October 24, 2021

ஜெ. விவகாரத்தில் தப்பான செய்தி வரக் காரணம் என்ன?

அரசு வழக்கறிஞர் பவானி சிங் குளறுபடி செய்தாரா?குழப்பி விட்டாரா அதிமுக வழக்கறிஞர்?தவறிழைத்தனவா ஊடகங்கள்???என்ற சர்ச்சை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது!
edit - oct 8
ஜெயலலிதா உட்பட 4 பேர் பிணை தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயலலிதா உட்பட 4 பேரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்து அந்த எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக முதலில் அளித்திருந்தார். குற்றம் சாட்டப்பட்ட நால்வர்களின் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிவடைந்த நிலையில் “நிபந்தனைப் பிணையில்” 4 பேரையும் விடுவிக்க தமக்கு ஆட்சேபணை இல்லை என்றே தெரிவித்திருக்கிறார். இதனை பவானிசிங் பொதுவான “பிணைக்கு” எதிர்க்கவில்லை என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இது பவானிசிங்கின் குளறுபடி அல்ல. அவர் தெளிவாகவே இருந்திருக்கிறார்.

இரண்டாவது பவானிசிங் நிபந்தனைப் பிணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக வழக்கறிஞர் துரைபாண்டி, அத்தகைய மிக முக்கியமான தருணத்தில் வழக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் தனிப்பட்ட ஒருவரால் தொடரப்பட்டது என்று வழக்கின் ஆரம்பத்தில் இருந்து தொடங்கி படிப்படியாகச் சொல்லிக்கொண்டே வந்து அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்புக்காட்டாததால் நிபந்தனைப் பிணைதான் அளிக்கப்படும் என்றும் ஆனால் அது எத்தகைய நிபந்தனை என்பது தெரியாது என்றும் தெரிவித்த அவர் இறுதியில் சொன்னது இதுதான்…பிணை அளிக்கப்பட்டுவிட்டது என்று நான் கூறமுடியாது. நீதிபதியின் தீர்ப்பில்தான் அது தெரியவரும் என்றும் குறிப்பிட்டார். ஆனால் முதலில் சொல்லவேண்டியவற்றை வரலாற்றுக் கதைகள் போலச் சொல்லி சொல்ல வேண்டிய தகவலை கடைசியில் அவர் சொல்லி முடிப்பதற்குள் அத்தனை ஊடகங்களும் பிணை கிடைத்துவிட்டது என்று Flash செய்யத் தொடங்கிவிட்டன.
இதற்கு இன்னுமொரு முக்கியக்காரணம், ANI செய்தி நிறுவனமும் பிணை அளிக்கப்பட்டுவிட்டதாக வெளியிட்ட செய்தியையடுத்தே அனைத்து ஊடகங்களும் துணிச்சலாக செய்தியை வெளியிட்டன.

எனினும் இந்தக் குளறுபடியில் அவசரப்பட்ட ஊடங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது. இதையெல்லாம்விட செய்தி முகமைகள் எனப்படும் செய்தி ஏஜென்சிக்கள் கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற தவறான தகவல்களை அவசரப்பட்டு வெளியிடுவதும் பின்னர் தவறு என்று சொல்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மாதம்தோறும் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி சந்தாதாரர்களாக இருக்கும் ஊடகங்களுக்கு ஏஜென்சிக்கள் நம்பிக்கைத்தன்மையுடன் சேவைகளை வழங்க வேண்டியது அவசியமாகிறது. காரணம் இது 24 மணி நேர செய்தி ஊடகக் காலம்.

பத்திரிகை ஊடகங்கள் மட்டுமே இருந்த காலத்தில் இதுபோன்ற தவறுகள் நேர்ந்தால் இரவு 9 மணி வரைகூட தவறுகளைத் திருத்திக் கொள்ள கால அவகாசம் இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல.ஊடகங்கள் பொறுமை காக்க…ஏஜென்சிக்கள் கவனம் கொள்ள வேண்டிய தருணம் இது…! நாம் உட்பட.

விஷவா@Vishwaa Viswanaath