“சைல்ட் லைன்’ அழைப்புகள் அதிகரிக்குதுங்கோ!

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு தீர்வு காணும் விதத்தில், “சைல்ட் லைன்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தல் உட்பட பல்வேறு சித்ரவதைக்குள்ளாகும் சிறுவர், சிறுமிகள், சைல்ட் லைன் அமைப்பினரை நாடி வருவது அதிகரித்துள்ளது. போதைக்கு அடிமை, குடும்ப பிரச்னை, கள்ளத் தொடர்பு உட்பட பல்வேறு பிரச்னைகளில் சிக்கியுள்ள பெற்றோர், குழந்தை களை சரிவரக் கவனிப்பதில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களின் எதிர்காலத்தை எண்ணி,கல்வி உட்பட பல்வேறு தேவைகளுக்கு, சைல்ட் லைன் அமைப்பினரின் உதவியை தேடி வரும் அவல நிலை உருவாகியுள்ளது.
child line
முன்னதாக 2013-14ல் பொது இடங்களில் சுற்றித் திரிந்த சிறார்களை மீட்கக்கோரி 189 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இது மூன்று மடங்கு அதிகரித்து 2014-15ம் ஆண்டில், ஜூன் வரை மட்டும், 625 புகார்கள் வந்துள்ளன. இந்த அழைப்பின் கணக்கு, சிறார்கள் மீதான கவனம் குறைந்துள்ளதை வெளிப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுக்காக புகார் அளிக்கவும் ஆய்வு செய்யவும், சமூக பாதுகாப்பு துறை சார்பில் பல குழுக்களாக அதிகாரிகள் செயல்படும் போதும், சிறார்களை பணயம் வைத்து நடக்கும் குற்றச்சம்பவங்கள், நடந்து கொண்டு தான் இருக்கின்றன. எனவே, பொது இடங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை, தீவிரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ‘ரயில்வே ஸ்டேஷனில், தீக்காய தழும்புகளுடன் ஒரு சிறுவனை பட்டப்பகலில் வைத்து பிச்சையெடுத்த சம்பவம், சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைபோல, பல மடங்கு துன்புறுத்தல் குழந்தை தொழிலாளர்களுக்கு நடக்கிறது. சிறார்கள் கடத்தப்படுவதும், பொது இடங்களில் பிச்சையெடுக்க வைப்பதும் சாதாரண நிகழ்வாகிவிட்டது. எனவே, பஸ் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சிறார்களை கடத்தும் கும்பல் பிடிபட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ரு தெரிவித்தனர்.