September 20, 2021

டுவிட்டரில் பேஜ் ஓப்பன் பண்ணியது “தாஜ்மஹால்”

இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உள்நாட்டு பயணிகளும் பார்க்க விரும்பும் தாஜ்மஹால் கட்டடத்தின் பளபள பொலிவு ஆக்ராவை சுற்றியுள்ள தொழிற்சாலைகளால் மாச டைந்து வருவதாக கூறப்படும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து வருவதாக அந்த மாநில சுற்றுலா துறை அமைச்சகம் கூறியிருந்தது. ஓர் ஆண்டில் இந்த இடத்தை 4.5 லட்சம் பேர் பார்வையிட்ட நிலையில் அடுத்த ஆண்டில் நான்கு லட்சம் பேர் தான் பார்வை யிட்டுள்ளனர் என்றும் ஒரே ஆண்டில் 15 சதவீதம் பார்வையாளர்கள் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக புள்ளி விவரத்து டன் அமைச்சகம் பட்டியலிட்டு இருந்தது.
tajmahal aug 16
இதையடுத்து சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு உ.பி., அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதில் ஒன்றாக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்கு சமூக வலை தளங்களில் ஒன்றான டுவிட்டர்-ரில் பிரத்யேக கணக்கு தொடங்கப் பட்டுள்ளது. இந்தக் கணக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதைப் பின் தொடர்ந்தனர்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில சுற்றுலாத் துறை பொது இயக்குநர் அம்ரித் அபிஜாத் கூறுகையில், “லக்னௌவில் உள்ள தனது இல்லத்திலிருந்து தாஜ்மஹாலுக்கான அதிகாரப் பூர்வமான ட்விட்டர் கணக்கை மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தொடக்கி வைத்தார்’ என்றார்.

இதுதொடர்பாக உத்தரப் பிரதேச அரசின் முதன்மைச் செயலர் நவ்நீத் செகல் செய்தியாளர்களிடம், “உலகில் உள்ள நினைவுச் சின்னங்களிலேயே முதல் முறையாக தாஜ்மஹாலுக்குதான் டுவிட்டரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தைப் பார்வையிடுபவர்கள் தங்களுடைய தாஜ்மஹால் தொடர்பான நினைவுகளை அதில் பகிர்ந்து கொள்ளலாம். தன் மனைவி, மகனுடன் தாஜ்மஹால் முன்பு நிற்கும் புகைப்படத்தை முதல்வர் அகிலேஷ் யாதவ் அந்தப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்” என்றார் நவ்நீத் செகல்.