September 25, 2021

தங்க பத்திரம் விற்பனைக்கு வருது தங்கத்தை பணமாக்கும் திட்டமும் அறிமுகம்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 2015–16 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் 28–ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய போது அவர், ‘‘இந்தியாவில் மக்களிடம் 20 ஆயிரம் டன் தங்கம் பயன்படுத்தப்படாமல், வீடுகளில் முடங்கிக்கிடக்கிறது. இந்த தங்கத்தை புழக்கத்துக்கு கொண்டு வந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிற வகையில் தங்க பத்திர திட்டம், தங்கத்தை பணமாக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்’’ என அறிவித்தார்.
goldy-coin
அந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், இவ்விரு திட்டங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர், “மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தங்க பத்திரம் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக பத்திரமாக வாங்கிக்கொள்ள வேண்டும். தங்க பத்திரம் திட்டம், தங்கத்தை பணமாக்கும் திட்டம் ஆகிய 2 திட்டங்களும் மிகவும் பாதுகாப்பானவை. பொருளாதார ரீதியில் ஸ்திரத்தன்மை கொண்டவை.

தங்க பத்திரம் 2 கிராம், 5 கிராம், 10 கிராம் அல்லது இதன் பல மடங்கு எடை அளவுகளில் இருக்கும். தங்க பத்திர திட்டத்தின்கீழ் அதிகபட்சம் ஒருவர் ஒரு ஆண்டுக்கு 500 கிராம் அளவுக்கு (ஆவண வடிவில்) தங்க பத்திரம் வாங்கலாம். இந்த பத்திரங்கள் 5 முதல் 7 ஆண்டுகளில் முதிர்வு அடையத்தக்கவை. இதனால் மத்திய காலகட்ட ஏற்ற, இறக்கத்தினால் பாதிப்பு ஏற்படாமல் முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள். இதற்கான வட்டி விகிதம், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும்.

நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரம் டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதே அளவு தங்கத்தை மக்கள் வாங்கி பயன்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள்.தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை பொறுத்தமட்டில், தங்கத்தை வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்கள் அதை வங்கிகளில் குறுகிய காலத்துக்கு, மத்திய காலத்துக்கு, நீண்ட காலத்துக்கு டெபாசிட் செய்யலாம்.

தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் டெபாசிட் செய்து, விலை ஏற்றத்தினால் ஏற்படுகிற பலனை அடையலாம். அது மட்டுமின்றி டெபாசிட்டுக்கு வட்டியையும் பெற முடியும்.
அந்த வட்டிக்கு வருமான வரிச்சலுகை வழங்கப்படும். மூலதன ஆதாய வரி விலக்கும் உண்டு. குறைந்த பட்சம் 30 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.காலகட்டம் முடிந்து மீட்க வேண்டிய நேரத்தில், தங்கத்தின் உண்மையான மதிப்புக்குரிய தொகையை பெறலாம். குறுகிய கால டெபாசிட் என்றால், தங்கத்தையே திரும்பப்பெறலாம்.

தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின்கீழ் திரட்டப்படுகிற தங்கம் ஏலமும் விடப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பிலும் சேர்க்கப்படும்.மேலும், அசோக சக்கரத்துடன் கூடிய தங்க நாணயம் செய்யவும் பயன்படுத்தப்படும். நகைக்கடைக்காரர்களுக்கு கடனாகவும் கொடுக்கப்படும். இதனால் தங்கத்தை இறக்குமதி செய்வது தேவைப்படாது.” என்று அவர் கூறினார்.