April 14, 2021

சென்னையில் புறநகர் ரயில்கள் ஓடப் போகுது!

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பேருந்து, ரயில், விமான சேவைகள் முடங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 9,500 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் தற்போது அமலில் உள்ளது.

இதனிடையே பொதுமக்களின் நலன் கருதி, கடந்த மாதம் முதல் தமிழக முழுவதும் குறைந்தளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் சிறப்பு ரயில்களும், சென்னையில் மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் சென்னை புறநகர் ரயில்கள் மட்டும் இயக்கப்படாமல் இருந்தன.

இந்தநிலையில், அத்தியாவசிய பணியாளர்களுக்காக மட்டும் வரும் 5ஆம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயிலில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 2 ஆம் கட்ட சோதனைகளுக்கு பிறகே புறநகர் ரயிலில் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மட்டுமே ரயில் டிக்கெட் வழங்கப்படும். பயண அனுமதிக்கான அடையாள அட்டை இருந்தால்தான், ரயில் நிலையத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவார்கள்.

புறநகரில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.