October 16, 2021

டூ வீலர் ரைடர்களுக்காகவே தயாராகி விற்பனைக்கு வந்துள்ள ’ஏர் பேக் சூட்;! – வீடியோ

சர்வதேச அளவில், இந்தியாவில் அல்லது நம் தமிழகத்தில் நொடிக்கு நொடி சாலை விபத்துகள் நடந்து கொண்டுதான் ஒருக்கின்றன். இப்படி தொடர்ந்து விபத்துகள் நடக்க என்ன காரணம்? சாலையா? ஓட்டுநர்கள் தவறா? குடிபோதையில் வண்டிகளை ஓட்டுவதா? அல்லது சாலை விதியை  மீறும் வாகனங்களா? என்பதை யாரும் கண்டறிய முடியாத நிலையில்  வாகன விபத்துகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு சம்பவமாகும் என்பதையும் விபத்துகள் எப்போது எப்படி நடக்கும் என்பதனை யாராலும் கணிக்க முடியாது என்றாலும் விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது நம்முடைய கையில் தான் இருக்கிறது என்பதை முதலில் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

ஆனாலும் கார்களில் அதுவும் கொஞ்சம் விலை உயந்த சொகுசு கார்களில் செல்வோருக்கே அதிகபட்ச பாதுகாப்பு உபகரணங்கள் தற்போது சந்தையில் கிடைத்து வருகின்றது. அதில் பலரும் உபயோகப்படுத்துவது ஏர் பேக் ஆகும். இந்த ஏர் பேக் என்பது பலூன் போன்றதாகும், திடீர் விபத்து ஏற்பட்ட நேரத்தில் அது உடனடியாக விரிந்து டிரைவர் உள்ளிட்ட பயணிகளை காயம் இல்லாமல் காக்க உதவுகிறது. அதாவது இதன் உதவியால் பெரிய விபத்துகளில் சிக்கினாலும் நம்மால் பெரிய அளவில் காயம் இல்லாமல் உயிர் தப்ப இயலும்.

இதனிடையே, மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இருக்கக்கூடிய அதிகபட்ச பாதுகாப்பு உபகரணமே தலைக் கவசம் தான். (இதை கூடா பலர் தலையில் அணியாமல் வாகனத்தில் எக்ஸ்ட்ரா லக்கேஜாக தொங்க வீடுக் கொண்டுக் கொண்டு வருவ வேறு விஷயம்). இதையும் தாண்டி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிதாக பாதுகாப்பு உபகரணங்கள் சந்தையில் ஒன்றுமே வராமலிருந்தது.

இதை கவனத்தில் கொண்டு டூ வீலர் ஓட்டுபரகளுக்கு தற்போது ‘ஏர் பேக் சூட்’ என ஒன்று சந்தையில் அறிமுகமாகி விட்டது. இது கார்களில் உள்ள ஏர் பேக் தொழிநுட்பம் மாதிரியேதான். அதே அளவு பாதுகாப்பை இந்த ஏர் பேக் சூட் ரைடர்களுக்கு வழங்குகிறது. இந்த சூட் ஆரம்பத்தில் ‘மோடோ ஜிபி’ எனப்படும் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்ளும் வீரர்களுக்காக தயாரிக்கப்பட்டு வந்தது. இதன் பயன்கள் சாதாரண ஜனத்துக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தற்போது அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஏர் பேக் சூட் டூ வீலர் ஓட்டுபவர்கள் அணிந்து கொள்ளும் ஜாக்கெட் வடிவில் உள்ளது. இதில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சென்சார்கள் வண்டி ஓட்டுபவர் ஒவ்வொரு அசைவையும் நொடிக்கு நொடி உணர்ந்து கொள்ளும் விதமானது. இந்த ஜாக்கெட் பைக்கில் கனெக்ட் செய்யும் விதமானது அல்ல, இதற்கென பிரத்யேகமாக பேட்டரி உள்ளது. இது ரீசார்சபிள் வகையிலானது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 மணி நேரங்களுக்கு அது ஜாக்கெட்டுக்கு சக்தி வழங்குகிறது. பேட்டரி சர்க்யூட் சென்சார் அடங்கிய முக்கிய வன்பொருளுக்கு (Hardware) சக்தி அளிக்கிறது, அந்த வன்பொருளானது சிறிய அளவிலான காஸ் சிலிண்டர் ஒன்றுடன் இணைப்பு பெற்றுள்ளது.

ஏர் பேக் ஜாக்கெட் அணிந்திருக்கும் ரைடருக்கு ஆபத்து என்பதை உணரும் போது காஸ் சிலிண்டர் ஏர் பேக் உடனடியாக விரிவடைய செய்கிறது. இந்த முழு செயல்முறையும் 25 மில்லி நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் நடக்கிறது. எனவே ஜாக்கெட் அணிந்து விபத்தில் சிக்கும் ரைடர் கீழே அல்லது கூர்மையான பொருள் என எதன் மீது விழுந்தாலும் அவரை காயமின்றி இந்த சூட் பாதுகாக்கிறது. குறிப்பாக் இந்த ஏர் பேக் ஜாக்கெட்டை பயன்படுத்தும் போது விபத்தில் சிக்கினாலும் முதுகுத்தண்டு, மார்பு, இடுப்பு, தோள்பகுதி போன்ற உடலின் முக்கிய பாகங்களை காயமடையாமல் பாதுகாக்கிறது. இதன் மூலம் ஹெல்மெட்டை விடவும் அதிகமான பாதுகாப்பை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்த ஏர்பேக் சூட் அளிக்கிறது. உயிரிழப்பை மட்டுமல்லாமல் காயமின்றி பாதுகாப்பதால் இந்த சூட்டிற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ஏர்பேக் சூட்டின் எடை 800 கிராம்கள் மட்டுமே. எடை குறைவானது என்பதாலும், ஸ்டைலிஷாக இருப்பதாலும் இது விரும்பி அணியும் உபகரணமாக மாறியுள்ளதாம்

அத்துடன் இந்த ஏர்பேக் சூட் தண்ணீர் உட்புகாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் மழையில் கூட இதனை அணியலாம் என்பது சிறப்புமிக்கதாகும். ஆனால் இதன் விலை 1,200 அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 77,000 ரூபாய் ஆகும். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் உயிரையேக் காக்கும் இதற்கு இந்த விலை சரிதான் என்கிறீர்களோ? அதுவும் சரிதான்!