October 18, 2021

ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம்: மோடிக்கு அதிகரிக்கும் ஆதரவு!

அண்மையில் 193 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐ.நா.சபையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘மனதையும்-உடலையும், சிந்தனையையும்-செயலையும், கட்டுப்பாட்டையும்- மனநிறைவையும், மனிதரையும்-இயற்கையையும் ஒன்றிணைத்து, ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வுக்கு நலம் பயக்கும் யோகா கலையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில் ஒவ்வொரு ஆண்டின் ஜூன் மாதம் 21-ம் தேதியையும் சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார்.
modi yoga
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ’இந்தியாவின் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்யும் வகையில் சர்வதேச யோகா தினமாக ஆண்டின் ஒரு தேதியை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக, இந்தியாவுக்கான ஐ.நா.சபையின் நிரந்தர தூதரகத்தின் வாயிலாக வடிவமைக்கப்பட்டுள்ள மாதிரி வரைவு அறிக்கையின் மீது ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.இந்த ஆலோசனைக்கு பின்னர் அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் சுமார் 130 நாடுகள் ஜூன் மாதம் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க ஒப்புதல் அளித்தன.

இந்நிலையில், ஜி-20 நாடுகளில் பங்கேற்பதற்காக மியான்மரில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஐரோப்பிய யூனியனின் பிரதமர் ஹெர்மன் வான் ராம்புய் ‘சர்வதேச யோகா தினம் தொடர்பான உங்களது முன்முயற்சியை ஐரோப்பிய யூனியன் ஆதரிக்கின்றது’ என்று தெரிவித்தார்.

28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியனும் சர்வதேச யோகா தினம் தொடர்பான மோடியின் கருத்துக்கு இன்று ஆதரவு தெரிவித்துள்ளதால், 193 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐ.நா. சபையில் இந்த கருத்துக்கு 158 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன என்பதால் அடுத்த (2015) ஆண்டிலிருந்து ஜூன் மாதம் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா.சபை விரைவில் அறிவிக்கும் என்றும், இது சர்வதேச அளவில் மோடியின் கருத்துக்கும், செல்வாக்குக்கும் கிடைத்த வெற்றி என்றும் கருதப்படுகின்றது.