December 4, 2021

டாஸ்மாக் வியாபாரம் டபுள் ஆச்சாமில்லே – வீடியோ!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது . இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது . இந்த நிலையில், இன்று சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. எனவே, இன்று ஒரேநாளில் மது விற்பனை ரூ. 140 கோடி முதல் ரூ.150 கோடி எனத் தகவல் வெளியாகிறது. மேலும், சாதாரணமாக தினமும் ரூ.80 கோடி வரை விற்பனையாகும் நிலையில் இன்று வழக்கத்திற்கு அதிகமாக வசூலாகியுள்ளதாக தகவல்.

கொரோனா ஊரடங்கால் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் பல குடும்பங்கள் நிம்மதியாக இருந்து வந்தன. பலர் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ளனர். மது விலக்கு கொண்டு வர இதுதான் சரியான நேரம் என்று பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று கடைகளைத் திறந்தது தமிழக அரசு. மது வாங்குவோருக்கு ஏகப்பட்ட விதிமுறைகளை அறிவித்தாலும் இன்று காலை முதல் அனைத்து மதுக்கடைகள் முன்பும் மக்கள் வரிசையில் நின்று வாங்கிவிட்டார்கள். பல இடங்களில் மதுக்கடைக்கு எதிராகப் போராட்டங்களும் நடந்தன.

இதை எல்லாம் சட்டை செய்யாமல் சகல மது வகைகளும் விறு விறுவென்று விற்றுத் தீர்ந்ததாக மாநிலம் முழுவதும் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன. மாலை ஐந்து மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே ஸ்டாக் காலியாகிவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் ரூ.150 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இன்னும் தலைநகர் சென்னையில் டாஸ்மாக் திறந்தால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.