October 24, 2021

ஜெயம் ரவி-யின் பூலோகம் என்ன மாதிரி படம்?

டிவியில் வரும் wwf விளையாட்டைக்கூட நான் பார்க்கமாட்டேன்..மனுஷனை மனுஷன் கொடூரமா கத்திக்கிட்டே, காட்டு அடி அடிக்கறதும் அதை ஒரு கும்பல் வெறியோட வேடிக்கை பார்க்கறதும், அதுக்கு ஊர்ப்பட்ட ஸ்பான்ஸர்ஸ் விளம்பரம் செய்யறதும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.பூலோகம் என்ன மாதிரி படம்ன்னு ஒரு ஐடியாவும் இல்லாமல்தான் போனேன்.பரம்பரை பரம்பரையாக குத்துச் சண்டையைத் தவம் போலக் கற்று, உள்ளூர்ப் போட்டிகளில் கலந்துகொள்ளும் இரு பிரிவு களுக்கு இடையிலான போட்டியும் பழிதீர்க்கும் வஞ்சமும், அதைத் தன் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் தொலைக்காட்சி சானல் அதிபரின் வியாபாரத் தந்திரமும், அதை மிகவும் தாமதமாக அறிந்துகொண்டு முறியடிக்கும் கதா நாயகனின் சாமர்த்தியமும் தான் பூலோகம்.

boologam-

முதல் பாதியில் ஜெயம் ரவியின் நடிப்பு அசத்தல்..என்றால், இரண்டாவது பாதியில்.. ஆஹா..!பாக்ஸிங்கில் ஒருத்தனை ஜெயிக்கணும்ம்ன்னு ஆக்ரோஷமா இருப்பது விளையாட்டு, ஆனா கொல்லணும்ன்னு துடிக்கறது வஞ்சம் , நீ என் புருஷனக் கொல்லணும்ன்னு துடிக்கறே, வேண்டாம் பூலோகம்..என்று கண்ணீருடன் தன் கணவருக்காக ரவியிடம் மன்றாடும் ஸ்டெல்லா கேரக்டர் அருமை..!

முதல் பாதியில் ஜெயம் ரவியின் அட்டகாசம் எந்த அளவுக்கு எரிச்சலை உண்டாக்கு கிறதோ அதே அளவுக்கு இரண்டாவது பாதியில் அவரின் மனமாற்றம் கண்ணீரை வரவழைக்கிறது. பொன்வண்ணன், சண்முகநாதன், இன்னொரு பாக்ஸர் ஆறுமுகம் கேரக்டரில் வரும் நடிகர், அவர் மனைவி ஸ்டெல்லா,.இரு பக்கத்து நண்பர்கள், ஆறுமுகத்தின் குட்டிப்பையன் , வட இந்திய பாக்ஸர் குரு தயாள், அமெரிக்க பாக்ஸர் ஜார்ஜ் கேரக்டரில் நடித்தவர்கள் எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.திரிஷாவும் இருக்காங்க.

பேராசை பிடித்த சானல் வியாபாரி..தீபக் ஷா.வாக பிரகாஷ் ராஜ்..அவரைப்பார்க்கும் போதெல்லாம் செம்ம கடுப்பைக் கிளப்புவதே அவர் நடிப்புக்கு வெற்றி. போட்டி என்று வரும்போது இரண்டு பக்கமும் சண்டைக்கோழியாக சிலிர்த்துக்கொண்டு செய்யும் யுத்தமும்,ஸ்போர்ட்ஸ் சானல் வியாபாரியால் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் இரு பக்கமும் கைகோர்த்துக்கொண்டு நியாயம் கேட்கும் உள்ளூர் மக்களின் மனப்பாங்கும் அழகு..!

சினிமா முடிந்து வெளியே வரும்போது என் இரண்டு தாடைகளும் வலிக்கறாமாதிரியே ஒரு ஃபீலிங்.. அப்படி ஒரு கும்..கும்ம்ம்ன்னு…சத்தம் இரைச்சல்..! ஆனாலும் இந்த பூலோகம் வேற மாதிரி ஒரு உலகத்தை நம் கண்முன் காட்டுவது
என்னவோ நிஜம்.!

ஒருமுறை பார்க்கலாம்.

#பூலோகம்..‪#‎நிஜலோகம்‬

Selvi Shankar