March 25, 2023

ஜெ. மரணம் – சசிகலாவிடமும் விசாரிக்க கோரி தீபா கணவர் மனு!

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 3 மாதங்களில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருந்தது.  இதையடுத்து சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கலச மகால் முதல் தளத்தில் ஆணையம் செயல்படுகிறது. இதற்காக அங்கு நீதிமன்ற அறையும், விசாரிக்கப்படுபவர்கள் நிற்கும் கூண்டும் அமைக்கப்பட்டு உள்ளது.  ஜெய லலிதா மரணம் குறித்து தகவல் அளிப்பவர்கள் நேரிலோ, பதிவு தபால் மூலமாகவோ நவம்பர் 22-ந் தேதிக்குள் (நாளைக்குள்) தகவல்களை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வத்திடம் நேற்று பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். பின்னர் மாதவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் , “ஜெயலலிதா வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது ஏன் செயல்படவில்லை?, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், வேலைக்காரர்கள், பாதுகாப்பு காவலர்களிடம் விசாரிக்க வேண்டும். தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றது, சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளித்தது போன்று ஜெயலலிதாவுக்கு ஏன் அளிக்கப்படவில்லை?, ஜெயலலிதாவை பார்க்க வந்த கட்சி தலைவர்களை தடுத்தது ஏன்? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களை மருத்துவ புலனாய்வு துறையினர் மூலம் விசாரிக்க வேண்டும். சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் சி.டி. குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.