October 16, 2021

ஜெ-வுக்கு ஆதரவாக இன்று எம்.எல்.ஏ,க்கள்: நாளை கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் தனி கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.இந்தநிலையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீனும் உடனடியாக கிடைக்கவில்லை. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரதம், மனித சங்கிலி போன்ற போராட்டங்களை நடத்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கடும் அதிர்ச்சியின் காரணமாக மாணவிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உயிரையும் மாய்த்துள்ளனர்.
jaya- oct 4
மேலும் வணிகர்கள் கல்லூரி மாணவர்கள், சினிமா கலைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அற வழியிலான போராட்டத்தை மேற்கொண்டு இருக்கின்றனர்.

தற்போது அடுத்தகட்டமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காலை முதல் ஈடுபட உள்ளனர்.இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், பெண் தொண்டர்களும் கலந்துகொள்கின்றனர்.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 170 பேர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்கள். இந்த போராட்டத்தில் மேயர் சைதை துரைசாமி, துணை மேயர், மண்டலக்குழு மற்றும் நிலைக்குழு தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொள்கிறார்கள்.