October 20, 2021

ஜெ. ஜாமீன் மனு -நாளை விசாரணை!

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை அடுத்த திங்கட்கிழமை ஒத்தி வைத்த நிலையில் இதை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கர்நாடகா ஐகோர்ட்டில் ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, ஐகோர்ட் பதிவாளர் ஏற்றுக் கொண்டதையடுத்து, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை காலை எடுத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
jay -sep30
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கடந்த 27ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக ஜெயலலிதா, கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் ஜாமீன் கேட்டும் தனி மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜாமீன் மனுவை இன்று விசாரித்த விடுமுறைகால நீதிபதி ரத்னகலா, அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதையடுத்து மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆனால், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், ஜாமீன் மற்றும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை உடனடியாக விசாரிக்க கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.கர்நாடக ஐகோர்ட் பதிவாளர் தேசாயிடம், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இந்த மனுவை நேரில் அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட் பதிவாளர் தேசாய், நாளையே இந்த வழக்கை விசாரிக்க பட்டியலிட்டுள்ளார்.மேலும் விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலாவே இம்மனுவை விசாரிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக செயல்பட்ட பவானி சிங் அரசு தன்னை இந்த ஜாமீன் வழக்கிற்கும் அரசு வக்கீலாக நியமித்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

தகவல் உதவி :http://jannalmedia.com/page.php?id=1539