October 18, 2021

ஜெயலலிதாவின் வழக்கிலிருந்து பல அனுபவங்கள்!முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா நூல்!

”என்னுடைய வழக்கறிஞர் வாழ்க்கையில் சந்தித்த பரபரப்பான வழக்கு, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குதான். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் எனக்கு வழங்கிய பணியை நேர்மையுடன் செய்தேன். வழக்கு விசாரணையின்போது, ஜெயலலிதா தரப்பு பலமுறை வாய்தா வாங்கியுள்ளது. வாய்தா வாங்கப் பட்ட விதத்தையும், இவ்வழக்கு இழுத்தடிக்கப்பட்ட விதத்தையும் பற்றி தனி நூலே எழுதலாம்” என்று ஜெயலலிதா மீதான வழக்கில் ஆஜரான கர்நாடக முன்னாள் அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் பல்வேறு பரபரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
lawyer acharya
கர்நாடக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரலும், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆஜரானவருமான பி.வி.ஆச்சார்யா தனது வாழ்க்கை வரலாற்றை ‘‘ஆல் புரம் மெமரி’’ஆAll From Memory) என்ற பெயரில் புத்தகமாக எழுதி இருக்கிறார்.பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா புத்தகத்தை வெளியிட, மற்றொரு உயர் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால் பெற்றுக்கொண்டார்.

இந்த சுயசரிதையில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து சுமார் 14 பக்கங்களும், 30-க்கும் மேற் பட்ட பின் இணைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. அதில் அவர் எழுதி இருக்கும் தகவல்களின் சுருக்கம்ithoo:

என்னுடைய வழக்கறிஞர் வாழ்க்கையில் சந்தித்த பரபரப்பான வழக்கு, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குதான். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் எனக்கு வழங்கிய பணியை நேர்மையுடன் செய்தேன். வழக்கு விசாரணையின்போது, ஜெயலலிதா தரப்பு பலமுறை வாய்தா வாங்கியுள்ளது. வாய்தா வாங்கப் பட்ட விதத்தையும், இவ்வழக்கு இழுத்தடிக்கப்பட்ட விதத்தையும் பற்றி தனி நூலே எழுதலாம். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்தி வாய்தா வாங்கினார்கள். அது பற்றிய நூலுக்கு ‘வாய்தா சட்டம்’ என பெயர் சூட்டலாம். ஆனால் அந்த நூலை படித்து எதிர்காலத்தில் குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

அதேபோல இந்த வழக்கில் நான் நேர்மையாக செயல்பட்டதால் அவருடைய ஆதரவாளர்கள் என்னை தொலைபேசியில் பல முறை மிரட்டினர். சில முறை நேரிலும் மிரட்டினர். மேலும் இவ்வழக்கிலிருந்து என்னை ராஜினாமா செய்யச்சொல்லி பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்தது. இதனால் அப்போதைய கர்நாடகா பாஜக அரசும் எனக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.

இதுமட்டுமல்லாமல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் என் மீது அவதூறு வழக்குகளை தொடுத்தார்கள். லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் அளித்தார்கள். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் ஜெயலலிதாவின் வழக்கிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். அதே நேரத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் பொய் என நீதிமன்றம் சொல்லும் வரை அமைதி காத்தேன்.

எனது நேர்மைக்கு கிடைத்த பலனாக, என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது. அதன் பிறகு வெவ்வேறு வழிகளில் எனக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அளவுக்கு மீறிய அழுத்தத்தின் காரணமாக ஜெயலலிதாவின் வழக்கில் இருந்து ராஜினாமா செய்தேன்.

சொத்துக் குவிப்பு வழக்கு நடந்துக்கொண்டிருந்தபோது ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வர் ஆனார். அதனால் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். அவர்கள் அச்சத்தின் காரணமாகவே அவ்வாறு பல்டி அடித்தனர்.அதேபோல வழக்கை நடத்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் அணுகுமுறையிலும் நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் முறையாக வழக்கை நடத்த தவறினார்கள். மொத்தத்தில் ஜெயலலிதாவின் வழக்கிலிருந்து பல அனுபவங்களை பெற்றுக்கொண்டேன்.என்று ஆச்சார்யா கூறியுள்ளார்.