October 19, 2021

டெல்லி நிர்பயா வழக்கு: சிறார் குற்றவாளி விடுதலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!

“நிர்பயா வழக்கு” என்று அழைக்கப்படும் டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட வழக்கில் சிறையில் இருந்த சிறார் பாலியல் குற்றவாளி 3 ஆண்டுகள் தண்டனை முடிந்து இன்று விடுதலையாகவுள்ள நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவி நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்தார்.
delhi dec 20
டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16–ந் தேதி இரவு ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி ஜோதி சிங் 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளானார். இதில் கடுமையாக பாதிக்கப் பட்ட அவர் டெல்லி, சிங்கப்பூர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றும் பலனளிக் காமல் டிசம்பர் 29–ந் தேதி உயிரிழந்தார். உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவனுக்கு 17 வயதே ஆனதால் அவன் மட்டும் சிறார் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான். அவனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

மற்ற 5 பேரில் ராம்சிங் என்பவன் திகார் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டான். மற்ற 4 பேரான வினய், முகேஷ், பவன், அக்ஷய்க்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.குற்றவாளிகள் 6 பேரில் சிறார் கைதிதான், மருத்துவ மாணவியை அதிகம் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. என்றாலும் சிறார் சட்டப்பிரிவு காரணமாக அவன் தூக்கில் இருந்து தப்பி விட்டான். அவனது 3 ஆண்டு தண்டனை காலம் இன்றுடன் முடிகிறது. இதனால் இன்று அவனை விடுதலை செய்ய சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்குள், சிறார் குற்றவாளியை விடு தலை செய்யக்கூடாது என்று டெல்லி ஐகோர்ட்டில் சுப்பிரமணியசாமி மனு செய்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, சிறார் கைதி விடுதலைக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். இதனால் சிறார் குற்ற வாளி இன்று விடுதலையாவது உறுதியாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சிறார் குற்றவாளியின் விடுதலைக்கு இடைக்காலத்தடை விதிக்கக் கோரும் மனுவையும், அவனது விடுதலைக்கு எதிரான மற்றொரு மனுவையும் டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி, நேற்று நள்ளிரவு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூரின் இல்லத்திற்கு சென்று அளித்தார். குற்றவாளியின் விடுதலைக்கு இடைக் காலத் தடை விதிக்க மறுத்த தலைமை நீதிபதி தாக்கூர், அவனது விடுதலைக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்திற்கு விரைந்த ஸ்வாதி, தலைமை நீதிபதியின் உத்தரவு குறித்த ஆவணங்களை பொது பதிவாளரிடம் அளித்தார்.உடனடியாக மூத்த வழகறிஞர் குரு கிருஷ்ணா, தேவ்தத் காமந்த ஆகியோர் நீதிபதி கோயலின் இல்லத்திற்கு (1.30 மணிக்கு) விரைந்தனர்.

இந்த மனுவை (நள்ளிரவு 2 மணிக்கு) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் ஏ.கே கோயல், யு.யு லலித் தலைமையிலான விடுமுறைக்கால அமர்வு, வழக்கை நாளை ஒத்தி வைத்தது. நீதிபதி கோயலின் இல்லத்திற்கு வெளியே நிருபர்களுக்கு ஸ்வாதி அளித்த பேட்டியில், வழக்கு நாளை தள்ளி வைக்கப்பட்டிருப்பதால் அரசும் டெல்லி போலீசாரும் நாளை வரை அவனை விடுதலை செய்யாமல் காத்திருப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார். ஆனால், இன்று மாலை 5 மணிக்கு அவன் விடுதலை செய்யப்படுவது முழுவதுமாக உறுதி செய்யப்பட்டு விட்டது. அதே நேரம் நாளைய வழக்கு விசாரணையின் போது, நிர்பயாவின் பெற்றோருக்கும் மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதிக்கும் சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில் அவன் மீண்டும் கைது செய்யப்படுவானா என்று பிரபல ஊடகவியலாளரான பர்கா தத் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கிடையில், விடுதலையாக இருக்கும் சிறார் குற்றவாளி திடீரென ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளான். கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளிவரும்போது அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், ரகசிய இடத்தில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.