October 16, 2021

ஜெயலலிதா வழக்கில் பாலி நாரிமன் , பவானிசிங்க் ஆஜராக எதிர்ப்பு!

மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் மகன் ரொகின்டன் பாலி நாரிமன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருக்கிறார். எனவே இந்த முக்கியமான வழக்கில் நாளை எப்படி தீர்ப்பு கிடைத்தாலும் அது விமர்சனத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளதால் ஜெயலலிதா ஜாமீன் வழக்கில் பாலி நாரிமன் ஆஜராக கூடாது: தலைமை நீதிபதிக்கு டிராபிக் ராமசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் தொடருவதற்கு ஆட்சேபம் தெரிவித்து கர்நாடக அரசுக்கும், கர்நாடக ஐகோர்ட்டுக்கும் கடிதம் அனுப்பியதுடன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளது தே மு தி க.
jaya oct 15
தே.மு.தி.க. துணை செயலாளர், வக்கீல் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,”ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் தொடருவதற்கு ஆட்சேபம் தெரிவித்து கர்நாடக அரசுக்கும், கர்நாடக ஐகோர்ட்டுக்கும் ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் பவானி சிங் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டுள்ளார். மேலும் பவானி சிங், கர்நாடக அரசின் உத்தரவோ அல்லது உச்சநீதிமன்றத்தின் உத்தரவோ இல்லாமல் நேரடியாக குற்றவாளிகளின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக ஆஜராவதற்கு எந்த சட்ட அங்கீகாரமும் இல்லை.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டால் அந்த வழக்கின் மீதான தீர்ப்பு வெளியானதும் அந்த குறிப்பிட்ட வழக்கறிஞருடைய பணி அந்த வழக்கில் நிறைவடைகிறது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே அரசு தரப்பில் மேல் முறையீடு செய்ய சிறப்பு வழக்கறிஞருக்கு அதிகாரம் உள்ளது.எனவே இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக பவானிசிங்கின் நியமனம் ஏற்கனவே முடிவு பெற்றுவிட்டது. எனவே, கர்நாடகா ஐகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் மீது அரசு தரப்பு வழக்கறிஞராக பவானிசிங் நீடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் கடிதம் ஒன்றை அளித்தார்.அந்த கடிதத்தில், மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் மகன் ரொகின்டன் பாலி நாரிமன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருக்கிறார். எனவே இந்த முக்கியமான வழக்கில் நாளை எப்படி தீர்ப்பு கிடைத்தாலும் அது விமர்சனத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

மேலும் கர்நாடகா ஐகோர்ட்டில் நீதிபதி சந்திரசேகரா, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நிராகரித்த தீர்ப்பில் மனோஜ் நரூலா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரொகின்டன் பாலி நாரிமன் முன்னிலையான அமர்வில் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டியிருக்கிறார்.எனவே ஜெயலலிதாவின் ஜாமீன் கோரும் மனுவின் மீது பாலி நாரிமன் ஆஜராகக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.