் பெரிய நன்மை, மிக ரகசியமானதை ஒருவர் கணினியில் தட்டச்சு செய்து ஒருகோப்பில் பதிவு செய்துவிட்டு, கணினியில் அழித்துவிட்டாலும் (Delete) பின்னால் வருபவர், ஹார்டு டிஸ்க்மூலம் அவற்றை மீட்க முடியும். அந்த அபாயம் தட்டச்சில் இல்லை.

ஜெர்மனியில் ரகசியமான அரசு ஆவணங்களைத் தட்டச்சில் தயாரிக்கும்படி அண்மையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அமெரிக்க உளவுத் துறை செயல்பாடுகளில் இருந்து தப்பிக்க, இந்த நடைமுறையைக் கொண்டுவருவதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது.

பல நாடுகளின் அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறித்த விவரங்களையும் இன்ன பிற தகவல்களையும் அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்சியான என்.எஸ்.ஏ. திருடி வருவதாக என்.எஸ்.ஏ. முன்னாள் அதிகாரி ஸ்நோடன் கூறியுள்ளார்.

இதை அடுத்து, கணினியில் பதிவு செய்யப்பட்ட தங்கள் நாட்டு ரகசியங்களை சாப்ட்வேர் உதவியுடன் அமெரிக்கா மோப்பம் பிடிக்கிறதா என்பதை அறிய நாடாளுமன்றக் குழுவை அமைத்துள்ளது ஜெர்மனி அரசு. அதன் தலைவராக பண்டஸ்தாக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்தான் அரசு தகவல்களை மின்னணு மூலம் பகிர்ந்து கொள்ளும் சமயத்தில்தான் இதுபோன்ற ரகசியங்கள் களவாடப்படுகின்றன. இதைத் தடுக்க பழையபடி தட்டச்சு முறையில் பதிவு செய்து பகிர்ந்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஆக, என்னதான் பைனரி சங்கேதக் குறி (Binary Code) உலகையே ஆண்டாலும், விரல்கள் நடனமிடும் தட்டச்சுக் கலையை ஒதுக்கிவிடக் கூடாது.நவீன ஆடைகள் இருந்தாலும், வேட்டிக்காகத் தேசமே குரல் கொடுக்கிறது.பிட்சா, பர்கர் என்று உணவகங்கள் மலிந்துவிட்டாலும், ஆப்பக் கடைகளும், இட்லி கடைகளும் அதிகரித்து வருகின்றன.

அப்படி இருக்க, கணினி யுகம் என்றாலும், கரெண்ட் போய்விட்டால் கை கொடுப்பது தட்டச்சுதானே.

தட்டாமல் கைகொடுப்போம் தட்டச்சுக் கல்விக்கு!

டாக்டர். பா. கிருஷ்ணன்