September 23, 2021

ஜெயலலிதா தீர்ப்பு! முழு விவரம்!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி இன்று தீர்ப்பு வழங்கினார்.  18 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெறும் 3 நிமிடங்களில் தீர்ப்பின் முக்கிய அம்சத்தை வாசித்து விட்டு சென்றுவிட்டார்.
jaya may 11
சரியாக காலை 11 மணிக்கு நீதிமன்றத்தின் அறை எண் 14க்குள் நுழைந்த நீதிபதி குமாரசாமி, தீர்ப்பை வாசிக்க தொடங்கிய உடன், “சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்” என்றார்.

தொடர்ந்து தீர்ப்பை வாசித்த அவர், “சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்” என்றார்.

மேலும், வருமானத்தைவிட 10 விழுக்காடுக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் அது குற்றமாகும். ஆனால் ஜெயலலிதா வருமானத்தை விட 8.12 விழுக்காடு மட்டுமே கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார்.

இது அனுமதிக்கப்பட்ட அளவுதான். எனவே ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளுக்கும், அரசுத் தரப்பு ஆதாரங்களுக்கும் முரண்பாடு உள்ளது.

வருமான வரி தொடர்பான வாதத்தை கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. வங்கிக் கடன்களை கீழ் நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்று தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.
justice-kumarasamy-
மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு, அரசு தரப்பு, சுப்பிரமணியன் சாமி மற்றும் அன்பழகன் தரப்பு ஆகிய அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு மூன்று கேள்விகள் தனது மனதில் எழுவதாக குமாரசாமி தீர்ப்புப் பக்கங்களில் தெரிவித்திருக்கிறார். அந்த கேள்விகள் இவை தான்…

1. குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் உண்மையிலேயே குற்றவாளிகளா?
2. இவர்கள் 4 பேரும் கூட்டு சதி செய்து சொத்து சேர்த்தார்களா?
3. அபராத தொகைக்காக அசையா சொத்துக்களை கையகப்படுத்துவது, தங்கம் மற்றும் வைர நகைகளை ஏலம் விடுவது, எஞ்சிய தங்க, வைர நகைகளை அரசே பறிமுதல் செய்வது ஆகியவை சட்டப்படி சரியா? தவறா?

இந்த கேள்விகளுக்கு நீதிபதியே பதிலும் அளித்திருக்கிறார்.

“நீதிப்போராட்டம் என்ற போர்வையில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பவர்களை ஊக்குவிக்கக் கூடாது. வருமானத்திற்கு அதிகமான சொத்து என்று சொல்லப்படுபவை குறித்து உரிய விளக்கம் அளிக்க குற்றவாளிக்கு விசாரணை அதிகாரி வாய்ப்பு வழங்க வேண்டும்.

கட்டுமான செலவு

போயஸ் கார்டன் இல்லம், சிறுதாவூர் பங்களா உட்பட, வழக்கில் குறிப்பிடப்படும் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களைப் பொறுத்தவரை வீடுகளில் பதிக்கப்பட்ட மார்பிள்கள், கிரானைட் கற்கள் ஆகியவற்றின் அளவு, விலை ஆகியவை பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை. உயர் தரமான கிரானைட் கற்களும், மார்பிள் கற்களும் பதிக்கப்பட்டதாக பொறியாளர்கள் சாட்சியம் அளித்தார்களே தவிர, அவற்றின் சாம்பிளைக் கொண்டு விலை அறியும் முயற்சி எல்லாம் நடைபெற வில்லை. எல்லாம் ஊகத்தின் அடிப்படையிலேயே மதிப்பு போட்டுவிட்டார்கள்.

திருமண செலவு

சுதாகரன் திருமணத்தில் ஏ.ஆர். ரகுமான் ஒரு மணி நேரம் இசைக்கச்சேரி நடத்தினார். ஆனால் அதற்காக எந்த தொகையும் பெற்றுக் கொள்ளவில்லை. இதை ஒரு வெகுமதியாக கருதி பணம் பெறவில்லை என அவர் குறுக்குவிசாரணையின் போது தெரிவித்திருக்கிறார். திருமணத்தில் சமையல் வேலையைப் பார்த்தவர் தியாகராஜசுவாமி. இவருக்கு சம்பளமாக ரூ.11,850 வழங்கப்பட்டிருக்கிறது. அந்த பணம் சிவாஜி பிலிம்ஸில் இருந்து வழங்கப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

மொத்தமாக திருமணத்திற்காக ரூ.28,67,520 செலவானதாக ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்காக தங்கள் தரப்பில் ரூ.92,00,000 செலவு செய்ததாக சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் மணப்பெண்ணின் தந்தை நாராயணசாமியிடம் விசாரணை நடத்தப்படவில்லை. ஏன் அவரை விசாரிக்கவில்லை என்ற உரிய விளக்கமும் இல்லை. அனைத்து செலவுகளையும் ஜெயலலிதா தான் செய்தார் என்று அரசு தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் இதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை. திருமண செலவுகளை பெண் வீட்டார் செய்வது என்பதுதான் வழக்கம். அதில் அனைத்து வகையான செலவுகளுக்கும் கணக்கு காட்டுவது என்பது சிரமம்.
அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது எழுத்துப்பூர்வமான மனுவில், குற்றவாளிகள் நால்வர் மற்றும் அவர்களின் கம்பெனிகளுக்கு சேர்த்து மொத்தம் 306 சொத்துகள் இருப்பதாக சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த நிறுவனங்கள் சார்பில் ரூ.24 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கி, அசையா சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. வங்கியில் கடன் வாங்குவது என்பது சட்டவிரோதமான செயல் அல்ல.

இந்த வழக்கில் கர்நாடக அரசை எதிர்தரப்பு வாதியாக சேர்க்காததால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கோரிக்கை விடுக்கிறார். கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்துவிட்டனர். உடனே கர்நாடக அரசுதான் முன்வந்து இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரை நியமித்திருக்க வேண்டும். ஆனால் அரசு இதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மேல்முறையீட்டு வழக்கு நான்கு மாதங்களாக நடந்து வரும் நிலையிலும், தங்களை எதிர்தரப்பாக சேர்க்கவில்லை என்பதை கர்நாடக அரசு ஒருமுறை கூட சுட்டிக்காட்டவில்லை. இந்நிலையில் இதை காரணமாக கொண்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.

வழக்கில் கூறப்பட்டுள்ள காலகட்டத்தில் குற்றவாளிகளின் வருவாய் ரூ.9,34,26,053.56 என்று அரசு வழக்கறிஞர் குறிப்பிடுகிறார். கையில் இருக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் ரூ. 24,17,31,274 அளவுக்கு கடன் வாங்கி இருக்கின்றனர் என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஆனால் இந்த தொகையை அரசுத் தரப்பு கவனத்தில் கொள்ளவில்லை. இதுகுறித்து முறையாக விசாரிக்கப்படவும் இல்லை. விசாரணை அதிகாரிகள் வேண்டுமென்றே இதனைத் தவிர்த்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது.
மூன்றாவது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வாதங்கள் அனைத்தும் அரசு தரப்பு சாட்சியங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. கீழ் நீதிமன்ற தீர்ப்பை ஆதரிக்கும் அவர்கள் கட்டுமானம் தொடர்பான சில முறைகேடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். இதுகுறித்து உரிய துறையினர் தனியாக விசாரணை நடத்தலாம். ஆனால் இது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த வழக்கிற்கு பொருந்தாது.

திராட்சை தோட்ட வருமானம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள திராட்சை தோட்டத்தில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கு வருமான வரி செலுத்தப்பட்டிருக்கிறது. அது தாமதமாக செலுத்தப்பட்டது என்பதற்காக அதனை முழுமையாக நிராகரிக்க முடியாது. ஆக திராட்சை தோட்ட வருமானம் ரூ. 46,71,600 என்று கணக்கில் கொள்ளப்படுகிறது.

பரிசுப்பொருட்கள்

வளர்ப்பு மகன் திருமணத்தின் போதும், ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போதும் அவருக்கு ரூ. 2,15,00,000 மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் வந்ததை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். தாமதமாக செலுத்தினாலும் அதற்கு அவர் வருமான வரி கட்டியிருக்கிறார். தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் பிறந்தநாளின் போது பரிசு பெறும் வழக்கம் இருக்கிறது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு பரிசுகள் மூலம் அவருக்கு வந்த வருவாய் ரூ.1,50,00,000 என்று நிர்ணயிக்கிறேன்.” என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இதேபோல சசி எண்டர்பிரைசஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர், சூப்பர் டூப்பர் டிவி ஆகியவற்றின் கணக்கு வழக்குகள் பற்றியும் விரிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட புடவைகள், நகைகள், காலணிகள் குறித்து தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி,

“குற்றம்சாட்டப்பட்டவர்கள் நால்வரும் ஒரே வீட்டில் இருந்திருக்கின்றனர். அவர்களுடன் நிறைய வேலைக்காரர்களும் தங்கி இருந்திருக்கின்றனர். இதில் யாருடைய காலணி எது என தனித்தனியாக பிரித்து இனம்காணவில்லை. எனவே காலணிகளுக்கு நான் எந்த மதிப்பும் போடவில்லை.
உடைகளைப் பொறுத்த வரை 914 பட்டுப்புடவைகள் உட்பட 6195 செட் உடமைகள் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா தனது 18 வயதில் இருந்து நடிகையாக இருந்திருக்கிறார். படப்பிடிப்புக்காக வாங்கப்பட்ட பல உடைகள் படத்தயாரிப்பாளர்களால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு உடைகளின் மதிப்பை கணக்கில் கொள்ளவில்லை.

கட்டடங்கள் கட்ட மொத்தமாக ரூ. 27,79,88,945 செலவானதாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கு காட்டுகிறது. ஆனால் இந்த நீதிமன்றத்தின் மதிப்பீட்டில் ரூ 5,10,54,060 தான் செலவு ஆகியிருப்பதாக தெரிய வருகிறது. எனவே எஞ்சியுள்ள ரூ. 22,69,34,885-ஐ கணக்கில் இருந்து கழித்துவிடுகிறேன்.
தங்க, வைர நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள், கைக்கடிகாரங்கள், பங்குப்பத்திரங்கள் ஆகியவை குறித்த லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கை அப்படியே இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.

ஜெயலலிதா சொத்துக்களை குவித்தார், அதனை மற்ற மூன்று பேரைக் கொண்டு அசையா சொத்துகளாக மாற்றினார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அவர்கள் வங்கியில் இருந்து சுமார் ரூ.25 கோடி கடன்பெற்றதற்கு ஆதாரம் இருக்கிறது. இதுதவிர தனியாரிடமும் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் அவை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவர்கள் 4 பேருமே தனித்தனியாக கடன் பெற்று சொத்து வாங்கியிருக்கிறார்கள். எனவே இதனை குற்றமாக கருத முடியாது.

சதித்திட்டம் என்பது ரகசியமாக தீட்டப்படுவது. ஆனால் இங்கு அனைத்திற்கும் ஆதாரம் இருக்கிறது. சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் ஜெயலலிதாவுடன் ஒன்றாகத் தங்கினார்கள் என்பதாலேயே அவர்கள் சதித்திட்டம் தீட்டினார்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்களின் பணம் சட்டப்பூர்வமான வழியில்தான் திரட்டப்பட்டிருக்கிறது. அதேபோல சட்டப்பூர்வமாகத்தான் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இது பினாமி பரிவர்த்தனை என்பதற்கான எந்த வலுவான ஆதாரமும் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை.

ஜெயலலிதா சினிமா நடிகையாக இருந்தவர். மைனராக இருந்த காலத்தில் இருந்து வருமான வரி செலுத்தி வருகிறார். போயஸ் கார்டன் இல்லமும், நாட்டிய கலா நிகேதனும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது. போயஸ் கார்டனில் பக்கத்தில் இருந்த வீட்டை ஜெயலலிதா ரூ. 8 லட்சத்திற்கு வாங்கினார். இதுதவிர அவர் வேறு எந்த சொத்தும் வாங்கவில்லை. ஆனால் மற்ற மூவரால் ரூ. 6,24,09,120 மதிப்பில் அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டதாக அரசுத்தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. அவர்கள் மூவரால் சுமார் ரூ.3.50 கோடி மதிப்பில் கொடநாடு டீ எஸ்டேட் வாங்கப்பட்டுள்ளது. மொத்தம் அவர்களின் சொத்து மதிப்பு ரூ. 9,34,26,053.56 என அரசுத்தரப்பு சொல்கிறது. ஆனால் குற்றம்சாட்ட நால்வரும் வாங்கியிருக்கும் கடன் தொகை சுமார் 25 கோடி.

குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் கட்டுமானப் பணியில் நிறைய பணத்தை முதலீடு செய்து ஏராளமான அசையா சொத்துகளை வாங்கிவிட்டதாக அரசுத்தரப்பு குற்றம்சாட்டுகிறது. கிட்டத்தட்ட 14 பொறியாளர்கள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் கட்டடத்தின் அளவுகள் பற்றி பேசவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் போதுமான விவரங்களும் இல்லை. அரசு தரப்பு சாட்சிகளான பொறியாளர்கள் உயர்தர மார்பிள்கள் பயன்படுத்தப்பட்டன என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைப் பார்க்கும்போது ரூ. 100 மதிப்புள்ள கற்கள் தான் பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது. அதேபோல இவற்றை கட்ட ரூ. 27,79,88,945 செலவாகி இருக்கும் என லஞ்ச ஒழிப்புதுறை மதிப்பிட்டுள்ளது. ஆனால் கீழ்நீதிமன்ற நீதிபதி இந்த ஆதாரங்களை எல்லாம் முறையாக பார்க்காமல், அவர்கள் சொன்ன தொகையில் 20 சதவீத கழிவு கொடுத்து அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

1995இல் கட்டப்பட்ட கட்டடங்களை 2015இல் மதிப்பீடு செய்வது என்பது கடினமான பணி. ஆனால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் அதற்கு போதுமானதாக இல்லை. அதேபோல கொடநாடு டீ எஸ்டேட்டில் இருந்து ரூ 7 கோடி அளவுக்கு வருவாய் வந்திருக்கிறது. டீ எஸ்டேட்டில் கட்டப்பட்ட கட்டடங்கள், பைப் பதிக்கப்பட்டது ஆகியதற்கான செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்ட விசாரணை அதிகாரிகள், டீ எஸ்டேட் மூலம் கிடைத்த வருவாயை கணக்கில் கொள்ளவில்லை. அதேபோல ஒருநாளைக்கு 100 டன் நெல் அரைக்கும் ராம்ராஜ் அக்ரோ மில்லில் இருந்து வரும் வருவாயும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. கீழ் நீதிமன்ற நீதிபதியும் இதை முறையாக கவனிக்கவில்லை.

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் மற்றும் அவர்களின் நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ38 கோடி அதாவது ரூ. 37,59,02,466
குற்றம்சாட்டப்பட்டவர்களின் மொத்த வருவாய் மதிப்பு சுமார் ரூ35 கோடி அதாவது ரூ.34,76,65,654. சொத்து மதிப்பில் இருந்து வருவாயை கழித்துவிட்டால் மிச்சமிருப்பது சுமார் ரூ.3 கோடி அதாவது ரூ. 2,82,36,812. வருமானத்திற்கு அதிகமாக 8.12% சொத்து இருக்கிறது.

வருமானத்திற்கு அதிகமான சொத்து மதிப்பு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆந்திர அரசு 20 சதவீதம் வரை வருமானத்திற்கு அதிகமான சொத்து இருக்கலாம் என சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்களை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன்.”  என்று தெரிவித்துள்ளார்

மேலும் தீர்ப்பு விவரத்தை ஆங்கிலத்தில் படிக்க கீழே க்ளிக் செய்யவும்:

“அம்மா வழக்கில் குமாரசாமி ஜட்ஜ்மெண்ட்”

 

தீர்ப்பின் தமிழாக்கம் :Parthiban Kumar @ http://parthibanspiece.blogspot.in/2015/05/blog-post_11.html?m=1