September 26, 2021

ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல்!

தி.மு.கழக தலைவர் மு.கருணாநிதி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அவர் மறைவு காரணமாக 2019, ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடந்த 5 மாநில தேர்தலுடன் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருடைய தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டதால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதை தொடர்ந்து காலியாக இருக்கும் 2 தொகுதிகளுக்கு விரைவாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கே.கே. ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 7ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது. அதன் படி திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. மற்ற தொகுதிகள் அனைத்துக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது ஏன் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

விவசா‌யிகள்‌ நிறைந்த திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான சட்டமன்றத் தொகுதி. இங்குள்ள தியாகராஜசுவாமி கோயில் திருவாரூருக்கு பெயர் சேர்க்கும் அதே நேரத்தில் சங்கீத மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் தியாகராஜர், முத்து ஸ்வாமி தீக்ஷிதர், ஷியாமா சாஸ்திரிகள் அவதரித்த திருத்தலம் என்ற பெருமையும் திருவாரூருக்கு உண்டு. திராவிட இயக்கத்தின் தாக்கம் ‌அதிகம் நிறைந்த தொகுதி இது. விவசாயத்‌ தொழிலா‌ளர்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ‌கட்சியும் இத்தொகுதியில் தனி செல்வாக்கு பெற்றுள்ளது.

திருவாரூர் வட்டம் மற்றும் குடவாசல் வட்டத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் 1962 ஆம் ஆண்டு நடை பெற்ற சட்டமன்றத் தேர்தலை தவிர்த்து பிற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சியும், திமுகவுமே வெற்றி பெற்றுள்ளன. ஆண் ‌வாக்காளர்களை‌ விட பெண் வாக்காளர்களை அதிகம் கொண்ட தொகுதி திருவாரூர்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்போது திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ‌அத்தேர்தலில் தமிழகத்திலேயே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையும் கருணாநிதிக்கு கிடைத்தது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை 68ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.