October 17, 2021

“ஜெயலலிதாவே பெட்டர்!” – துக்ளக் விழாவில் சோ பேச்சு

துக்ளக் பத்திரிகையின் 46 வது ஆண்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங் களாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த துக்ளக் ஆசிரியரும், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர், நடிகர் என பன்முகங்களைக் கொண்டவருமான சோ ராமசாமி மீண்டும் குணமடைந்து, விழாவில் கலந்து கொண்டார்.தள்ளாத உடல் நிலையிலும், தன் இதயத்துக்கு மிக நெருக்கமான நிகழ்ச்சியான துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சோ வழக்கம் போல் தனக்கே உரிய வகையில் அரசியல் கருத்துகளை உதிர்த்துள்ளார்.
cho jan 15
வழக்கமாக திமுகவுக்கு எதிர்ப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் சோ இந்த நிகழ்ச்சியில் பேசும் போது “சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தமிழக அரசு முதலில் நிவாரணப் பணிகளில் தடுமாறி, பின்னர் சிறப்பாக செயல்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் குறைகள் இருந்தாலும், நிறைகள் அதிகமாக இருக்கிறது. மாநிலத்தின் தேவைக்காக ஜெயலலிதா மத்திய அரசுடன் போராடி வருகிறார். அதேபோல், தமிழகத்தின் முக்கிய தண்ணீர் ஆதாரமான முல்லை பெரியாறு, காவிரி ஆகியவற்றில் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை பெற்று தந்திருக்கிறார். இது இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனை. தமிழகத்தில் குடும்ப ஆட்சி போனதற்கு அதிமுகதான் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.

திமுக ஆட்சியில் சினிமா, அரசியல் என அனைத்திலும் குடும்ப ஆட்சி நடைபெற்றது. மூத்த மகன், இளைய மகன், பேரன், பேத்தி என ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவர் அதிகாரமிக்கவர்களாக இருந்து வந்தனர். அந்த நிலை இப்போது இல்லை. அதுவே பெரிய மாற்றம். அந்தக் குடும்ப ஆட்சி மீண்டும் வந்துவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கருணாநிதி-ஸ்டாலின் பற்றியும் குறிப்பிட்ட சோ “ஸ்டாலின் அரசியலில் திணிக்கப்பட்டவர் இல்லை. நெருக்கடி நிலையைச் சந்தித்தவர். அதிலிருந்து அவரின் அரசியல் பயணம் தொடங்குகிறது. அதனால் ஸ்டாலினிடம் தலைமையைக் கொடுப்பதை விடுத்து, தன்னிடம்தான் ஆட்சி தங்க வேண்டும் என்று கருணாநிதி நினைப்பது சரியில்லை. இதனால் திமுக வாக்குகள் சிதறி, ஆளும்கட்சிக்கு சாதகமாக அமையும். அப்படி அமைய வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்” என்றும் பேசினார்