September 27, 2021

டெல்லி தேர்தல்: களமிறங்கும் தேமுதிக வேட்பாளர்கள்!

டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போபோது 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.இந்திய அளவில் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஏற்கனவே போட்டியிட்டுள்ளன. ஆனால் தலைநகர் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த கட்சி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
nov 8 vijayakanth_
டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பெயர்கள் முதலில் அறிவிக்கப்பட்டது.அதன்படி ஜங்புரா தொகுதியில் ஏ. சிவா போட்டியிடுகிறார். வசீர்பூர் தொகுதியில் எஸ்.ஈஸ்வரி, ஜனர்புரியில் சொர்ணம் காளிநாதன், புதுடெல்லி தொகுதியில் ஜி.எஸ்.மணி, கல்காஜி தொகுதியில் ராமு ஆகியோர் தே.மு.தி.க. வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள்.

இவர்களுக்காக டெல்லி மாநில தே.மு.தி.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கட்சி தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். போட்டியிடும் 5 வேட்பாளர்களும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் போட்டியிடுகிறார்கள். இவர்கள் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

ஜங்புரா தொகுதியில் நிற்கும் தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.சிவா, பா.ஜனதா வேட்பாளர் பங்கஜ்ஜெயின், ஆம்ஆத்மி வேட்பாளர் மணிந்தர் சிங்திர் ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார். வசீர்பூர் தே.மு.தி.க. வேட்பாளர் ஈஸ்வரி, பா.ஜனதா வேட்பாளர் மகேந்திர நாட்பால், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பிரவீண்குமார் பீம் ஆகியோருடன் மோதுகிறார்கள்.

ஜனக்புரியில் களம் இறங்கும் தே.மு.தி.க. வேட்பாளர் சொர்ணம் காளிநாதன், பா.ஜனதா வேட்பாளர் ஜத்கீஷ்முரி, ஆம் ஆத்மி வேட்பாளர் ராஜேஸ்ரிஷி ஆகியோரை எதிர்க்கிறார். புதுடெல்லி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மணி, பா.ஜனதா முன்னாள் பிரதேச தலைவர் விஜேந்தர்குப்தா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார். கல்காஜி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ராமு, பா.ஜனதா கூட்டணி கட்சியான அகாலிதளம் அறிவிக்கும் வேட்பாளரையும், ஆம்ஆத்மி நிறுத்தும் வேட்பாளரையும் எதிர்த்து நிற்கிறார்.

இந்நிலையில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 6 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.அதன்படி, மாள்வியா நகரில் ஷர்மிளா, ஆர்கேபுரத்தில் பிரகாஷ், பாலம் தொகுதியில் ரத்தினம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
டெல்லியின் ட்ரி நகரில் சுப்ரமணியன், ரோகிணியில் செங்கோட்டையன் மற்றும் ராஜேந்திரா நகரில் தானப்பன் ஆகியோர் களம் காண்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.