சென்னை சுடுகிறது, பொசுக்குகிறது என்று கேலிப் பேசுபவர்கள் எல்லாம் கோழைகள்!

சென்னை பெருநகரத்தின் வெயில் உக்கிரம் பற்றி பலரும் புலம்பியவாறே இருப்பதை தொடர்ந்து படிக்கிறேன். இன்னும் பலர் பெங்க ளூரு வெப்பம், சென்னையைக் காட்டிலும் அதிகம் இல்லை என்று எழுதுகிறார்கள். சரியாக பூகோளம் படிக்காமல் எப்படி இவர்கள் இப்படி எழுதுகிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. சென்னை நகரம் கடல் மட்டத்தோடு சமமாக இருக்கும் ஒரு நகரம். பெங்களூரு கடல் மட்டத்தில் இருந்து 850 அடிகள் உயர்ந்திருக்கும் நகரம், கிட்டத்தட்ட அது ஒரு குட்டி மலைப் பிரதேசம். இத்தனை அடி தூரம் கடல் மட்டத்தில் இருந்து உயரமாக இருக்கும்போதே பெங்களூரு இத்தனை சுடுகிறது என்றால், சென்னையைப் போல, கடல் மட்டத்திற்கு சமமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பொசுக்கிவிடும்.
edot apr 24
உலகின் எந்தப் பகுதியைக் காட்டிலும் சென்னை எனக்கு உயர்வானது. இந்த நகரத்தை அதன் ஆவணங்களில் இருந்து அணு அணுவாக ரசித்துப் பார்கிறேன். நான் கும்பகோணத்தில் இருந்து சிறுவனாக இருந்தபோது, காஞ்சிபுரம் வந்து அங்கிருந்து சென்னையில் குடியேறினோம். இன்று கிழக்குக் கடற்கரை சாலை என்றழைக்கப்படும் இடமும், பழைய மாம்மல்லபுரம் என்றழைக்கப்படும் இடமும் எப்படி இருந்தது என்பதை கண்கூடாக பார்த்தவன் நான். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து, பொறியியல் கல்லூரியில் சேர, நுழைவுத் தேர்வு எழுத, சோளிங்கநல்லூரில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கு வந்த நினைவு இப்போதும் எனக்குள் இருக்கிறது. இது நடந்தது பத்து ஆண்டுகளுக்குள்ளாக, பழைய மாமல்லபுரம் சாலை ஒரு சோலை வனமாகவே இருந்தது. ஆறு மணிக்கு மேல் இந்த சாலையைக் கடக்கவே அத்தனை அச்சமாக இருக்கும். என்னுடைய ஆசிரியர்தான் தேர்வு முடித்ததும் வந்து என்னை அழைத்து சென்றார்.

ஓடைகளும், சிற்றாறுகளும், சமவெளிகளும், சதுப்பு நிலக்காடுகளும் கலந்து ஒரு பெரும் வளமான பூமியாக இருந்த இடம் தற்போது கட்டடக் காடுகளாக இருக்கிறது. இருந்த அத்தனை மரங்களையும், குளங்களையும் அழித்து, மென்பொருள் நிறுவனத்தைக் கட்டிவிட்டு, நகரம் சுடுகிறது, உக்கிரம் தாங்கமுடியவில்லை, பெங்களூருதான் சிறப்பாக இருக்கிறது என்றால், எனக்கு எங்கேயோ எரிகிறது. இத் தனை உக்கிரமான காலத்திலும், அடையாறு, ஆளுநர் வீடு இருக்கும் அந்தப் பகுதிகளில் ஒரு மாலை நேரம் கொஞ்சம் உலாவந்துப் பாருங்கள், அங்கு வீசும் அந்த குளிர்க் காற்றை நீங்கள் வேறெங்கும் உணர முடியாது.

இந்த நகரம் முழுக்க பெரும் காடுகள், மரங்கள், ஆறுகள், ஓடைகள் என வளமாக இருந்த ஒன்றுதான். நகர வளர்ச்சி என்கிற பெயரில், இங்கே முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் இங்கே குடிய மர்ந்த மென்பொருள் வல்லுனர்களாலும், இந்த நகரம் அதன் பொழிவை இழந்து, வளத்தை இழந்து வளர்ச்சி என்கிற பெயரில் வெயிலைக் கக்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கடல் பிரதேசம் என்பதால், மனிதர்களை அவ்வப்போது குளிர் தென்றால் தாலாட்டவும் செய்கிறது. பெங்களூரு குளிர்கிறது என்றால், அங்கே சென்று வசித்துக் கொள்ளுங்கள். அதற்காக சென்னை சுடுகிறது, பொசுக்குகிறது என்று இங்கே வாழ்பவர்களை கேலிப் பேசாதீர்கள். ஒரு வகையில் நீங்கள் எல்லாம் கோழைகள், இந்த நகரத்தின் வெம்மையை உணராத உங்கள் நிழல் கூட இங்கு இருக்க வேண்டாம். கிளம்புங்கள்,

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை இந்த நகரத்தின் ஆறுகளும், முகத் துவாரங்களும் பெரும் உயிர் சேதத்தில் இருந்து காப்பாற்றியது. இதே போன்ற ஒரு வெள்ளப்பாதிப்பு பெங்களூருவில் ஏற்பட்டால், தப்பித்து உயிர் பிழைக்க இந்த நகரம் நோக்கித்தான் வரவேண்டியிருக்கும். அப்போதும் இந்த வெம்மைதான் உங்களை காத்து நிற்கும். இந்த நகரில் வாழ்வதற்காகவே, அமெரிக்கா, லண்டன் என்று வந்த அனைத்து வாய்ப்புகளையும் உதறிவிட்டு பெருமிதமாக இங்கே வாழ்கிறேன். இது எங்கள் நகரம். பிடிக்காதவர்கள் தள்ளிப்போங்கள், தூற்றாதீர்கள்..’

Arun Mo