September 18, 2021

சேவை வரி செலுத்தாவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை – ப. சிதம்பரம் எச்சரிக்கை

“கல்வியை தவிர சேவையை சந்தைபடுத்தக்கூடிய எதற்கும் சேவை வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பலரும் தங்களது வருமானத்துக்கு ஏற்ற வரியை செலுத்துவது இல்லை. முறையாக வரி செலுத்த துவங்குபவர்களும், சில காலத்தில் இடையிலேயே வரி செலுத்துவதை நிறுத்தி விடுகின்றனர். வரி செலுத்துபவர்களும் செலுத்தாமல் இருக்கும் மற்றவர்களை பார்த்து அடுத்த முறை வரி செலுத்தாமல் இருந்து விடுகின்றனர்.அவர்கள் தங்களை அறிவாளிகளாக நினைத்து வரி செலுத்துவதில் இருந்து தப்பித்து கொள்ளப் பார்க்கின்றன.யாருக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல. அதே நேரத்தில் சேவை வரி கட்டாதவர்கள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது “என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
nov 10 - p chidambaram
மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தானாக முன்வந்து சேவை வரி செலுத்துவதை ஊக்கப்படுத்தும் திட்டம் குறித்த கருத்தரங்கில் அவர்,”உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டில்தான் வருமான வரி, சொத்து வரி, சேவை வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. வரி செலுத்தாதவர்களிடம் இந்தியா மட்டுமே மென்மையாக நடந்து கொள்கிறது.

17 ஆண்டுகளுக்கு முன்பு சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது, சுமார் 17 லட்சம் பேர் தானாக முன்வந்து வரி கட்ட முன்பதிவு செய்தனர். ஆனால், அவர்களில் 7 லட்சம் பேர் மட்டும் வரி செலுத்தினர். 10 லட்சம் பேர் வரி கட்டவில்லை. அதிலும் பலர் தொடர்ந்து கட்டாமல் பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். வரி கட்டாதவர்கள் தங்களை அறிவாளியாக நினைத்துக் கொள்கின்றனர். நமது பக்கத்து வீட்டுக்காரர் கட்டுவதில்லை. நாம் மட்டும் ஏன் கட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த மனப்பான்மை மாற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு சேவை வரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்துவது அவசியமானது.

சேவை வரி கட்ட வேண்டியவர்கள் யார் யார் என்பதை மத்திய அரசு கண்காணித்து வைத்துள்ளது. வரி கட்ட வேண்டியவர்களின் நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு), வங்கிக் கணக்குகள் ஆகியவை நிதி அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுகிறது.

வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சேவை வரி முழுவதையும் வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தானாக முன்வந்து சேவை வரி கட்டுவதற்கான திட்டத்தை சேவை வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அனைவரும் சேவை வரியைச் செலுத்த வேண்டும்.

சேவை வரி கட்டாத சிலர் கைதான பிறகு வரி கட்டுதல் அதிகரித்துள்ளது. யாருக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல. அதே நேரத்தில் சேவை வரி கட்டாதவர்கள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று தெரிவித்தார் ப. சிதம்பரம்.