October 25, 2021

ஜெயலலிதாவின் படம் அரசு அலுவலகங்களில் இருக்கட்டும்! – கருணாநிதி அறிக்கை!

”அரசு அலுவலகங்களிலுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை எடுக்க வேண்டுமென்றோ அவரது படத்தை எடுக்கா விட்டால் என் படத்தை மாட்ட வேண்டுமென்றோ பிரச்னையில் ஈடுபட வேண்டாம்” என்று திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
karuna nov 15
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை ஒன்றில்,”கிரிமினல்களிடம் பரிவு காட்டக் கூடாது என்று நீதித் துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்களே? மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த, உச்சநீதிமன்ற நீதிபதி இக்பால் தலைமையிலான, உச்சநீதிமன்ற அமர்வு, கிரிமினல்களுக்கு, அவர்கள் செய்த குற்றங்களின் அடிப் படையில், முறையான தண்டனை வழங்க வேண்டியது, நீதிமன்றங்களின் கடமை. குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை, நீதிமன்றங்கள் பாதுகாக்கவில்லை எனில், அவர்கள் தனிப்பட்ட முறையில், பழிவாங்கும் செயல்களில் ஈடுபடலாம். தண்டனை வழங்கும் விஷயத்தில், நீதித் துறைக்குத் தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதை மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் அமல்படுத்த வேண்டியது நீதிபதிகளின் கடமை. குற்றங்களுக்கு ஏற்ற தண்டனை வழங்குவதன் மூலமே, நீதிபதிகள் தங்களின் பாரபட்சமற்ற, நேர்மையான நடவடிக்கைகளை உறுதி செய்ய முடியும். கிரிமினல்கள் விஷயத்தில், அதிக பரிவு காட்டினால், அது, நீதித் துறைக்கு தீங்கு விளைவிப்பதோடு, பொதுமக்கள் மத்தியிலும் அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடும் என்று தெரிவித்திருக்கிறது.

தமிழகத் தொழில் முதலீட்டாளர்களை மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க வருமாறு, மேற்கு வங்க முதல்வர் சார்பில் அழைப்பு விடுக்க பிரதிநிதிகள் குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்பி வைத்ததாகச் செய்தி வந்திருக்கிறதே? யானை இளைத்தால் எலி கூட எட்டி உதைக்கும் என்பது பழமொழி. அந்த நிலைதான் தமிழ்நாட்டிற்கும் இப்போது ஏற்ப ட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்து தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த நேரத்தில், அதுபற்றி எதிர்க் கட்சிகள் கேள்வி கேட்டவுடன், தமிழக அரசு சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. எப்போது அந்த மாநாட்டைக் கூட்டப் போகிறார்கள் தெரியுமா? அடுத்த ஆண்டு, மே மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் அந்த மாநாடு நடைபெறப் போகிறதாம். 2016ம் ஆண்டு மே தமிழகத்தில் சட்டப்பேரவைக்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த அழகில் 2015 மே மாநாடு நடத்தி, அதனால் ஏதாவது பயன் ஏற்படுமா? எனவே என் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்பதைப் போல, நாங்களும் சர்வதேச முதலீட்டாளர்களை அழைத்தோம் என்று சொல்லிக் கொள்வதற்காக இந்த அறிவிப்பு இன்று செய்யப்பட்டுள்ளது.

நம் மாநிலத்தில் புதிய தொழில்களைத் தொடங்குகிறார்களோ இல்லையோ, லாபத்தோடு இயங்கி வந்த நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகள், தொழிலாளர்களைத் தெருவில் நிறுத்தித் தவிக்க விட்டு ஓடுகின்றன. ஏன், தமிழக அரசோடு தொழில் தொடங்குவதற்காக ஒப்பந்தம் செய்து கொண்ட பல நிறுவனங்களே தங்கள் தொழில்களைத் தொடங்கியதாக இன்னும் செய்தி வரவில்லை. இதற்கெல்லாம் காரணம், நமக்கு நாமே தேடி வரவழைத்துக் கொண்ட தலைவலி என்று நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன கூற முடியும்? நஷ்டத்தில் செயல்படும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் கூறியது பற்றி? எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்பனை செய்வதிலேயே கவனத்தைச் செலுத்து கிறது. பொதுத் துறை நிறுவனங்கள் இயங்குவது லாபத்தை மட்டும் ஈட்டுவதற்காக அல்ல. பொதுத் துறை நிறுவனங்களை அரசே உதவி செய்து நடத்துவது என்பது, வேலையில்லாதவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான நோக்கமாகும். எனவே, மத்திய பா.ஜ.க. அரசு, குறிப்பாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு முக்கியத்துவம் தராமல், அந்தத் தொழிற்சாலைகளைக் காப்பாற்றிட முன்வர வேண்டுமென்று வலியுறுத்து கிறேன்.

பெருங்களத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் அறையில் உங்களுடைய படம் இருப்பது குறித்து, அதிமுகவினர் பேப்பர்வெயிட் கல்லை, திமுக உறுப்பினர் மீது எறிந்து மண்டையை உடைத்து விட்டதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே? நானும் அந்தச் செய்தியினைப் படித்தேன். அங்கேயுள்ள செயல் அலுவலர் அறையில் இன்றைய முதல்வரின் படத்தை மாட்டாமல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்திருக்கிறீர்களே என்று திமுகவினர் கேட்ட போது, தங்களுக்கு அது பற்றி உத்தரவு வரவில்லை என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். முன்னாள் முதல்வரின் படம் அங்கே இருக்கலாம் என்றால், என்னுடைய படத்தையும், முன்னாள் முதல்வர் என்ற முறையில் அங்கே மாட்ட வேண்டுமென்று திமுகவினர் கூறியிருக்கிறார்கள்.

அப்போது தான் அதிமுக உறுப்பினர்களும், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் அந்த அறையில் நுழைந்து திமுகவினர் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அதில்தான் திமுக உறுப்பினர் புகழேந்தி என்பவர் காயமடைந்திருக்கிறார். இந்தப் பிரச்னை குறித்து நான் திமுகவினருக்குக் கூற விரும்புவது என்னவென்றால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை எடுக்க வேண்டுமென்றோ, அவருடைய படத்தை எடுக்காவிட்டால் என்னுடைய படத்தையும் அங்கே புதிதாக மாட்ட வேண்டுமென்றோ பிரச்னையில் ஈடுபட வேண்டாம். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதால் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் இழந்த ஜெயலலிதாவின் படம் விதிமுறைக்கு மாறாக இவ்வாறு அரசு அலுவலகங்களில் இருக்க வேண்டுமென்று அதிமுகவினர் விரும்பினால் இருந்து விட்டுப் போகட்டும். அதைப்பற்றி பொதுமக்களே புரிந்து கொள்வார்கள். ”என்று கருணாநிதி கூறியுள்ளார்.

பட உதவி “ outlook