September 25, 2021

செல்பி எடுப்பவரின் குண நலம் தெரியுமா?

மொபைல் போன்களில் கேமிரா வரத் தொடங்கியதும், செல்பி என்று தங்களைத் தாங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பழக்கமும் வேகமாக பரவத் தொடங்கியது. அதிலும் பேசுபவர் முகத்தை பார்த்தபடி பேசும் வீடியோகால் வந்த பின்பு நிலைமை மோசமானது. இதையடுத்து மொபைல் போனின் பின்பக்கம் இருந்த கேமிரா வசதி, கூடுதலாக முன்பக்கமும் உருவாக்கப்பட்டது. அதே வேளையில் ஸ்மார்ட் போன்கள் மூலம் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியும் வந்தது. இதை வைத்துக் கொண்டு நம்மவர்கள் தங்களைத் தாங்களே செல்பி எடுத்து பகிர்ந்து கொண்டார்கள். தற்போது இது ஒரு பேஷனாக மாறிவிட்டது.
selfi 1
உலகின் முதல் செல்பி 1850-லேயே எடுக்கப்பட்டு விட்டது. புகைப்படக்கலையின் தந்தை என்று சொல்லப்படும் ஸ்வீடனைச் சேர்ந்த ஆஸ்கர் ரெஜ்லாண்டர்தான் இதை எடுத்தது. இந்த செல்பி படம் சமீபத்தில் ஏலத்திற்கு விடப்பட்டு, அது 70 ஆயிரம் பவுண்ட் வரை ஏலம் போனது. செல்போன், பேசுவதற்கு என்ற நிலைமாறி, செல்பி எடுப்பதற்கு என்ற நிலை வந்துவிட்டது. இதற்காக தரமான முன்பக்க கேமிரா அமைக்கப்பட்ட மொபைல்கள் தற்போது விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் செல்பி குறித்து ஓர் ஆய்வு வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற் கொண்டுள்ளனர். அதன் முடிவுகள் தான் செல்பி பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் பெண்கள் தான். அதனால் தான் பெண்கள் அதிகமாக செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். அதன் மீது பைத்தியமாக உள்ள இவர்கள், தங்களது இயல்பைக் கடந்து மேம்பட்ட தோற்றத்தை வெளிக்காட்ட நினைக்கிறார்கள். செல்பி அதிகம் எடுப்பவர்கள், தங்களது வேலையை இழக்கும் அபாயம் உண்டு என்று அந்த ஆய்வு நிரூபித்துள்ளது. பொதுவாக வேலைக்காக ஆட்களை தேர்வு செய்யும் போது சமூக வலைதளங்களில் பதிவாகி இருக்கும் செல்பிக்கள் மூலம் அவர்களின் இயல்பை தெரிந்து கொள்ள முடிவதாக மனிதவள மேம்பாட்டாளர்கள் தெரிவிக் கிறார்கள்.

செல்பி எடுத்து வலைத்தளங்களில் பகிர்பவர்கள் ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாமல், வெளித் தோற்றத்தின் மூலம் மட்டுமே அனைத்தையும் எதிர்பார்ப்பவராக இருப்பர். அவர்கள் கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவர்களாகவும் இருப்பார்கள். செல்பிகள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் மேல் அதிகாரிகள் மூலம் சந்தேகக்கண்ணோடு அணுகப்படுவார்கள் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஓஹியோ மாகாண பல்கலைக்கழகம் மேற்கொண்ட இன்னொரு ஆராய்ச்சியில் செல்பி புகைப்படத்திற்கு அடிமையானவர்கள் சுயநலக்காரர்களாகவும், உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும், பச்சாதாபம் அற்றவர்களாகவும் விளங்குவது தெரிய வந்துள்ளது.18 முதல் 40 வயதிற்குட்பட்ட 800 பேரின் சமூக வலைதள செயல்பாடுகளை வைத்தும், ஆளுமைப் பண்புகளை நிறுவுவதற்கான உளவியல் கேள்விகளுக்கு பதில் எழுதச்செய்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது.
selfi 2
ஆய்வு குறித்து பேராசிரியர் ஃபாக்ஸ் ”செல்பி எடுப்பவர்கள் சுய மோகம் கொண்டவர்கள் என்பது சாதாரண விஷயம் தான். ஆனால் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அவர்கள் சராசரியை விட அதிகமான சமூக விரோத பண்புகளை கொண்டிருப்பதும், தன்னையே காட்சி பொருள் போன்று பார்ப்பதும் தான்” என்றார். மேலும் இது போன்ற நடவடிக்கைகள் அதிக பிரச்சனைகளை உண்டாக்கும் என்று எச்சரித்துள்ளார். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் மூன்றில் இரண்டு பேருக்கு ”பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்” எனப்படும் மன நோய் இருப்பதும், அவர்கள் அதிக அளவு செல்பி எடுக்கும் இயல்புடையவர்கள் என்பதையும் மனநல மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

தன்னுடைய தோற்றம் குறித்த கற்பனையும், பயமும் செல்பி எடுப்பவர்களிடம் அதிகமாக காணப்படுவதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர், செல்பியில் தன் தோற்றம் திருப்திகரமாக இல்லாததால் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் அந்த மருத்துவர் கூறியுள்ளது இந்தப் பிரச்சனையின் வீரியத்தை நமக்கு உணர்த்துகிறது.
.