April 1, 2023

டெல்லியை முடக்கிப் போடும் முதல்வர் கெஜ்ரிவால் கைதாகிறார்?!

தமது கடமையைச் செய்ய மறுக்கும் டெல்லி காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியில், காவல் துறையை டெல்லி அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கோரியும் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் தர்ணா போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.இந்த போராட்டத்தால் டெல்லியின் முக்கிய சாலைகள் வாகன நெரிசலில் திக்குமுக்காடுகின்றன. பஸ்களில் செல்லும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகங்களுக்கு செல்ல இயலாமல் திண்டாடி வரும் வேளையில் போதாக்குறைக்கு,டெல்லியின் பிரதான போக்குவரத்தாக கருதப்படும் மெட்ரோ ரெயில் சேவையின் 4 நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான டெல்லிவாசிகள் கடும் அவதிக் குள்ளாகியுள்ளனர்.இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்–மந்திரி கெஜ்ரிவால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
jan 21 - Kejriwal_Police
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, டில்லி போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று, தர்ணா போராட்டம் நடத்தினார். அந்த போராட்டம் தொடர்ந்து இன்றும் நடக்கிறது. முதல்வர் கெஜ்ரிவால் நேற்று இரவு முழுவதும் தெருவிலே தங்கி விட்டார். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்,”ஓர் அரசை சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றம் மூலமாக நடத்தப்பட வேண்டும். மாறாக, எந்த நகரத்தின் வீதிகளிலும் நடத்தப்படக் கூடாது என்பதை கேஜ்ரிவால் கண்டிப்பாகப் புரிந்து கொள்ள வேண்டும்.நாட்டின் தலைநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது டெல்லி காவல் துறையின் கடமை. அவர்களது நடவடிக்கைகளில் ஆளும் ஆத்மி அரசு குறுக்கீடு செய்யக் கூடாது” என்றார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்–மந்திரி கெஜ்ரிவால் மற்றும் மந்திரிகள் அனைவரும் எந்த நேரத்திலும் போலீசாரால் கைது செய்யப்பட்டு அந்த இடத்தை விட்டு அகற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி ஆனந்த் சர்மா, எந்த உயர் பதவி வகிப்பவர் ஆனாலும் சட்டத்தை மீறினால் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இதற்கிடையில் கெஜ்ரிவாலை கைது செய்வதா? அல்லது தர்ணா போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து நள்ளிரவுக்கு பின்னர் அவரையும், மற்ற மந்திரிகளையும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதா? என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே நேற்று இரவு பிரதமர் மன்மோகன்சிங்குடன் இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.